Saturday, July 6, 2013

எல்லா ஜாதியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள் -ஆனந்த் டெல்டும்டே, மகாராஷ்டிரா

அம்பேத்கர் சிந்தனைகள், தலித் அரசியல், சாதியம், வர்க்கப் போராட்டம், உலகமயமாக்கல் என்று அடித்தட்டு மக்களோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் குறித்து எண்பதுகள் தொடங்கி விரிவாக எழுதியும் பேசியும் வருபவர் டாக்டர் ஆனந்த் டெல்டும்டே. தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான மகாராஷ்டிர எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர், செயற்பாட்டாளர். அம்பேத்கரின் பேரனும் ஆவார். தற்சமயம் ஐஐடி கோரக்பூரில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அவுட்லுக் உள்ளிட்ட பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். இவருடைய சமீபத்திய புத்தகம், The Persistence of Caste. ஆனந்த் டெல்டும்டேயுடன் மருதன் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ்வடிவம் இது.  ஆழம் அக்டோபர் இதழில் இடம்பெற்ற இந்தப் பேட்டி தமிழ்பேப்பர் வாசகர்களுக்காக இங்கும் வெளியிடப்படுகிறது.

 http://www.tamilpaper.net/?p=6903

சாதிகள் எப்படித் தோன்றின?

தற்போதைய கங்கை சமவெளியில் (ஆரியவர்தா), குடியரசுகள் மறைந்து முடியாட்சிகள் உருவான காலத்தில் சாதி முறை தோன்றியிருக்கலாம். கிட்டத்தட்ட புத்தர் பிறந்த காலகட்டம் அது. அதற்கு முன்புவரை, வர்ணப் பிரிவினைதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. வர்ணம் இருந்தபோது சாதிகள் ஏன் தோன்றின என்னும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. முடியாட்சியின் தேவைக்காக என்று பதிலளிக்கலாம். நிதி நிர்வாகம், ராணுவம், கைவினைத் தொழில், உற்பத்தி, உழைப்பு என்று துறை வாரியாக புதிய பிரிவுகளை உருவாக்கி மக்களை அவற்றில் ஈடுபடுத்த சாதிகள் உதவியிருக்கலாம்.

முடியாட்சி காலத்தில், புதிய நிலங்களைத் தொடர்ந்து கைப்பற்றியும், காடுகளைத் திருத்தியும் செல்வம் சேர்க்கப்பட்டது. அவ்வாறு செய்யும்போது, நிலங்களை இழந்த மக்களுக்கு தூய்மையற்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டனர்.

தற்போதுள்ள நிலைக்கு சாதிமுறை வளர்வதற்கு சில நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. கிமு 2 தொடங்கி கிபி 3ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், மௌரிய, சுங்கப் பேரரசுகள் சிதறியபோது, சமூக நிலையின்மை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மனுஸ்மிருதி உருவானது. சாதியப் படிநிலைகள் நிலைபெற்றன. மீறுபவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

ஆக, வர்ணங்கள் நிலைபெற்ற சமூகத்தில் இருந்தே சாதிகளும் தோன்றின. ஆனால் புதிது புதிதாக தோன்றிய சாதிகளைச் சரியான படி வரிசையில் நிறுத்துவது இயலாமல் போனது. மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் சாதிகள்கூட தங்களுக்குள்தான் சண்டையிட்டுக்கொள்கின்றவே தவிர அடிப்படை சாதியக் கட்டமைப்பை ஒருபோதும் எதிர்த்ததில்லை. அந்த வகையில், உட்புறச் சண்டைகள் காரணமாகச் சில சாதிகள் மறைந்துபோயின; சில உடைந்து போயின; புதிதாக வேறு சில சாதிகள் தோன்றின. ஆனால், அடித்தளம் அப்படியே இருக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் மூலம், தன்னைத் தானே நிர்வகித்துக்கொள்ளும், தன்னைத் தானே ஒழுங்குபடுத்திக்கொள்ளும் ஒருவகை நெகிழ்ச்சித் தன்மை சாதிக்கு ஏற்பட்டது.

சாம்ராஜ்ஜியங்கள் மாறின. அந்நிய ஆட்சிகள் ஏற்பட்டன. அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பௌத்தம், ஜைனம் போன்ற கருத்தாக்கங்கள் வளர்ந்தன. போர் மற்றும் படையெடுப்புகள் மூலம் புதிய நிலப்பரப்புகள் இணைத்துக்கொள்ளப்பட்டன. புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. வர்த்தகம், மூலதனம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அனைத்தையும் கடந்து, சாதி முறை நிலைத்து நின்றது.

ஒவ்வொரு சாதியும் அடுக்குகளில் மேலே ஏறுவதற்காகப் போராட வேண்டியிருந்தது. தொடர்ச்சியாக இப்படிப்பட்ட போராட்டங்கள் மேலாதிக்கத்துக்காக நடைபெற்றன. இந்தப் பண்புகளே சாதிக்குத் தேவைப்படும் பலத்தை அளிக்கின்றன என்று நினைக்கிறேன். இத்தனை காலம் சாதி நீடித்து நிற்பதற்கும் இனியும் நீடித்து நிற்பதற்கும் இந்தப் பண்புகளே காரணம். நிலைமையை மாற்ற ஒரே வழி, சாதிகளை முற்றிலுமாக அழித்தொழிப்பதுதான்.

பிராமண ஆதிக்கம் என்னும் கருத்தாக்கமே தவறு என்கிறார்கள் சிலர். அப்படியொன்று இருந்ததேயில்லை என்றும் வாதிடுகிறார்கள். வேறு சிலரோ 2000 வருடங்களாக பிராமண ஆதிக்கம் நிலவிவந்ததாகச் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வர்ண அமைப்புமுறை தொடங்கிய காலம் முதலே பிராமணர்கள் உயரிய பீடத்தில்தான் இருந்தார்கள். அறிவின் வலிமையை அவர்கள் ஏகபோகமாக்கிக்கொண்டார்கள். கடவுளின் பிரதிநிதிகள் என்றும் தங்களை அழைத்துக்கொண்டார்கள். எப்போது மழை பெய்யும், எப்போது அறுவடை செய்யலாம் போன்ற கேள்விகளுக்கு விடை காண பிராமணர்களையே நம்பியிருந்தார்கள் விவசாய மக்கள். அவர்களிடம் ஏதோ விசேஷ சக்தி இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். பிராமணர்களின் ஆதிக்கம் இந்த நம்பிக்கைகள் காரணமாக மேலும் அதிகரித்தன.

அதற்காக பிராமணர்களின் ஆதிக்கத்தை யாருமே கேள்வி கேட்கவில்லை என்று சொல்லமுடியாது. பரசுராமனின் புராணம் மூலம் சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் போட்டி நிலவியதை அறியமுடிகிறது. அதே போல், சமுதாயாத்தில் ஏற்பட்ட சில முக்கிய மாற்றங்கள் (ஆங்கிலம், நிர்வாகம் ஆகியவை) பிராமணர்களின் அதிகாரத்தை ஆட்டம் காண வைத்தன. ஆனால், அவர்கள் புதிய சூழலக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக்கொண்டார்கள். மேலாதிக்கம் செலுத்துவதற்கு தோதான தகுதிகளை வளர்த்துக்கொண்டார்கள்.

ஜோதிர்பா புலே காலம் தொடங்கி அடித்தட்டு மக்கள் மேற்கொண்ட போராட்டம் பிராமணர்களின் செல்வாக்கை அசைத்தது. இன்று, பிராமணர்கள் ஓரளவுக்கு தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர் என்றாலும் பழைய காலத்தின் நிழல்போல் அவர்கள் அதிகாரம் சுருங்கிவிட்டது.

அம்பேத்கர் குறிப்பாக பிராமணர்களை விமரிசித்தாரா அல்லது மேலாதிக்கம் புரிந்த அனைவரையுமா?

அம்பேத்கர் பிராமணியத்துக்கு எதிரானவர், பிராமணர்களுக்கு அல்ல. சாதியை வைத்து மக்களை அவர் அடையாளப்படுத்தியதில்லை. எந்தவொரு சாதியிலும் பிராமணர்கள் இருக்கமுடியும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஏன், தலித்துகளின் மத்தியிலும்கூட பிராமணீயம் இருக்கமுடியும். இப்போது இதனை நாம் கண்முன்னால் காண்கிறோம். அம்பேத்கரை ஆதரித்த பலருள் பிராமணர்களும் உயர் சாதியினரும் அடங்குவர் என்பதையும் அவரை எதிர்த்தவர்களில் சில தலித்துகளும் இருந்தனர் என்பதையும் நாம் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

சாதி முறையைக் களைந்துவிட்டு இந்து மதம் தழைத்திருப்பது சாத்தியமில்லையா?

இந்து மதத்தால் சாதிகளைக் களையமுடியாது என்பதைக் கண்டறிந்தபிறகே அம்பேத்கர் அதனைத் துறந்துவிட்டு பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். இந்து மத மறை நூல்களைச் சார்ந்து சாதிகள் இன்று தழைக்கவில்லை. தேர்தல்கள், அரசியல் சாசனத்தின் ப்ரொவிஷன்ஸ் போன்ற நவீன அமைப்புகள் சாதிக்குத் தீனி போடுகின்றன. மதமாற்றத்தால் சாதியை ஒழிக்கமுடியவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் சாதி பரவியுள்ளது. சாதியின் இயல்புகள் விநோதமானவை. சாதிகளை முற்றாக அகற்றும்வரை அவை வளர்ந்துகொண்டுதான் இருக்கும்.

தென் மாவட்டங்களில், தலித் என்னும் அடையாளத்தை மக்களால் சரிவரப் புரிந்துகொள்ளமுடியவில்லை. செப்டெம்பர் 2011 பரமக்குடி கலவரத்தைத் தொடர்ந்து அங்கும் பிற பகுதிகளிலும் உள்ள மக்களிடம் நான் உரையாடியபோது அவர்கள் சொன்ன ஒரு விஷயம் இது. எதற்காக எங்கள்மீது ஒரு புதிய பெயரைத் திணிக்கிறீர்கள்? எந்த வகையில் இந்தப் பெயர் எங்களுக்கு உதவும்? இதுபோன்ற கேள்விகளை எப்படி எதிர்கொள்வது?

சாதிய அமைப்பில் தலித் என்றொரு பிரிவு இல்லை. தீண்டத்தகாதவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட பெயர் இது. ஒடுக்கப்பட்ட வகுப்பினர், ஹரிஜன் (காந்தி கொடுத்த பெயர் இது) போன்ற அடையாளங்கள் போட்டியிட்டுக்கொண்டிருந்தபோது அடித்தட்டு மக்கள் தலித் என்னும் பெயரைத் தங்களுக்கானதாக தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். பகுதியளவில் தலித் என்பது வர்க்கப் பெயரும்கூட. பாபாசாகேப் அம்பேத்கரின் தலைமையின் கீழ் திரளும் அனைத்து தீண்டப்படாதவர்களையும் குறிக்கும் பெயரும்கூட.

பரமக்குடியில் சில தலித் பிரிவினர் தங்களை தலித் என்று அழைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை நான் அறிவேன். ஏன் இவ்வாறு அவர்கள் நினைக்கிறார்கள்? நான் தலித் அல்ல என்று சொல்வதன்மூலம் பிற தலித் சாதியனரைவிட நான் மேலானவன் என்னும் மேன்மை நிலையை அடைய விரும்புகிறார்கள். இந்த மனநிலை சாதீய ரீதியிலானது. நல்லவேளையாக எல்லோரும் எப்படி நினைக்கவில்லை என்பது ஆறுதலளிக்கும் சங்கதி.

பரமக்குடியில் நடத்தப்பட்ட தலித் படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் நானும் பங்குபெற்றுள்ளேன். பெரும் மக்கள் கூட்டத்தில் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடன் பல விஷயங்களை விவாதிக்கமுடிந்தது. நீங்கள் எழுப்பிய கேள்வியும் அதில் இடம்பெற்றிருந்தது. அவர்களுக்கு நான் அளித்த விளக்கம் இதுதான். ‘ஒரு தலித்தாக தன்னை உணர்வதன்மூலம் பல்வேறு பிரிவினர் ஒருகுடையின் கீழ் ஒன்றிணையலாம் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.’ அம்பேத்கர்மீது அவர்களுக்கு மதிப்பு இருந்ததால், இந்த வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏற்காதவர்களிடம் நாம்தான் மனம்விட்டு உரையாடவேண்டும். ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்கமுடியும் என்று நம்புகிறேன்.

சாதிகள், கிளைச் சாதிகள் என்று பலவாறாகப் பிரிந்திருக்கும் அடித்தட்டு மக்களை தலித் என்னும் ஒற்றை அடையாளம் ஒன்றுபடுத்திவிடும் என்று நினைக்கிறீர்களா?

வர்க்கத்தின் அடிப்படையில் அடித்தட்டு மக்கள் ஒன்றுதிரள்வதற்கு, வர்க்கத்தின் அடிப்படையில் தங்கள் அரசியலை அவர்கள் உருவாக்கிக்கொள்வதற்கு தலித் என்னும் அடையாளம் முதல் படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், அப்படி நடைபெறகூடாது என்று பல சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இட ஒதுக்கீடும் அப்படியான ஒன்றாக ஆகிவிட்டது. வசதி படைத்தவர்களுக்குத்தான் இந்த ஏற்பாடு மேற்கொண்டு உதவுகிறது. தலித் சாதியினரிடையே இட ஒதுக்கீடு பகைமையை ஏற்படுத்தியுள்ளது. முதல் மோதல், ஆந்திராவில் மள்ளர்களுக்கும் மடிகர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இப்போது கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் மோதல்கள் பரவிவிட்டன.

அரசாங்கமும் தன் பங்குக்கு இந்தப் பிரிவினையை வளர்த்துவிடுகிறது. ஒவ்வொரு கிளை சாதியிலும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து வளர்த்துவிடுவதன்மூலம் சாதியும் உடன் சேர்ந்து வளர்கிறது. தலித் மக்கள் இதனை எதிர்த்திருக்கவேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இதனை விரும்பத் தொடங்கிவிட்டார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு தலித் அரசியல் என்ன செய்திருக்கிறது?

பல விஷயங்களைச் சாதித்துக்கொடுத்திருக்கிறது. சுயமதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை அளித்தது. சுயமரியாதை உணர்வை ஊட்டியது. இடஒதுக்கீட்டையும் அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு இடத்தையும் பெற்றுத் தந்தது. அரசின் கவனத்தை அவர்கள்மீது திருப்பியது. ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இன்று தலித் அரசியலின் ஆற்றல் குறைந்துவிட்டது என்பதுதான் உண்மை. நான் முன்பே சொன்னபடி, இடஒதுக்கீட்டின் பலன்களை ஏற்கெனவே வசதியாக இருப்பவர்கள்தான் அனுபவிக்கிறார்கள். உலகமயமாக்கல் அடித்தட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. தனியார்மயமாக்கலின் விளைவாக பொதுத்துறைகளில் ஆள்குறைப்பு ஏற்பட்டுள்ளதால் இடஒதுக்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது. தரமான கல்வி மறுக்கப்படுவதால் இளைய சமுதாயத்தினர் முறைசாரா தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஊதிய பாதுகாப்பு இல்லை. குறைவான ஊதியமே கிடைக்கிறது.

தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்க இன்று அவர்களுடைய தலைவர்கள் தயாராக இல்லை. காரணம் அவர்கள் தரகர்களாக மாறிவிட்டார்கள். தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகிறார்கள்.

நிலைமை மாறவேண்டுமானால், மக்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை வைத்து மீண்டும் இயக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டும். வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு போராட்டம் தொடங்கப்படவேண்டும்.

பேட்டி : மருதன்
.

0 comments:

Post a Comment

Kindly post a comment.