Tuesday, July 23, 2013

தமிழகத்தில் சந்தா வசூலிக்கும் ஆட்டோ தொழிற்சங்கங்கள் : தீர்த்து வைக்க எஸ்.வி. இராமதுரை !

சென்னையில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்தத் தொகையை வழக்குச் செலவினங்களுக்காக மனுதாரரும், வழக்குரைஞருமான எஸ்.வி. ராமதுரையிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி ராமதுரை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது. அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரியில் அவர் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவை கடந்த மே 6-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், "ஜூலை 6-ஆம் தேதிக்குள்   ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி, அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.எம். லோதா, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ராமதுரையின் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, "ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், விருப்பத்துக்குத் தகுந்தவாறு பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்று சுட்டிக்காட்டினார். 

அதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி "இந்த விஷயத்தில்,  இதுவரையுள்ள நிலவரம் குறித்து ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த நான்கு வார அவகாசம் கேட்கப்பட்டுள்ளது' என்றார்.

அதையடுத்து பேசிய நீதிபதிகள், "ஏற்கெனவே அளித்த இரண்டு மாதங்களில், ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

இப்போது மீண்டும் நான்கு வாரங்கள் அவகாசம் கோருவதால் என்ன நடக்கப்போகிறது? இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி செயல்படாததால், தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்தத் தொகையை மனுதாரரிடம் (ராமதுரை) அவரது வழக்குச் செலவினங்களுக்காகத் தர வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

மேலும் அவகாசத்துக்கு அனுமதி: பின்னர் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த நான்கு வார அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நன்றி :- தினமணி, 23-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.