Tuesday, July 23, 2013

நெல்லை மாவட்டம் :-சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி !

சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற 
ஆடித் தவசுக் காட்சியில், பக்தர் வெள்ளத்தின் நடுவே, 
சங்கரநாராயணர் சப்பரத்தை, 
தங்கச் சப்பரத்தில் வலம் வந்த கோமதி அம்பாள். (உள்படம்) 
தவக்கோலத்தில் தவசு மண்டபத்தில் எழுந்தருளிய கோமதி அம்பாள்
 
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு  சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித் தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தவசுக் காட்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. சுமார் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இக் கோவிலில் ஆடித் தவசுத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தவசுக் காட்சி 11-ஆம் நாளான திங்கள்கிழமை நடைபெற்றது
.
இதையொட்டி, காலையில் பட்டுப் பரிவட்டம், அலங்காரத்துக்குரிய பொருள்கள் சகிதம், சங்கரநாராயண சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சுவாமி-அம்பாள், சந்திரமெüலீஸ்வரர், 3 உற்சவ மூர்த்திகளுக்கும் கும்பம் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி-அம்பாளை வழிபட்டனர்.

சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு பகல் 12 மணிக்கு கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார். மேளதாளத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் மேல ரத வீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு அம்பாள் எழுந்தருளினார். அங்கு  அவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சுவாமி, சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதிக்கு வந்தார். அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். தவசுக் காட்சிக்காக தெற்கு ரத வீதியில் 2 சிறப்புப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை மலர்கள், இளநீர், வாழைக்குருத்து போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தவசுக் காட்சி: மாலை 5.52 மணிக்கு தவசுப் பந்தலுக்கு வந்த சங்கரநாராயணர்  வெண்பட்டு அணிந்திருந்தார். அவரது முகத்துக்கு நேராக திரைபோடப்பட்டிருந்தது. அப்போது, ஏற்கெனவே தவசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த கோமதி அம்பாள், 6.06 மணிக்கு புறப்பட்டு சங்கரநாராயணர் எழுந்தருளியிருந்த பந்தலின் எதிர்ப் பந்தலுக்கு வந்தார். பச்சைப் பட்டு அணிந்திருந்த அம்பாள், சங்கரநாராயணரை 3 முறை வலம் வந்து தனது பந்தலுக்குத் திரும்பினார். அவருக்கு தேங்காய், பழம் வழங்கப்பட்டு பட்டுச் சேலை சாத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சங்கரநாராயணர் முகத்துக்கு நேராகப் போடப்பட்டிருந்த திரை  விலக்கப்பட்டது. அப்போது ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, மாலை 6.26 மணிக்கு சங்கரநாராயணர் திருக்கோலத்தில் அம்பாளுக்குக் காட்சிக் கொடுத்தார்.  இருவருக்கும் ஒருசேர தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 11 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி,  சங்கரலிங்க சுவாமியாக கோமதி அம்பாளுக்குக் காட்சிக் கொடுத்தார். இக் காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

கோவிலுக்குள்ளும், தவசுக் காட்சி நடைபெற்ற இடத்திலும் பக்தர்கள் செல்ல மிகவும்  சிரமப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாகச் செல்ல போலீஸார், என்எஸ்எஸ் மாணவர்கள், ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள், தொண்டு நிறுவனத்தினர் உதவினர்                                                                                     

நன்றி :- தினமணி, 23-07-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.