Monday, April 22, 2013

Mahlarathul Quadiriyya – காயல் பட்டினத்தில் தூண்கள் இல்லாத வட்டவட்டவடிவக் கும்பம் ( ஹிஜ்ரி1288 )

http://sufimanzil.org/tag/quadiriya-thareeka

சுமார் 100 அடி உயரம்! 100 அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்டவடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்! பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும் அமைப்பு!

முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனிதமிகு ரவ்லா ஷரீஃபின் அமைப்பில் பரவசமூட்டும் பாங்கான கவர்ச்சி! காதிரிய்யா தரீகாவின் கவினார்ந்த சின்னமாக நின்றிலங்கும் மஹ்லறா.

   அண்ணல் கௌது நாயகத்தின் திருவழிப் பேரர் பகுதாதைச் சார்ந்த ஹழரத் மௌலானா ஸெய்யித் அப்துல்லாஹில் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆலிஜனாப். கம்பெனி அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் (ஸூபி ஹழரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பாட்டனார்) ஹாஜி குளம் சதக்குத் தம்பி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களின் பெருமுயற்சியின் காரணமாக ஆலிஜனாப். கம்பெனி அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் அவர்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலத்தில் இம்மாமண்டபத்தை நிறுவிமுடித்து, 'மஹ்லறத்துல் காதிரிய்யா' என்று பெயர் சூட்டினார்கள்.

   பகுதாது மௌலானா அவர்கள் இதை கட்டி முடித்து எழுதிய வக்பில்,
  ஹிஜ்ரி 1288 ஷஃபான் பிறை 25 ஞாயிற்றுக் கிழமை பகுதாதைச் சார்ந்த ஸெய்யிது ஹபீபுல் காதிரிய்யி அவர்களின் குமாரர் ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரிய்யில் ஹனஃபியாகிய நான் கூறுவது,
    திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டணம் நகரில் ஜைனுத்தீன் புலவர் அவர்கள் வீட்டுக்கு வடக்கு, கதீபு மூஸா நெய்னா அவர்களின் வழியினர்கள் வீட்டிற்கு தெற்கு, குத்பா சிறுபள்ளிக்கு மேற்கு, பொதுப் பாதையான அம்பலமரைக்கார் தெருவிற்கு கிழக்கு (இத்துடன் சிறுபள்ளிக்கும் மஹ்லறாவிற்கும் இடையில் ஒரு சிறு பாதை உள்ளது.) இந்நான்கு திசைகளையும் உள்ளடக்கியிருக்கிற தென்வடல் காலடி 75, கிழமேல் தச்சுக் கோல் 45 அளவு கொண்ட நிலத்தை,

   மொகுதூம் முஹம்மது அவர்களின் குமாரர், அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் அவர்களிடமிருந்து ரூபாய் 300 க்கு கிரயம் வாங்கி, அல்லாஹ்வின் நற்கூலியையும், அண்ணல் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியையும் வேண்டியவனாக,சுவாதீனமும், நற்சுகமும் உள்ளவனாக இருக்கின்ற நிலையில், கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 'காதிரிய்யா' தரீகாவைச் சார்ந்தவர்களுக்காக வக்ஃப் செய்து, இத் திருத்தலத்திற்கு 'மஹ்லறத்துல் காதிரிய்யா' என்று பெயரிட்டிருக்கிறேன்.

   எல்லாம் வல்ல இறைவா! இதைப் புனிதத் தலமாக ஆக்குவாயாக!

இத்தலத்தை எவரேனும் விற்கவோ, வாங்கவோ செய்தால் யுகமுடிவு நாள் வரை அவருக்கு இறைவனின் முனிவு (சாபம்) உண்டாகட்டும்.

  இதே 'வக்ஃபு'க்கு கீழ்காணும் நபர்கள் சாட்சிகள். இறைவனே சாட்சிக்கும் பொறுப்புக்கும் மிகவும் மேலானவன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

                                                  இங்கனம்,
                     ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரிய்யில்பகுதாதி.
சாட்சிகள்:
1. தைக்கா செய்கு முஹம்மது ஸாலிஹ் லெப்பை – கலீபத்துல் குலஃபா த/பெ. தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு.
2. கிலுரு முஹம்மது – கலீபா த/பெ.செய்கு அப்துல் காதர்.
3. அஹ்மது முஹ்யித்தீன் – கலீபா த/பெ. மொகுதூம் முஹம்மது.
4. முஹம்மது சுலைமான் லெப்பை – கலீபா த.பெ. அப்துல்லா லெப்பை ஆலிம்
5. கதீபு காதர் சாகிபு – கலீபா த/பெ.அபூபக்கர் சாகிப்.
6. பாளையம் முஹம்மது அப்துல் காதர் லெப்பை – கலீபா
7. முஹம்மது சுலைமான் லெப்பை – கலீபத்துல் குலஃபா த/பெ. அப்துல் காதிர் நெய்னா லெப்பை
8. செய்கு  முஹ்யித்தீன் லெப்பை – கலீபா த/பெ. கல்லிடைக்குறிச்சி பீர் முஹம்மது லெப்பை
9. அப்துல் காதிர் த/பெ. அஹ்மது முஹ்யித்தீன்
10. முஹ்யித்தீன் தம்பி த/பெ. விளக்கு முஹம்மது
11. முஹ்யித்தீன் அப்துல் காதர் த/பெ. மீரா லெப்பை.

  இதைக் கட்டுவதற்கு மௌலானா அவர்களுக்கு அப்போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அவதூறு பேசினர். கொலை செய்யக் கூட முயன்றனர். திருநெல்வேலிக்கு மௌலானா அவர்கள் சென்றிருந்த சமயம் கொலை செய்ய வந்தவர்களுடன் வாள் சண்டை போட்டிருக்கிறார்கள். இது திருநெல்வேலி கெஜட்டிலும் பதிவாகியுள்ளது. தங்களுக்கு நடந்த சம்பவங்களை தங்கள் கைப்பட எழுதி 'அஹ்ஸனுல் அஃமால்' எனும் நூலில் பதிவு செய்துள்ளனர்.

   மஹ்லறா உருவாக பகுதாது மௌலானா அவர்களுக்கு ஆக்கமும், 
ஊக்கமும் அளித்த மூலகர்த்தாக்கள் பின் வரும் மூன்று இலட்சியங்களை இதற்கு வகுத்தளித்தனர்.   

1. அண்ணல் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கொண்டு நடத்திக் காட்டிய இஸ்லாமிய கலைஞானங்களை பரப்பும் பணியை – மத்ரஸாவை சிறப்புற நடத்துவது.
 
2.  கீர்த்திமிகு காதிரிய்யா தரீகாவின் திக்ரை தொடர்ந்து நடத்தி வருவது.
 
3. .நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை – மீலாது விழாவை கொண்டாடுவது.
 
4. அண்ணல் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் ரபீயுல் ஆகிர் மாதம் கந்தூரி விழா எடுத்து விருந்து உண்ணக் கொடுப்பது.

      1941 ஜூலை 18 அன்று அல்ஹாஜ் நஹ்வி செய்யிதகமது லெப்பை ஆலிம் முப்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மஹ்லறா அரபிக்கல்லூரி புணர் நிர்மாணம் செய்யப்பட்டது.
    1968 ம் வருடம் இந்தியன் சொஸைட்டி ரெஜிஸ்ட்ரேஸன் ஆக்ட்டில் சொஸைட்டியாக S1/1968ல் 'மஹ்லறத்துல் காதிரிய்யா சபை' என்று பதிவு செய்யப்பட்டது. சபையை நிர்வகிக்க அம்பலமரைக்கார் தெரு, சதுக்கைத் தெரு, குறுக்குத் தெரு, நெய்னார் தெரு, ஆராம்பள்ளித் தெரு, குத்துக்கல் தெரு ஆகிய தெருக்களைச் சார்ந்த  காதிரிய்யா தரீகாவைச் சார்ந்த மேஜரான ஆண்கள் மட்டுமே தகுதி வாய்ந்தவர்கள்.
    மஹ்லறா ஆலிம் என்று அழைக்கப்படும் செய்யிது இஸ்மாயில் ஆலிம் முப்தி  ஹஜ்ரத் அவர்கள் 1908 ம் வருடம் மறைந்து மஹ்லறாவின் முன் வாசலுக்கருகில் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளார்கள்.
  07-06-1971 திங்கள் கிழமை அரபிக்கல்லூரி தஹ்ஸீல் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு (8 பேர்) மௌலவி-ஆலிம் மஹ்லரி ஸனது முதன் முதலாக கிப்லா ஹஜ்ரத்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : கிப்லா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்     நினைவு மலர்.
                      மஹ்லறத்துல் காதிரிய்யா சபை சட்டதிட்டங்கள்.
                      அஹ்ஸனுல் அஹ்மால்


    மஹ்லறா அரபிக் கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட முக்கிய மார்க்க தீர்ப்புகள்.

1. 3,7,40 ம் நாள் பாத்திஹாக்கள் ஆகுமானது – மார்க்கத்திற்கு     உட்பட்டதுதான் என்று மார்க்கத் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
 
2. மஹ்லறா கலீபா கிலுருமுஹம்மது லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது கொடுக்கப்பட்ட 'காபிர்' பத்வாவிற்கு பதிலாக கொடுக்கப்பட்ட மறுப்பு பத்வா.
 
3. ஹழரத் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து உதவி தேடும் 'குத்பியத்'செய்வது ஆகும் என்று கொடுக்கப்பட்ட பத்வா.
 
4. 'ஜும்ஆ பத்வா'- ஒரே ஊரில் ஷாஃபி மத்ஹபு படி இரு ஜும்ஆக்கள் தொழுவது கூடாது என்று வழங்கப் பட்ட தீர்ப்பு


நடைபெறும் நிகழ்வுகள்.

கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள இதில் சுன்னத் – வல் – ஜமாஅத் அடிப்படையில் மார்க்கத்தை கற்றுகொடுக்கும் மத்ரஸா நடைபெறுகிறது. அத்துடன் ஹிப்ழு மத்ரஸாவும் நடைபெறுகிறது.

ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃபு ஓதி மீலாது விழா நடத்துதல்.

ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 14 வரை கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கந்தூரி வைபவம் :-  காலை கத்முல் குர்ஆன் ஓதி தமாம், மௌலிது ஷரீபு ஓதுதல்.

பிறை12,13 அன்று மாதிஹுல் கௌது ஹாமிது லெப்பை ஆலிம் அவர்கள் கோர்வை செய்த கௌது நாயகம் அவர்கள் மீதான வித்ரிய்யா ஓதப்படும்.

பிறை 6 அன்று மஹ்லறா நிறுவனர் செய்யிதினா அப்துல்லாஹில் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கந்தூரி

பிறை 6 முதல் 14 வரை இரவு மார்க்கச் சொற்பொழிவு பிறை 14 அன்று மாபெரும் விருந்து வைபவம் கந்தூரி இரவு காதிரிய்யா ராத்திபு.

ஓவ்வொரு வாரமும் பிரதி வியாழன் பின்னேரம் வெள்ளியிரவு, ஞாயிறு பின்னேரம் திங்களிரவு, மாதம் பிறை 14 ஆகிய நாட்களில் காதிரிய்யா ராத்திபு நடத்துதல்.

பிரதிவாரம் வெள்ளி புர்தா ஷரீபு ஓதுதல்.

ஹழரத் ழியாவுல் ஹக் ஸூபி ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் துல்ஹஜ் மாதம் பிறை 28 அன்று கந்தூரி வைபவம்.

Tags: abdullah moulana, ambalamaraikar street, arabic college, burdha, gilani, gouse pak, habeebur rahman hazrat, haliru baith, haziru, jeelani, jilani, kadiriya thareqa silsila, kandoori, kithuru muhammad lebbai alim, mahlari, mohideen, muhiyadeen, nahvi seyed ahamed lebbe, qiblahazrath, quadiriya thareeka, quthba periya palli, salih wali, seyed ismail alim, siru palli, sufi hazrath, sunnath jamath, thaika sahib wali, uroos, vithriya, zaviya, ziyaul haq sufi
 
Posted in காயல்பட்டணத்தைப் பற்றி | Comments Off
 
Beema Palli Sufi Manzil
Wednesday, February 10th, 2010

0 comments:

Post a Comment

Kindly post a comment.