Sunday, July 14, 2013

”சைபர் குற்றங்களைத் தடுக்க தகவகளில் ரகசியம் அவசியம்”

சைபர் குற்றங்களைத் தடுக்க பாஸ்வேர்டு, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ரகசியமாக வைத்திருக்குமாறு இந்திய லஞ்ச ஒழிப்பு ஆணையரும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ஸ்ரீ குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில் சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்த கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு ஸ்ரீ குமார் பேசியதாவது:-

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை.

நாளொன்றுக்கு உலகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் நிறுவனங்கள் தகவல் திருட்டு, பண மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரு நிறுவனங்கள், தனிநபர்கள் என பலரும் சைபர்ó திருட்டுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

நிறுவனங்களின் முக்கியத் தகவல்கள், தனி நபரின் வங்கிக் கணக்கு எண், பின் நம்பர்கள் உள்ளிட்டவை அவர்களுக்கே தெரியாமல் திருடப்படுகின்றன.

இவற்றை முழுமையாகத் தடுக்க அதிக அளவிலான முதலீடு தேவைப்படுகிறது. அதைத் தவிர சைபர் துறையில் அதிகப்படியான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நமது தகவல்கள் திருடப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தவுடனே பின்நம்பர், பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை மாற்ற வேண்டும். முக்கியத் தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய குற்றப் பிரிவு (சென்னை) கூடுதல் ஆணையர் நல்லசிவம் பேசியதாவது:- சைபர் குற்றங்களைத் தடுப்பது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக உள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் 42 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டில் இது வரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
.
சைபர் குற்றங்களைத் தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். கருத்தரங்கில் லெப்டினென்ட் ஜெனரல் வி.கே.பிள்ளை, ரேடியண்ட் குழுமங்களின் தலைவர் டேவிட் தேவசகாயம், சி.ஐ.ஐ (தென் மண்டலம்) தலைவர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.                                                                                                                   

நன்றி :- தினமணி, 14-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.