Tuesday, July 16, 2013

தயாநிதி நெடுமாறன் 323 தொலைபேசி இணைப்புகள் தவறாக வைத்திருந்த விவகாரம் !

இந்தியச் செய்திகள் பிரிவில் !

தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தியது குறித்து டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை சட்டத்துக்கு விரோதமாக பயன்படுத்தியது குறித்துத் தயாநிதி மாறன் மீது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதே விவகாரத்தில் எஸ். குருமூர்த்தி ஏற்கனவே  மனு தாக்கல் செய்திருந்தார். எனவே, அந்த மனுவுடன் சேர்த்து இது விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகச் செய்திகள் பிரிவில் விரிவாகவும் விளக்கமாகவும் 



மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள நடவடிக்கையைத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் "டிராஃபிக்' ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சார்பில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்: 

"2004-2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் 2007, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக தனது இல்லத்தில் வைத்திருந்ததாகப் புகார் எழுந்தது.

2007, மே 9ஆம் தேதியிட்ட தினகரன் நாளிதழில் தி.மு.க.வின் வாரிசு தொடர்பான செய்தி வெளியானது. இதையடுத்து, தி.மு.க.வில் இருந்து தயாநிதி மாறன் தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து, 2007, மே 13ஆம் தேதி அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். 2007, செப்டம்பரில் 323 தொலைபேசி இணைப்புகள் தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலருக்கு சி.பி.ஐ. குறிப்பு அனுப்பியது.

இந்நிலையில், 2008, டிசம்பரில் தி.மு.க. தலைமைக்கும், தயாநிதி மாறனுக்கும் இடையே சுமுக நிலை ஏற்பட்டது. 2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தயாநிதி மாறன் தொடர்பான 323 தொலைபேசி இணைப்புகள் விவகாரத்தை அ.தி.மு.க. தலைமை எழுப்பியது. 2011இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இந்த விவகாரத்தை அ.தி.மு.க. தலைமை எழுப்பியது. தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்.லுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதால் தயாநிதி மாறனுக்கு எதிராக தேசிய பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஜூன் மாதம் போராட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து 2011, ஜூலை 28-ஆம் தேதி கருத்துத் தெரிவித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், "சி.பி.ஐ. இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது' என்றார். இதன் தொடர்ச்சியாக 2011, அக்டோபர் 11ஆம் தேதி தயாநிதி மாறனின் சென்னை போட் கிளப் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஆனால், 2012, செப்டம்பர் வரை சி.பி.ஐ. நடத்திய சோதனை, அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.

அதனால், தயாநிதி மாறன் விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையைத் தெரிவிக்கக் கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி சி.பி.ஐ. இயக்குநருக்கும், மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலருக்கும் கடிதம் எழுதினேன். ஆனால், பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்கூட, 2002 முதல் 2007ஆம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு உரிமங்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க 2011ஆம் ஆண்டில் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

2007, ஜனவரி முதல் ஏப்ரல் வரை தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார். எனவே, அவரது பதவிக் காலத்தில் நடைபெற்ற சட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் விவகாரத்தையும் முறைகேடாகக் கருதி சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதனைக் கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த நீதிமன்றம், தயாநிதி மாறனுக்கு எதிராக ஏற்கெனவே பத்திரிகையாளர் குருமூர்த்தி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது.

அதன்பேரில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்” என்று டிராஃபிக் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்     நன்றி :- தினமணி, 16-07-2013                                                              
---------------------------------------------------------------------------------------------------------------
குறைந்த பட்சம் ஊருக்கொரு டிராஃபிக் ராமசாமியும், இதுபோன்று பல்வேறு பொதுநல வழக்குகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்கின்ற பாடம் மாத இதழின் ஆசிரியர் அ.நாராயணன் அவர்களும் இருக்கவேண்டும். இவர்களுக்குப் பின்னால் ஊருக்கு நூறு பேர் அணி திரண்டால் தமிழகத்தின் - இந்தியாவின் தலைவிதி மாறும்.
---------------------------------------------------------------------------------------------------------------
   


0 comments:

Post a Comment

Kindly post a comment.