Saturday, July 20, 2013

வால்பாறையில் பட்டப்பகலில் உலா வந்த சிறுத்தை: பொதுமக்கள் பீதி


வால்பாறையில் வன விலங்குகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் புகும் காட்டு யானைகள் ரேஷன் கடைகள், குடியிருப்புகளை இடித்து தள்ளுகின்றன.

ரேஷன் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு ஆகியவற்றை தங்கள் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொள்கின்றன. சில சமயங்களில் புதருக்குள் மறைந்து நின்று அந்த வழியாக செல்வோரின் உயிரையும் பதம் பார்க்கிறது. தேயிலை தோட்டத்தை விட்டு அகல மறுக்கும் யானைகளால் தேயிலை பறிப்பு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வால்பாறை கூட்டுறவு காலனி அருகே பட்டப்பகலில் சிறுத்தைப்புலி ஒன்று ரோட்டைக்கடந்து சென்றதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். ரோட்டை கடந்ததும் தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள புதருக்குள் பதுங்கிக்கொண்டது.

சிறுத்தையை பார்த்து வெலவெலத்து போன பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வனத்துறையின் உதவியை நாடினர்.

தகவல் கிடைத்த மறு நிமிடமே வால்பாறை வன அலுவலர் கிருஷ்ணசாமி தலைமையில் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுத்தைப்புலியின் கால்தடம் பதிவான பகுதியை நோக்கி சென்றனர். அங்குள்ள புதருக்குள் சிறுத்தை இல்லை.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் சிறுத்தைப் புலி வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என வன ஊழியர்கள் தெரி வித்தனர். கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பட்டப்பகலில் சிறுத்தைப் புலி ரோட்டை கடந்து சென்ற சம்பவம் வால்பாறை பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறையில் காமராஜ் நகர், துளசிங் நகர், கல்லறைத்தோட்டம், தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் புதர்கள் அதிகம் உள்ளன. இவற்றில் சிறுத்தை மற்றும் வன விலங்குகள் பதுங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அவற்றை உடனே வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                                        

மாலைமலர், 20-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.