Sunday, May 12, 2013

இசை - கவின் கலைக்குத் தனிப் பல்கலைக்கழகம் !

.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:-

சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதன் மூலம் அவர்கள் பாடத்தை ஒட்டிய கம்ப்யூட்டர் பயிற்சிகளை மேற்கொள்ள இயலும்.
இந்த மூன்று கல்லூரிகளிலும் இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் 633 மாணவிகளில் ஏற்கெனவே பிளஸ் 2 வகுப்பின் போது இலவச லேப்டாப் பெற்ற 59 பேரைத் தவிர, மீதமுள்ள 574 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.திருவையாறு இசைக் கல்லூரியில் பி.ஏ. (இசை) அதாவது இளங்கலைப் பட்டப் படிப்பில் பயிலும் 32 மாணவர்களில் 28 பேருக்கு லேப்டாப் வழங்கப்படும்.

இலவச பஸ் பாஸ்: 

கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் நான்கு அரசு இசைக் கல்லூரிகள், இரண்டு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் ஒரு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி ஆகிய ஏழு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்போது, திருவையாறு, மதுரை, கோவை அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி, மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.


இசை-கவின் கலை பல்கலைக்கழகம்:

தமிழகத்தின் தொன்மையான இசை மற்றும் கலையைப் பாதுகாத்து அவற்றை எதிர்கால இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருவையாறு ஆகிய இடங்களிலுள்ள அரசு இசைக் கல்லூரிகள், சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி மற்றும் இந்தத் துறைகளைச் சேர்ந்த அனைத்து உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்லூரிகள் மற்றும் இசை, நடனம், கவின் கலைகளை கற்பிக்கும் கல்லூரிகள் செயல்படும்
.
இதர பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் இசை சார்ந்த, கவின் கலைப் புலன் சார்ந்த, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளும் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்படும். மேலும் இந்தப் பல்கலைக் கழகத்தில் குரலிசை, வீணை, வயலின், நாகஸ்வரம், தவில், மிருதங்கம், கடம், கஞ்சிரா, முகர்சிங், புல்லாங்குழல், பரதநாட்டியம், நட்டுவாங்கம், கிராமியக் கலை ஆகிய 13 துறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.                                                                                                                          

நன்றி :- தினமணி, 11-05-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.