Friday, May 10, 2013

செம்மறியாடுகளா நாம் ? பேரா. அ.அறிவுநம்பி, புதுச்சேரி



மாற்றம் என்பது மாற்ற முடியாதது'' என்பர். உலகில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் அமைவது இயல்பானது. உடையில், உணவில், பழக்கவழக்கங்களில் என எல்லாக் கூறுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஏற்பட்டுவருகின்றன. அவை வாழ்வை மேம்படுத்துவதற்காக அமையுமானால் நல்லதுதான். ஆனால் மறுதலையான மாற்றங்கள் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

தமிழர்கள் தம் வீட்டு முகப்பில் பச்சரிசி மாவால் கோலம்போட்டனர். எறும்பு போன்ற சிற்றுயிரிகளுக்கு உது உணவானது. பிறகு "வெண்மைதான்' முக்கியம் என்று சுண்ணாம்புக் கல்லைப் பொடியாக்கி (மொக்கு மாவு) கோலமிட்டனர். இப்போது வண்ணப்பூச்சில் வரைந்து வைக்கின்றனர். இன்னும் சிலர் ஒட்டுவில்லைகளை ஒட்டிக் கடமையை முடிக்கின்றனர். இப்போது பெருகிவரும் அடுக்ககங்களில் வாசல் தெளித்து கோலம்போட வாய்ப்பில்லைதான். பூசையறையில்கூடப் பச்சரிசி மாவு மறுக்கப்பெறுவது ஏன்?

என்னதான் படித்த பெண்ணாக இருந்தாலும் பத்தாயிரம், இருபதாயிரம் மாதச் சம்பளம் என்றாலும் திருமண நாளில் "கூறைப் புடவை' கட்டுவது இன்னும் மாறுவதில்லையே? பிற பழக்கங்களைக் கைவிடுவானேன்?

தமிழர்கள் வழிபாட்டில் தனித்தன்மையை வேறொரு விஷயத்தில் தொடர்ந்து இழந்து வருகிறார்கள். "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்று தமிழ்நாட்டுக் கோயில்களில் பலகை வைப்பது தமிழர்களுக்கு அவமானமில்லையா? கோவிலைக் கட்டியவன் தமிழன், அர்ச்சிப்பவன் தமிழன், பூ, கற்பூரம் விற்பவன் தமிழன், வழிபடச் செல்பவனும் தமிழன், வழிபடும் மொழி மட்டும் வேறா? ஆழ்வார்களும் நாயன்மார்களும் எந்த மொழியில் பாடினர்? அவர்களுக்கு இறைவன் திருவருள் காட்டவில்லையா?
திருக்கோயில் வழிபாட்டைப் போலவே திருவிழா கச்சேரிகளும் தரம் மாறிவிட்டன.

அன்றைய நாள்களில் கோயில்களில் நல்ல இசைக் கச்சேரிகளை அரங்கேற்றினர். பக்திப் பாடல்களை மட்டுமே பாடினர். காலப்போக்கில் அவை பின்தள்ளப்பட்டு திரைப்படங்களில் இடம்பெற்ற பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பிறகு அவையும் மறைந்து இரட்டை அர்த்தமுள்ள பாடல்களுக்கு ஆபாச நடனமாடுவது கோயில் திருவிழாக் கொண்டாட்டமாகிவிட்டது.

திருமண வீடுகளில்கூட அந்த நாள்களில் தரமான இசைக் கச்சேரிகள்தான் நடந்தன. இதற்காக மணவீட்டில் விருந்து முடித்து இரவு 8 அல்லது 9 மணிக்குத் தொடங்கி விடிய விடிய கச்சேரிகள் நடத்தப்பட்டன. இப்போதோ காது கிழியும் அளவுக்கு எண்ணற்ற இசைக் கருவிகளின் இரைச்சலோடு, நிம்மதியைச் சீர்குலைக்கும் வகையில் திரைப்படப் பாடல்கள் இசைக்கப்பட்டு திருமணத்துக்கு வந்தவர், போனவர் எல்லாம் ஆடும் காட்சிகள் அரங்கேறுகின்றன.

இவை அனைத்துக்கும் ஒரே காரணம் ""செம்மறியாட்டுச் சிந்தனைகள்''. "யாரோ ஒருவர் செய்யும் செயலை நாம் ஏன் செய்ய வேண்டும்?' என்று ஒருகணம் சிந்திக்காமல், "அவர் செய்கிறாரே அதையே நாமும் ஏன் செய்யக்கூடாது?' என்று சிந்திப்பதால் வரும் விளைவுகளே இந்தக் கலாசார சீர்கேடுகள்.

இனியாவது மனிதர்களாக - தமிழர்களாகச் சிந்திப்போம், செயல்படுவோம்.

நன்றி :- கருத்துக் களம், தினமணி 06-05-2013

 

  
 
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.