Friday, June 14, 2013

அந்தரங்கம் இனி இரகசியமில்லை - தினமணி தலையங்கம் - 14-05-2013




உலகமே அதிர்ச்சியில் சமைந்திருக்கிறது. 29 வயதேயான எட்வர்ட் ஸ்நோடென்னை, அமெரிக்க அரசின் ஒற்றாடலை உலகத்துக்குத் தெரியவைத்த "நாயகன்' என்று போற்றுவதா இல்லை தனது அரசின் நம்பிக்கையைத் தகர்த்த "துரோகி' என்று தூற்றுவதா என்பது அவரவர் பார்வையைப் பொருத்த விஷயம். அமெரிக்க அரசின் ஒற்று நிறுவனமான சி.ஐ.ஏ.வில் மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த ஸ்நோடென், கூகுள், மைக்ரோ சாப்ட், யாகூ, ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதள நிறுவனங்களிலிருந்தும், வேறு பல வழிகளிலும் உலகளாவிய அளவில் தனிநபர்களாலும், அரசுகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் அமெரிக்க அரசு, அவர்களுக்குத் தெரியாமல் ஒற்றாடுகிறது என்கிற ரகசியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தனது மனசாட்சிக்கு விரோதமான செயலாக அது இருப்பதாலும், தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயலாக அது இருப்பதாலும், அமெரிக்க அரசின் இந்தத் தவறான செயலைத்தான் உலகறியச் செய்வதாகக் கூறியிருக்கிறார் அவர். அமெரிக்க உளவு அமைப்பின் பெயருக்குக் களங்கமும், தேசவிரோதமுமான இந்தச் செயலுக்காக, ஸ்நோடென் கைது செய்யப்பட்டு தேசத் துரோகக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள்.

இன்னொரு புறம், தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுவதை எதிர்த்துக் குரலெழுப்பி இருக்கும் ஸ்நோடெனின் செயல் பாராட்டுக்குரியது என்றும், அமெரிக்காவின் ஆன்மாவாக இருக்கும் தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கத் துணிந்த ஸ்நோடென் தண்டனைக்குரியவர் அல்ல என்றும் லட்சக்கணக்கான மக்கள் உரிமை ஆர்வலர்களும், இணையதளப் பயனாளிகளும் அமெரிக்க அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். ""அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்பு வெளிநாட்டவர்களைத்தான் உளவு பார்த்ததே தவிர, எந்தவொரு அமெரிக்கரின் தனிமனிதச் சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தவும் இல்லை, அமெரிக்க சட்டதிட்டங்களை மீறவும் இல்லை. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பையும், தேச நலனையும் கருதிச் செய்யப்பட்டதுதான் இந்த இணையதளக் கருத்துப் பரிமாற்றங்களைக் கண்காணித்த செயல்'' என்பது அதிபர் ஒபாமாவின் விளக்கம்.

அமெரிக்காவின் கிரிமினல் செய்கையை உலகுக்கு அம்பலப்படுத்துவதற்காகத்தான் இப்போது ஹாங்காங்கில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் எட்வர்ட் ஸ்நோடன். சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் ஸ்நோடென் தஞ்சம் அடைந்திருப்பதிலிருந்து, அவரது செய்கைகளுக்கு சீனாவின் ஆதரவு இருக்கக்கூடுமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

அமெரிக்க உளவு நிறுவனத்தின் இணையதள வேவு பார்க்கும் முயற்சியில், சீனா, ரஷியா போன்ற நாடுகளைவிட அதிகமாக ஒற்று நடத்தப்பட்ட நாடு இந்தியா என்பதுதான் அதிர்ச்சியான தகவல். வெரிசான், ஏ.டி அன்ட் டி போன்ற சர்வதேசத் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், யாகூ, பேஸ்புக், ட்விட்டர் போன்ற தேடுதள இணையங்களும் அமெரிக்க நிறுவனங்களாக இருப்பதால் உலகளாவிய அளவில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்துமே அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்கின்றன என்பது அதிர்ச்சியை அதிகரிக்கிறது.

இது தெரிந்துதான் சீனா, தனக்கென்று "பைடூ' என்கிற இணையத்தைத் தொடங்கி இருக்கிறது. ஒருவேளை, அமெரிக்கா இதுபோலத் தகவல்களை ரகசியமாக ஒற்று நடத்துவது தெரிந்ததால்தான் சீன அரசு "பைடூ'வை அறிமுகப்படுத்தியதோ என்றுகூடச் சந்தேகமாக இருக்கிறது. ஸ்நோடென் சீன ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங்கில் தஞ்சமடைந்திருப்பது, இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்கா தனது நாட்டின் பாதுகாப்புக்காகவும், தனது தேசிய நலனுக்காகவும் உலகளாவிய அளவில் இணையதளத் தகவல்களை ஒற்று நடத்தியது சரியா, தவறா என்று கேட்டால், அமெரிக்காவின் பார்வையில் சரி, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பார்வையில் தவறு என்று சொல்வதைத்தவிர வேறு வழியில்லை. அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்புக்கு அளிக்கப்பட்ட சில அதிகாரங்களில் இத்தகைய தொலைபேசி, இணையதளங்களை ஊடுருவிப் பார்க்கும் அதிகாரம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு முகத்தை நாம் பார்க்கத் தவறுகிறோம். கைப்பேசி வைத்திருக்கும் அனைவரின் நடமாட்டமும் கண்காணிப்புக்கு உட்பட்டது. அதிலும் குறிப்பாக, தனியார் செல்பேசி நிறுவனங்கள் யாருடைய உரையாடலையும் ஒட்டுக்கேட்க முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவு செய்யும் தகவல்கள் அடுத்த சில நொடிகளில் உலகளாவிய அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்ட் வைத்திருந்தால், அந்த நபரைப் பற்றிய அத்தனை தகவல்களும் எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கையூட்டின் உதவியால் பெற முடியும் என்பது வேதனையான உண்மை.

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் ஒட்டுக் கேட்கவும், ஒற்றர்கள் மூலம் வேவு பார்க்கவும் தொடங்கிவிட்ட நிலையில், அமெரிக்காவின் செயல் ஆச்சரியப்படுத்தவில்லை.

மாறாக, சீனாவைப்போல நாம் விழிப்புடன் இல்லையே என்று வருத்தப்படத் தோன்றுகிறது.

தனிமனித உரிமை பற்றிப் பேசும் தகுதியை நம்மிடமிருந்து விஞ்ஞானமும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பறித்துவிட்டன!                                                    

நன்றி :- தினமணி தலையங்கம், 14-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.