Monday, April 22, 2013

”மனித கம்ப்யூட்டர்” சகுந்தலா தேவி பெங்களூரில் காலமானார் !

கணித மேதை சகுந்தலா தேவி(80) உடல்நலக் குறைவால் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

கடினமான கணக்குகளையும் மனதால் செய்து முடிக்கும் அபார ஆற்றல் கொண்டதால் "மனித கம்ப்யூட்டர்' என்று அழைக்கப்பட்டவர் சகுந்தலா தேவி. கடந்த சில வாரங்களாகவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்பட்டன.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டி.சி.சிவதேவ் தெரிவித்தார். சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், முதல்வர் ஷெட்டர், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகுந்தலா தேவி. அவரது தந்தை சர்க்கஸ் கலைஞராகப் பணியாற்றினார். சகுந்தலா தேவி தன் 3ஆவது வயதில் தந்தையோடு சீட்டுக்கட்டு விளையாடியபோதுதான் அவரிடம் ஒளிந்திருந்த கணிதத் திறமை வெளிப்பட்டது. அதன் பின், 6ஆவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனது கணித ஆற்றலை நிரூபித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணித நிகழ்ச்சி நடத்தி தான் ஒரு மழலை மேதை என்பதை நிரூபித்தார்.

சகுந்தலா தேவி 1971ஆம் ஆண்டில், 201 இலக்கங்கள் கொண்ட எண்ணின் 23ஆவது வர்க்கமூலத்தை மனதாலேயே கணக்கிட்டுக் கூறினார். 1980 ஜூன் மாதம், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையில், தலா 13 இலக்கம் கொண்ட இரு எண்களை 28 விநாடிகளில் பெருக்கி, விடையளித்தார். அவரது சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. எண்களுடன் விளையாட்டு, எண் ஜோதிடம், திகைக்க வைக்கும் கணிதம் உள்பட ஏராளமான கணித நூல்களையும் படைத்தவர் அவர்.                                

நன்றி :- தினமணி, 22-04-2013                                                                                                                                                

0 comments:

Post a Comment

Kindly post a comment.