Wednesday, June 5, 2013

அறிவுதான் பரம ஞானம் ஆகும் -நெல்லை சு.முத்து

அரசர்களைப் புகழ்ந்து பாடி, பத்ம, சாகித்ய, கௌரவ "டாக்டர்' பட்டம், பதவி பெறுவது என்றென்றும் நம் புலவர்கள் பண்பு. இன்னார் இடத்தில் இது கொடுத்தால் அல்லது இப்படிப் புகழ்ந்தால் அது கிடைக்கும் என்று யாசகரை ஆற்றுப்படுத்துவதும் நம்மவர் மரபு.

அன்றைக்கு தம்மைப் புகழும் வறுமைப் புலவர்க்கு யானையும் குதிரையும் தேவையா? தீனி போட்டு வளர்க்க முடிந்தால் சரி. இந்திய மண்ணில் குதிரையும் கோவேறு கழுதையும் எங்கிருந்து வந்தன? மூளையின் கபாடம் (கபாலம் அல்ல!) திறந்து சிந்தித்தால் அறிவியல் வரலாறு பிடிபடும்.

ஆற்றுப்படை நூல்களில் சோழர் பிரலாபங்கள். பெரும்பாணாற்றுப் படையில் வென்வேல் கிள்ளி என்ற சோழனின் மகனான தொண்டைமான் இளந்திரையன். பொருநராற்றுப் படையில் கரிகால் பெருவளத்தான். சிறுபாணாற்றுப் படையில் ஓமான் நாட்டு நல்லியக்கோடன். யாழ்ப்பாணர்களை வழிநடத்தும் ஒரு நூலில் இலங்கை வர்ணனையும் இருக்கிறதே!

பதிற்றுப்பத்து முழுக்க முழுக்க சேரலாதன் குடும்பப் புகழ் பாடும் தொகுப்பு. நெடும்சேரலாதன் மகன் செங்குட்டுவன், செல்கெழு குட்டுவன், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், தம்பி இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆகியோரைப் பாடும் பாடல்கள்.

தமிழின் புறப்பாடல்கள் அரசரின் வீரம் பற்றியவை. அகப்பாடல்களோ அவர்தம் பிரிவால் காத்திருக்கும் ராஜ மகளிர் மனநலம் பற்றியவை.

எது எப்படியோ, மதுரை தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்கு வாய்த்தான் மாங்குடி மருதன். தான் அறம் பிறழ்ந்தால் புலவர் என் புகழைப் பாடாது போகட்டும் என்று கட்டியம் கூறுகிறான் மன்னன். அந்த அளவுக்கு தங்களைப் புலவர் பாடி கேட்டுக் கொண்டே சொக்கி இருப்பவர்கள். இவர்களே பிற்காலத்தில் தமிழர் தெய்வங்கள் ஆகின்றனர்.

மறைந்த பெற்றோரைக் குல தெய்வங்களாக நினைந்து வணங்குவது நம் கலாசாரம். மனதிற்குத் தெம்பும் மனோதிடமும் தரும் என்பதை உளவியல் நிபுணர்களும் ஒத்துக் கொள்கிறார்களே!

அதே நம்பிக்கையில்தான் கிராமம், சிற்றூர், பேரூர், நகர், பெருநகர் தோறும் நினைவில் வாழும் நல்ல அரசியல், மத, பிராந்தியத் தலைவர்களுக்குக் கோயில் எழுப்பிக் கும்பிடுகிறோம். சந்தன வீரப்பன் கூட எதிர்கால சத்திய மங்கலத்தின் காவல் தெய்வம் ஆகலாம். அண்டை நாட்டில் ராணுவத்தை எதிர்த்துப் போராடி மரித்தவர்க்கும் எங்கேனும் கோயில் எழுப்பப்படலாம். இருந்தாலும் சில சுவரொட்டிகளில் எதார்த்தப் போராளியின் இயல்பான அடக்கப் புன்னகைக்குப் பக்கத்தில் உள்ளூர் தலைவர்க்கு ஏன் செயற்கையாக இத்தனை ஆவேசத் தோற்றம்?

ஏதேனும் ஓர் வகையில் நம்மை ஆண்டவர்கள் இன்று நம் "ஆண்டவர்கள்'. தேவாலயத்திற்கோ, பள்ளிவாசலுக்கோ சென்று தொழுதுவிட்டு விஞ்ஞானமோ, மெய்ஞ்ஞானமோ, தம் பணி தொடங்குவதை யாராவது எகத்தாளம் பண்ணுவாரோ?

பொதுவாக, இறந்தோரைத் தாழியில் புதைத்தல் சங்க கால வழக்கம். அதிலும் அரசர்களை மட்டுமே பத்திரமாகவும் பய பக்தியுடனும் புதைத்தாழிகளில் இட்டனர் நம் முன்னோர். ""மன்னர் மறைத்த தாழி'' (பதிற்றுப்பத்து 44), ""நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன், ஆதலின் அன்னோர் கவிக்கும் கண் அகன்தாழி'' (புறநானூறு 228) என்று எல்லாம் சம்பிரதாயங்கள். புதைகுழித் தாழிகளை பாண்டவக் குழி என்றும் வழங்குகிறோம். இது மாண்டவர் குழி என்பதன் மருவல். உண்மையில் மொகஞ்சோதாரா என்றாலும் இதே பொருள். சிந்து நதி தீரத்தின் சிந்தி மொழியினில் மொஹஞ்சோ-தாரா என்றால் "மரித்தோர் தரை' என்க.

பாருங்களேன், சோழன் ராஜராஜனின் ஆட்சியில் இறந்தோர் எரிக்கப்பட்டனர். ஆனால் அவனது உடலம் மட்டும் உள்ளூர் வழக்கப்படி, கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உடையாளூரில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

""விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல்'' (ஐங்குறுநூறு - 352) தொடங்கி அண்ணா சமாதி வரை அனைவரையும் தெய்வங்கள் ஆக்கி விட்டோம். இறந்த இடத்தில் நினைவுக் கூடங்கள், அஸ்தி வைத்த இடங்கள் ஆலயங்கள். சமையல் எரிவாயு விலை ஏறினாலும் இறங்கினாலும் அணையா தீபம் கடற்கரையோரம். தலைவருக்கு சிலர் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கின்றனர். வேறு சிலர் நெய் விளக்கு பொருத்தி வைக்கின்றனர். பல மொழி, இன மக்கள் வந்து கும்பிட்டுச் செல்கிறார்கள்.

முன்னாளில் சுடுகாட்டில் எரிக்க கனப்புச் சட்டி அவசியம். இன்றைக்கு மின் மயானத்தில் கணப்பொழுதில் தகனம். இறுதிப் பயணத்தில் பிண நாற்றத்தைப் போக்கவே மலர்கள், சாம்பிராணி, சந்தனம் இத்யாதி வாசனைத் திரவியங்கள். அதையே தொடர்ந்து தலைவர் சிலைகளுக்கும் வழிபாடாக நடத்துகிறோம். அவரது கொள்கைகள் செத்துப் போகாமல் காக்கவே ஆண்டுதோறும் இந்த நினைவுநாள் அஞ்சலியோ என்னவோ?

கர்ப்பக் கிரகத்தில் தீப ஆராதனையும் தலைவர் திருமுகத்தை வெளிச்சம் இட்டுக்காட்டுவது தானே? தேரில் உலா வருதலும் ஸ்ரீவலம் (சீவலி) வருதலும் ஒன்று அல்லவா?

"கோ' ஆகிய இறைவன் (தலைவன்) "இல்'லம் தானே கோயில். அகஸ்திய, அருணாசல, ஆனந்த, இருதய, ஏகாம்பர, கச்சால, குசல, கேதார, கோமள, சிதம்பர, சுந்தர, சோமநாத, தர்ம, தார்த்திரி, திருவல்ல, தீர்த்தபால, நந்தி, நல்லிணக்க, பசுபதி, பீம, மல்ல, மருந்து, மாசிலாமணி, ரத்ன, ராமநாத, வீரசர, வெங்கி, வைத்திய, ஜம்புக, ஆதிபுர, ஞானபுர, தேணுபுர, வேதபுர என்று சென்னையைச் சுற்றிலும் எத்தனையோ நல்லவர்களை "ஈஸ்வரர்' அடைமொழியுடன் வழிபடுகிறோம். பக்கத்திலேயே காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, வடிவுடை, அபிராமி என அம்மன் சந்நிதிகளும் நிலைபெற்றன. பெருமாள் என்றால் தாயார் உடன் இருப்பார்.

நன்றாகக் கவனியுங்கள், திராவிட இயக்கத்தாரும் "கோயில் கூடாது என்பதற்காக அல்ல' என்றுதான் அந்நாளில் பிரசார வசனம் எழுதினார்கள்.

நட்ட கிரானைட் கல் அல்லது வெங்கலச் சிலை முன் நின்று தொழுவதிலும், மாலை சார்த்துவதிலும், மறைந்தோர் உருவப் படத்திற்கு ஊதுவர்த்தி கொளுத்துவதிலும் எந்தப் பகுத்தறிவு வாதமும் குறுக்கே நிற்காது. உயிருள்ள மனிதர்களுக்கே உரைக்காதபோது செத்த தலைவர்கள் வந்து சாதிப்பார்கள் என்று சபதம் எடுப்பதுகூட "நம்பிக்கை அறிவியல்'தானே?

பெரும்பாலான கோயில் பிரகாரங்களில் சித்தர் சந்நிதியும் நிச்சயமாக இடம்பெறும். தஞ்சைப் பெரிய கோயிலில் திருவிசைப்பா இயற்றிய அருளாளர் கருவூர்த் தேவர் சந்நிதி இருக்கிறதே. அவர்கள் மன்னர்க்குப் பணிவிடை செய்த பண்டைய மருத்துவர்கள். அவர்களைச் சங்க இலக்கியங்கள் "அறவோர்' என்றே குறிக்கின்றன. எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை (இரக்கம்) பூண்டு ஒழுகும் தயாள குணம் மிக்கவர்கள் அன்றைய அந்தணர்கள். இன்றைய சொல் வழக்கின் பொருள் வேறு.

திரைப்படங்கள் இல்லாத பழங்காலத்திலும் இளைஞர்கள் கெட்டுப் போகவில்லையா என்று சில புத்திசாலிகள் கேட்கிறார்கள். அப்படியானால் இன்று நிழல் நாயகர், நாயகிமாரை நம்பிக் கெட்டுப் போவதை ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தம். போகட்டும், வாக்காளரைக் காறி உமிழும் அரசியல் விளையாட்டு மட்டுமா, தொன்றுதொட்டு பந்தைத் துப்பித் துடைக்கும் இங்கிலாந்தின் மட்டை விளையாட்டு வரை தலைவர்களின் மருமக்கள் அப்பாவி ஜனங்களுக்குச் செய்தது நம்பிக்கைத் துரோகம் அல்லவா?

கீதை பதினேழாம் அத்தியாயம் மூவகை நம்பிக்கை பற்றிக் கூறுகிறது. வேத சாஸ்திரங்களைத் தழுவி பெரியோரை அல்லது பெற்றோரை வணங்குதல் - சாத்வீகம். அரசியல் இராட்சதர்களை வணங்குதல் - ராஜஸம். சினிமா நிழல் உருவங்களான பூத, பிரேத, பிசாசங்களை வணங்குதல் - தாமஸம். அங்கும் பகுத்தறியும் புத்தியே சாத்வீக புத்தி என்பது கீதையுரை (18 : 30)

""ஒவ்வொரு விஞ்ஞானத்திற்கும் வழிமுறைகள் இருப்பதைப்போல, மதத்திற்கும் உண்டு'' என்பார் விவேகானந்தர். தெய்வத்தோடு ஐக்கியம் ஆவதே யோகத்தின் அடிப்படையாம்.

இருந்தாலும் இன்று விஞ்ஞானத்தின் ஆதிக்கத்தை மறுப்பார் இல்லை. ஒரு ஞான குரு தன் யோகப் பயிற்சி, அறிவியல் அணுகுமுறையுடன் நடப்பது என்று விளம்பரம் செய்கிறார். "செக்ஸ் குரு' என்று அமெரிக்காவில் புகழ் பெற்று, பின்னர் கைது ஆகி, 21 நாடுகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட ஆன்மிகவாதி பொன்மொழிகள் ஒருபுறம். இவர்களில் சிலர் விஞ்ஞானத்தைக் குறைசொல்லி வியாபாரம் நடத்துகிறார்கள்.

ஏனோ தெரியவில்லை, சுதந்திரப்போர் காலம் தொடங்கி இன்றுவரை வெளிநாட்டுப் பெண்மணிகளே நமக்கு "அன்னை'ஆகி அருள்கின்றனர். ஆன்மிக ஆசிரமங்கள், சிரமங்களுடன் கார்ப்பரேட் நிறுவனங்களாகின்றன. உள்ளத்தால் உணரப்படுவதே ஆன்மிகம் என்றால் அது சொல்லால் வெளிப்படும்போதே ஆன்மிகத் தன்மை இழந்து விடாதோ?

இந்திய மதங்களின் கணக்கைப் பாருங்களேன். அனைத்துமே வட நாட்டு அரச குடும்பங்களில் சத்திரியக் குலத்தினரால் தோற்றுவிக்கப்பட்டவை. அதனால்தானே இன்றைக்கும் இறந்த தலைவர்களின் குடும்ப வாரிசுகளின் பெயர்களில் அரசுத் திட்டங்களும் நிறுவப்பெறுகின்றன. சொந்தப் பணமா, காசா? தமிழ்நாட்டில்கூட அறிவியல், தொழில்நுட்ப மையங்கள் மட்டுமா, ஒரு பல்கலைக் கழகமாவது விஞ்ஞானி பெயரில் இல்லையே?

""மூத்தோர் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு (வழிகாட்டுதலில்) அரசு செல்லும்'' (புறப்பாடல் 183) என்று பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் வேறு பாடி இருக்கிறான்.

இளைஞர்களின் அடிப்படை அறிவுக்கு கருத்தே விதை நெல். அதுவே காலத்தால் நிலைக்கும். அறிவியல் அறிஞர்களின் சாதனை வரலாறுகளையும், தொழில் நூதனங்களையும் தமிழில் இயல்பாகக் கற்றுத் தர வேண்டுமே; எத்தனை நாளைக்குத்தான் அடுக்கு மொழியும் அலங்கார வார்த்தைகளும் பேசி பண்டைய இலக்கியங்களை மட்டுமே பயிற்றுவிப்பது.

இனியேனும் அறிவியல் சிந்தனை வேர் விடும் பாடத் திட்டங்கள் வகுப்போம    

நன்றி :- தினமணி, 05-06-2013


 

0 comments:

Post a Comment

Kindly post a comment.