Tuesday, July 23, 2013

அதிகரிக்கும் ஆன் - லன் சூதாட்டம் ! வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படுமா ?


ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சை குறித்த செய்திகள் ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் நடைபெறும் மோசடிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆன்லைனில் ரம்மி, கேசினோ, லாட்டரி உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் மூலம் நாளொன்றுக்குப் பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த 30-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதே போல மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் இது போன்ற சூதாட்ட வலைத்தளப் பக்கங்களையும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் இணையதளத்தைப் பயன்படுத்தும் சுமார் 200 கோடிப் பேரில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பொழுதுபோக்குக்காகவே அவற்றைப் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டைப் பொருத்தவரை சுமார் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிக அளவில் சமூக வலைத்தளப் பக்கங்களே பயன்படுóத்தப்படுகின்றன.

அதற்கு அடுத்தபடியாக பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு வலைத்தளப் பக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலமே பெரும்பாலானவர்கள் பணத்தைப் பறிகொடுக்கின்றனர்.

தனி நபர் தகவல்கள் திருட்டு: ஆன்-லைனில் ரம்மி விளையாட வேண்டுமானால், உங்களின் பெயர், வயது, வங்கிக் கணக்கு எண், கணக்கு வைத்துள்ள வங்கியின் விவரம், தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.

ஒரு வலைத்தளப் பக்கத்தில் உறுப்பினராக சேர முதலில் ரூ.100-லிருந்து ரூ.500-வரை செலுத்த வேண்டும். அதைத் தவிர ஒவ்வொரு முறை விளையாடும்போதும் ரூ.25-லிருந்து ரூ.20 ஆயிரம் வரை பந்தயம் கட்ட வேண்டும்
.
இந்த தொகை அனைத்தும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்-லைன் பரிமாற்றத்தின் மூலம் சம்பந்தப்பட்ட வலைத்தளப் பக்கத்தின் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும். விளையாடும் போது பணத்தை மட்டும் இழந்தால் பரவாயில்லை. ஒருவருடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு, சமூக விரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.

அறக்கட்டளை பெயரில் மோசடி:-

பணம் செலுத்தி ஆடும் சூதாட்ட வலைத்தளப் பக்கங்களின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்க முடியாது. எனவே சமூக நல அறக்கட்டளை எனக் கூறி வங்கிக் கணக்கு தொடங்கி, இந்த வலைதளப் பக்கங்களின் மூலம் வரும் பணத்தை, அந்தக் கணக்கின் கீழ் பரிமாற்றம் செய்கின்றனர்.

இவற்றில் பெரும்பாலானவை பேமெண்ட் கேட் வே எனப்படும் பண பரிவர்த்தனை செய்யும் வலைதளப் பக்கங்களாகும்.

இதன் மூலம் அவர்களுக்கு வரிவிலக்கும் கிடைத்து விடுகிறது. இத்தகைய இணையதளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இணையதளத்தில் மோசடி செய்யும் திறன் படைத்த சிலர், பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிக்கும் எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர்.

உலகம் முழுவதும் ஆன்-லைன் மோசடிகள் நடைபெற்று வந்தாலும், ஒரு சில மோசடிகள் தீவிரவாதச் செயல்களுக்குத் தேவையான தொகையைச் சம்பாதிக்கவே செய்யப்படுகிறது என்கிறார் மென்பொருள் வடிவமைப்பாளர் ஒருவர் அவர்.

தகவல்களில் ரகசியம் வேண்டும்:

இந்தியாவில் பெரு நிறுவனங்கள், தனிநபர்கள் என பலரும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றைத் தடுக்க அதிக அளவிலான முதலீடும் அந்தத் துறையில் கூடுதல் ஆராய்ச்சியும் தேவைப்படுகிறது.

அதனால், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்கள் தகவல்களை முறையாக பாதுகாக்க வேண்டும். நமது தகவல்கள் திருடப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தவுடன் பின்நம்பர், பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை மாற்ற வேண்டும். முக்கியத் தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர். 

நன்றி :-தினமணி, 23-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.