Sunday, June 9, 2013

”விக்கிமேனியாவிற்காக” ஹாங்காங் செல்லும் சேலம் கந்தம்பட்டி ஆசிரியை எஸ்.பார்வதி!

சேலம் கந்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் எஸ்.பார்வதி. தமிழ் இலக்கியம் படித்துள்ள பார்வதி தமிழ் விக்கிபீடியா இணையதளத்தின் நிர்வாகியாக உள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு இ-மெயில் வசதிக்காக இணையம் இவருக்கு அறிமுகமாகியுள்ளது. நாவல் அரசி வை.மு.கோதைநாயகி அம்மாளைப் பற்றிய ஒரு குறிப்புக்காக 2010-ம் ஆண்டு தமிழில் தேடுபொறியில் தேடும்போது, தமிழ் விக்கிபீடியா குறித்து அறிந்தார்.

தமிழ் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிபீடியாவில் ஆங்கிலத்தை ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவிலேயே கட்டுரைகள் இருப்பதை அறிந்த பார்வதி, இணையத் தமிழ் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பாக விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் முயற்சியில்
ஈடுபட்டார்.

இனி அவரே சொல்கிறார்:

 ""சீன தேசத்தைப் பற்றி நான் எழுதிய முதல் கட்டுரை, ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டிருந்ததால் அழிக்கப்பட்டது. எனது கட்டுரை ஆர்வத்தை அறிந்த பிற கட்டுரையாளர்கள் இணையம் மூலமாகவே கலைக்களஞ்சியத்துக்கு கட்டுரை எழுதுவது, தலைப்பிடுவது, உள்ளீடு செய்வது உள்ளிட்ட விவரங்களைக் கற்றுக் கொடுத்தனர்.

அதன் பிறகு ஆன்மிகம், சிற்றிலக்கியம், 108 வைணவத் தலங்கள், நோபல் பரிசு பெற்ற பிரபலமாகாத அறிவியல் அறிஞர்கள் என பல்வேறு தலைப்புகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழில் எழுதினேன்.இதைத் தவிர சிறுவர்களுக்கான தமிழ் கதைகள், நீதிக் கதைகள் என 12 கதைகளையும் எழுதியுள்ளேன்.

 "விக்கி- பொதுவகம்' என்ற அரிய புகைப்பட சேமிப்பு வங்கிக்கு 700 புகைப்படங்களை வழங்கி, விக்கி ஊடகப் போட்டி 2012-க்கான தொடர் பங்களிப்பாளர் விருது பெற்றேன்.

தமிழ் விக்கிபீடியாவுக்கு அளித்த தொடர் பங்களிப்பால் இப்போது விக்கிபீடியாவின் நிர்வாகியாகவும் முன்னேறியுள்ளேன்.
புதிய பதிவாளர்களின் கட்டுரைகளைத் திருத்தம் செய்வது, கூடுதல் விவரங்களைச் சேர்த்துக் கட்டுரையை முழுமையாக்குவது, தேவையற்ற கட்டுரைகளை அழிப்பது உள்ளிட்டவை எனது பணிகளாகும். தமிழ் விக்கிபீடியாவின் முதல் பக்கத்துக்காக ஓணம், வலசை போதல் (விலங்கினங்களின் இடம்பெயர்வு), கணிதமேதை கப்ரேக்கர் உள்ளிட்ட 30 கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.கூடுதல் விவரங்களுக்காக இணையதளம், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் உள்ள விக்கிபீடியாக்களையும் தேடுவதாகக் கூறுகிறார்.

 ""உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் தமிழ் விக்கிபீடியாவுக்கு கட்டுரைகளை பங்களிப்புச் செய்யப் பதிவு செய்திருந்தாலும் தொடர் பங்களிப்பில் உள்ளவர்கள் என்னவோ வெறும் 275 பேர் மட்டுமே. இவர்கள் இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள், இலங்கை, ஆஸ்திரேலியா, நார்வே, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

தமிழறிவுடன் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இருந்தாலே நல்ல தமிழ்க் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்ய முடியும். இணையத்தில் கட்டுரை எழுதுவதில் பெண்களுக்கான இடம் இன்னும் காலியாகவே உள்ளது. என்னையும் சேர்த்து மொத்தம் 4 பெண் பதிவர்களே இருக்கின்றனர். அவர்களில் இருவர் நிர்வாகியாகவும் பொறுப்பு வகிக்கின்றனர். இதில் வயது வரம்பின்றி கட்டுரைகளை பதிவு செய்யலாம், தற்போது 13 வயது முதல் 80 வயதானவர்கள் வரையிலும் தமிழில் கட்டுரை எழுதுகின்றனர்.

விக்கிபீடியாவுக்கு அதிக பங்களிப்பு செய்யும் விக்கிபீடியன்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் "விக்கிமேனியா' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த 2006 முதல் தமிழ் விக்கிபீடியா செயல்பட்டு வருகிறது. அதில் தற்போது சுமார் 53,600 தமிழ் கட்டுரைகள் உள்ளன.
 "விக்கிமேனியா' கூட்டத்தில் அடுத்து வரும் ஆண்டுக்கு திட்டமிடுவது, கட்டுரை சமர்ப்பித்தல், புதிய பதிவர்களை ஈர்க்கத் திட்டமிடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் தமிழ் விக்கிபீடியன்கள் இந்த விக்கிமேனியாவில் பங்கேற்று வருகின்றனர். 2013-ம் ஆண்டுக்கான விக்கிமேனியா வரும் ஆகஸ்ட் 9 முதல் 11-ம் தேதி வரை ஹாங்காங்கில் நடைபெற உள்ளது. இதில் நான் கலந்து கொள்ள உள்ளேன். என்னுடன் அறிஞர் செங்கை பொதுவன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

விக்கிபீடியாவுக்கு கட்டுரை எழுதுவதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. எனவே கட்டுரை எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் பல பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளேன். மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் தொடர்ந்து அவர்களின் பங்களிப்பை கேட்டும் வருகிறேன்'' என்று கூறும் பார்வதியின் கணவர் என்.நாராயணன் ஓர் ஆன்மிகச் சொற்பொழிவாளர்.

பார்வதியைத் தொடர்ந்து இவரது மகள் அபிராமியும் விக்கிபீடியாவில் கட்டுரைகளைத் தொகுக்கத் தொடங்கியுள்ளார். ஓக் மரம், பாகவதம், நளாயினி உள்ளிட்ட இராமாயண கதாபாத்திரங்கள் குறித்த கட்டுரைகளைப் பதிவேற்றி வரும் அபிராமி பத்தாம் வகுப்பு மாணவி.
 
நன்றிக்குறியோர்:-
 க.தங்கராஜா
 படம்: பா. விஜயகுமார்
தினமணி ஞாயிறு கொண்டாட்டம், 09-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.