Monday, June 10, 2013

அறுந்துபோன புதுச் செருப்பு விவகாரம் வழக்கறிஞர்கள் போலீசார் கைகலப்பான உண்மைக் கதை !

செருப்பு விவகாரம் 
 
வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், 13வது கிழக்கு குறுக்கு தெருவில் உள்ள செருப்பு கடை ஒன்றில், நேற்று முன்தினம் இரவு, கல்பனா என்ற பெண், புது செருப்பு வாங்கி அணிந்து சென்றார். வீடு போய்ச் சேர்வதற்குள் செருப்பு அறுந்து விட்டது. சகோதரர் சுரேஷுடன் செருப்புக் கடைக்கு சென்ற கல்பனா, அறுந்து போன செருப்புக்கு மாற்றாக, புது செருப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக செருப்பு கடைக்காரருக்கும், கல்பனா மற்றும் சுரேஷ் தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. விவகாரம் எம்.கே.பி., நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்றது. இன்ஸ்பெக்டர் நடராஜன், இருதரப்பினரிடமும் விசாரித்தார். செருப்பு கடைக்காரருடன் வழக்கறிஞர் ஒருவரும் சென்றார். இதற்கிடையே எம்.கே.பி., நகர் போலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட, பல வழக்குகளில் வழக்கறிஞர்களுக்கு எதிராகவே போலீசார் செயல்படுவதாக, வழக்கறிஞர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

வாக்குவாதம் 

இந்த நிலையில், செருப்பு விவகாரத்தில் விசாரணையின் போது, வழக்கறிஞருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தை தொடர்ந்து, வழக்கறிஞர் மைக்கேல் உள்ளிட்ட பலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், போலீசாரும் வழக்கறிஞர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் நடராஜன் சட்டை கிழிக்கப்பட்டது. அவரது முகம், மார்பில் காயம் ஏற்பட்டது. போலீசார் சோணமுத்து, அரவிந்த் மற்றும் ஜெயமூர்த்திக்கும், வழக்கறிஞர் மைக்கேல் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

போர்க்களமான போலீஸ் நிலையம் 

வழக்கறிஞர்கள் - போலீசார் மோதலில், இன்ஸ்பெக்டர் அறையில் இருந்த மேஜை, "டிவி' உடைந்தன. இன்ஸ்பெக்டர் அறையில் இருந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சின்னாபின்னமாயின. போலீஸ் நிலைய நுழைவாயிலில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டது. வளாகத்தில் நிறுத்தப்பட்ட போலீஸ் ஜீப்பின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
தகவலறிந்ததும் இணை ஆணையர் சண்முகவேல், துணை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர் மனோகரன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் எம்.கே.பி., நகர் போலீஸ் நிலையம் விரைந்தனர். பாதுகாப்புக்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காயமடைந்த போலீசார் நான்கு பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயம் அடைந்த வழக்கறிஞர்கள் மைக்கேல் மற்றும் ரஞ்சித், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மாறி மாறி குற்றச்சாட்டு

சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் கூறுகையில், "முன்பு விசாரிக்கப்பட்ட பழைய வழக்கில், வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக நான் செயல்படவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியாலேயே, வாய்த்தகராறு கைகலப்பு வரை சென்று விட்டது. என்னை அடித்ததுடன் தடுக்க வந்த போலீசாரையும் வழக்கறிஞர்கள் தாக்கினர்' என்றனர்.

வழக்கறிஞர் மைக்கேல் உள்ளிட்டோர் கூறியதாவது:

வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டருடன் பேசி கொண்டிருந்த போது, அவர் தகாத வார்த்தையால் என்னை திட்டினார். என்னை பிடித்து கீழே தள்ளினார். என்னையும், என்னுடன் வந்த மற்ற வழக்கறிஞர்களையும் போலீசார் தாக்கினர். எனக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வெள்ளை சட்டை அணிந்து வந்த இருவர், போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கினர். காயம்பட்ட நான் மயங்கி விழுந்தேன். கண் விழித்த போது மருத்துவமனையில் இருந்தேன். என்னை தாக்கிய போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டப்பஞ்சாயத்து

எம்.கே.பி., நகர் மற்றும் கொடுங் கையூர் போலீஸ் நிலையங்களில் புகார் தொடர்பாக விசாரிக்கப்படும் நபர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் களும், இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும், போலீஸ் நிலையத்தில் குவிகின்றனர். இதனால், பல நேரங்களில் போலீஸ் நிலையம் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடமாகி விடுகிறது. இதில் போலீசாரும், வழக்கறிஞர்களும் அவரவர் எல்லையை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=731126

0 comments:

Post a Comment

Kindly post a comment.