Friday, April 12, 2013

அண்டார்டிகா என்னும் அதிசய பூமியும் கர்னல் கணேசனும் !


முதலில் தடம் பதித்த நார்வே நாட்டவர்


                   பனிப்பாலைவனமாகக் காட்சியளிக்கும் அண்டார்டிகா !

பூமி என்று தலைப்பிட்டு விட்டதால்,  முலலை, குறிஞ்சி நெய்தல் , பாலை, மருதம் என்ற ஐவகை நிலங்களுக்குள் முறைப்படுத்திவிடலாம் என்று எண்ணுவோமேயானால் அது தப்புக் கணக்காகிவிடும். .அண்டார்டிகாவில் சுமார் 5000 மீட்டர் ( 16,000 அடி ) அளவிற்குத் தரையில் ஆழ் துளையிட்டால்தான் மண்ணைப் பார்க்கமுடியும். ஏனெனில்,
98 விழுக்காடு பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது பலகோடி ஆண்டுகளாக உருகாத பனிப்பாலைவனமாக அண்டார்டிகா விளங்குவதால் எப்பொழுதும் தாங்க முடியாத குளிட்மிகு சீதோஷ்ண நிலையியே இருக்கும். அண்டார்டிகா. நாம் வாழும் பூமிப் பந்தின் தென்  துருவத்தில் அமைந்துள்ளது.உலகின் 7-வது கண்டம் எனவும் அழைக்கப்படுகின்றது. 14.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு, ஐந்தாவது பெரிய கண்டமாகவும் திகழ்கின்றது. உலகில் உள்ள தண்ணீரில் 68 விழுக்காடு அண்டார்டிகாவிலேதான் உள்ளது. ஒரு துளி மழை கூடப் பெய்யாத இடம் எதுவென்ற வினா எழுப்பினால்,  அண்டார்டிகா என்று உடனே தயக்கம் எதுவுமின்றித் தாராளமாக விடையளிக்கலாம்..  உலகிலேயே கொடுமையான குளிரும் ( 89 டிகிரி ஷெல்சியஸ் ), பனிக்காற்றும்  ( 1300 Km/Hr ) நிறைந்து, ஒரு உலக அதிசயமாகத் திகழும் அண்டார்டிகாவில், எந்தவித உயிரினங்களும் நிலையாக வாழ்வதுமில்லை.

                                          பனிப்புயலும் சூறாவளிக் காற்றும்.


கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பனிப்படலமாகக் காட்சியளிக்கும் அண்டார்டிகா, முதலில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியைத் தோற்றுவித்தாலும், தொடர்ந்து தங்கிப் பார்க்கும் நிலையில், விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். அண்டார்டிகாவில் பனிப்புயல் ( Bizzard ) 300 கி.மீ. வேகம் வீசும். Guts  எனப்படும் சூறாவளி சுழன்று சுழன்று வீசும். மிகவும் இதமான சீதோஷ்ணநிலை போல் தோன்றும் நிலை சுமார் அரைமணி நேரத்திற்குள் உயிருக்குப் போராடும் பனிப்புயலாகவும் மாறிவிடும் அபாயமும் உண்டு.. குளிரைவிடப் பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகம் என்று கூறலாம்.    

                                         பனிப்பிளவுகள் தோற்றுவிக்கும் மரணம்

   
பூமியில் அதிர்ச்சி அல்லது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாளங்களில் பிளவுகள் உண்டாகும். உடைந்த பகுதி கடற்கரை நோக்கி மெல்ல நகரும். அதுசமயம் குளிரின் தாக்கம் அதிகமானால், நகர்ந்த பாளங்கள் அப்படியே நிற்க, புதிதாக விழும் பனியானது அப்பிளவுகளை இலேசாக மூடிவிடும். இதனை பனிப்பிளவு அல்லது Crevasse என்கின்றனர். எச்சரிக்கை உணர்வின்றி, இதன்மீது கால் வைத்துவிட்டால், அந்த நபர் அதலபாளத்தில் விழுந்து உடனடி உறைதல் காரணமாக ( Hypothermia ) உறைந்து போய்விடுவார்.

        கண்ணாடித் துண்டுகளுக்கு இணையான கத்திபோன்ற பனிப்பாளங்கள்.



பனிப்புயலின் வேகத்தால் உறைபனிப்பாளங்கள் பல்வேறுவிதங்களில் சீவி விடப்படுவதால், பனிப்பாளங்கள் சமதரையாக இல்லாமல் மேடு பள்ளமாகவே இருக்கும். அவற்றின்மீது நடக்க முற்பட்டால், உடைந்துபோன கண்ணாடித் துண்டுகள்போல் கால்களைக் கிழித்து விடும்.                                  

        விண்ணையும் பனிப்பரப்பையும் இணைக்கும் வெண்பனிப் படலம்.



பரிசுத்தமான இடமாகவும், வெண்பனி தவிர வேறு செடி கொடிகள் இல்லாமலிருப்பதாலும், வெகுதூரப் பார்வையில், வானில் தோன்றும் Sky Halos, மனிதர்கள் இதுவரை கண்டிராத அதியற்புதமான மாயத்தோற்றத்தால் மனதைக் குழப்பும். விண்ணுக்கும் தரைக்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்குக் காணப்படும் வெண்பனிப்படலத்தால்,, பனித் தரைமீது கவனமின்றிக் கால் வைத்தால் பள்ளத்தில்தான் விழவேண்டும். இச்சூழலில் ஹெலிகாப்டர் விண்ணில் பறக்கவும் முடியாது.                                          

                  மின்காந்த அலைகள் விளைவிக்கும் ஹோலி விளையாட்டு



தென்துருவப்பகுதியில் பூமியில் மின்காந்த இயக்கம் மிகவும் பலவீனமாக இருப்பதால், சூரியக் கதிர்கள் பூமிக்கு மிக அருகாமையில் வந்து விடுகின்றன.பூமி வட்டத்திற்குள் வரமுடியாமல், பூமியின் மின் காந்த அலைகளுடன்வெகு சமீபத்தில் மோதி வித விதமான ஒளிக்கற்றைகளை உமிழ்கின்றன. இவை நம் ஊர்ப்பக்கங்களில் ஹோலிவிளையாட்டைப் போன்று  வித விதமான வண்ணப்பொடிகளை  அண்டார்டிகாவின் மேல்பரப்பில் வானம் முழுவதும் தூவி வேடிக்கை  காட்டுவது போன்று இருக்கும்.
       
               அண்டார்டிகாவில் முதலில் தடம் பதிதோர் வரலாறு                                     





 
அண்டார்டிகா குறித்து அறிந்திராத நாட்களிலேயே, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உலகின் தென் துருவம் நோக்கிப் பயணிக்க முற்பட்டன.

Roald Arnundsen என்னும் பெயருடைய நார்வே நாட்டைச் சேர்ந்தவர், 14, டிசம்பர், 1911 -இல் பகல் 3 மணியளவில், தென் துருவத்தில் கால் பதித்துத் தன் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.

அதே சமயம் அவருக்கு இணையாக வேறு ஒரு பாதையில் பயணத்தைத் துவக்கிய, இங்கிலாந்தைச் சேர்ந்த Robert Fatcon Scott  என்பவர், 17, ஜனவரி 1912-இல் தென் துருவத்தை அடைந்தார். அங்கே நார்வே நாட்டு கொடி பறப்பதைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார். மன விரக்தியில் திரும்பிய ஸ்காட்டும் அவருடன் பயணித்த நால்வரும் பனிப்புயலில் சிக்குண்டு இறந்துபோனார்கள். பின்னாளில் தாங்கள் அமைத்த ஆய்வு தளத்திற்கு அமெரிக்கா, Amundsen scott  என்று பெயர் சூட்டி இருவரையுமே கெளரவித்தது.


 
அண்டார்டிகாவை அடையவில்லை என்றாலும், அதன் ஆய்வு வரலாற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த Sir Ernest Henry Shackleton என்பவரே பெரிதும் பாராட்டப் பெறுகிறார்.மூன்று முறை முயன்றும் துருவத்தை அடைய இயலவில்லை. மூன்றாவது முயற்சியில் அவரது கப்பல் உறைபனியில் சிக்கி உடைந்துபோனது. 27 பேர்கள் கொண்ட குழுவினரை இரு சிறிய படகுகளில் ஏற்றி 522 நாட்கள் ஆழ்கடலில் போராடி, எல்லோரையும் எப்படித் திருப்பிக் கரை சேர்ந்தார் என்பது இன்றளவும் தொடர்ந்திடும் அதிசய வீர சாகசச் செயலாகும் மீண்டும் நான்காவது முறையும் அண்டார்டிகா பயணத்தைத் தொடர்ந்த Shackleton. அவர் பயணித்த கப்பலிலேயே மாரடைப்பால் காலமானார். அப்பொழுது அவரது வயது, 42.                                                     

                      அண்டார்டிக்காவில் உலகநாடுகளின் ஆய்வுக் கூடங்கள்

இங்குள்ள இயற்கை வளங்களில் எதிர்காலத்தில் தங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று பலம் பொருந்திய நாடுகள் முயல்கின்றன. 1968-ஆம் ஆண்டு மிக விரிவான எல்லைப் புறங்களுடன் உலகிற்கு அறிமுகமானது, அண்டார்டிகாவான இந்தப்   பனிப் பிரதேசம்.

சிறிதும் பெரிதுமாக 50 ஆய்வுப் பயணங்களை உலக நாடுகள் அவ்வப்பொழுது மேற்கொண்டன. ஆய்வு தளங்களையும் நிறுவின.தற்பொழுது 60 நாடுகளுக்குச் சொந்தமான ஆய்வு தளங்கள் அண்டார்டிகாவில் உள்ளன.

காலையில் சூரியன் தோன்றுவதும், மாலையில் மறைவதும் பூமியின் சுழற்சியால் அறியப்படும் ஒரு தோற்றமே ஆகும். அனால், உண்மையில் சூரியன் உதிப்பதுமில்லை; மறைவதுமில்லை. 

அதுவும் அண்டார்டிகாவில், 6 மாதங்கள் வெளிச்சமாகவும், 6 மாதங்கள் இருட்டாகவும் இருக்கும். இந்நிகழ்வு, அறிவியலார் மனதில் ஓர், Biological disturbance-- ஐ ஏற்படுத்துகின்றது. உலகிலேயே கொடுமையான பனிக்காற்றும், குளிரும் கொண்ட பகுதியானதால், ஆய்வுக்கான செலவுகளின் தொகை அதிகமாகும்..  

கோடை காலத்தில் கடல் சற்றே உருகுவதால் கப்பலில் பயணித்து அண்டார்டிகா கரையை அடைய முடியும். அண்டார்டிகாவில்,  நவம்பர் முதல் மார்ச் வரை கோடைகாலமாகும். ஜுன் மாதம் 21 தேதி Mid Winter Day- என்ற பெயரில் அங்குள்ள ஆய்வுதளத்தினர் கொண்டாடுவர். அங்கு பாக்டீரியாக்களே இல்லாததால் எப்பொருளும் கெட்டுப்போவதில்லை. ஆய்வு தளங்களில் உள்ள வசதிக்கேற்ப உணவு தயாரிக்கப்படுகிறது. அல்லது அவரவர் நாட்டில் உள்ள உணவு ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்பட்ட "Ready To Eat" உணவு வகைகளைத்தான் பயன்படுத்திக் கொள்ள இயலும். .பன்னாட்டு நிறுவன ஒப்பந்தத்தின்படி ( Internarional Treaty on Antarctica )  ஆய்வுக்கழிவுகள் அனைத்தும் பூமத்தியரேகைப் பக்கம் பயணிக்கும் பொழுது கடலில் கொட்டிவிட வேண்டும் எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல                               

                        அண்டார்டிகா ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பு   


                                                



M.V.Polar Circle -என்ற வாடகைக் கப்பலில், 21 பேர்களடங்கிய முதற் குழு, Secretary, Department of Ocean Development -ஆக இருந்த Dr. S.Z.Quasim தலைமையில், 06-12-1981 -ஆம் ஆண்டு புறப்பட்டுச் சென்று, அண்டார்டிகாவில் 10 நாட்கள் தங்கி ஆய்வு செய்துவிட்டுத் திரும்பினர். இதற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் துணிச்சலான முடிவே முக்கிய காரணமாகும். 

அடுத்த ஆண்டு இரண்டாவது குழு சென்று இந்திய ஆய்வு தளத்திற்கான இடத்தைத் தேர்வு செய்து திரும்பினர். 1983 ஆம் ஆண்டு மூன்றாவது குழு புறப்பட்டது. அவர்களுடன் வருடம் முழுவதும் அங்கு தங்கி ஆய்வு நடத்தும் ஒக்கத்துடன் தேர்வு செய்யப்பட்ட முதல் குளிர்காலக் குழுவும்  
(  First Wintering Party ) சென்றது.

இந்தியாவின் முதல் ஆய்வுதளம், 70 டிகிரி S மற்றும் 12 டிகிரி.05E என்ற அட்சய, தீர்க்காம்ச ரேகை சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த Structa Ply என்ற நிறுவனம் இந்த ஆய்வு தளத்தை வடிவமைத்துத் தந்ததுடன், இந்தியர்களுக்குத் தேவையான பயிற்சியையும் அளித்து வழிகாட்டியது. 24 பிப்ரவரி 1983 அன்று இந்த ஆய்வு தளம் இயங்கத் துவங்கியது.இந்த ஆய்வு தளத்ற்கு . “தக்‌ஷிண் கங்கோத்ரி” என்று பெயரிடப்பட்டது.11 பேர் கொண்ட குளிர்காலக் குழு செயல்படத் துவங்கியது.
1983-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை இது செயல்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 80 பேர் கொண்ட ஆய்வுக் குழுவும், 15-20 பேர்களடங்கிய குளிர்காலக் குழுவும் நவம்பர் மாதம் புறப்பட்டு 20-25 நாட்கள் கடல்வழிப் பயணத்தின் மூலம் இங்கு சென்றடைவர். குளிர்காலக் குழு ஆண்டு முழுவதும் பணியாற்ரும். மற்ற குழு கோடைகாலம் மட்டும் ஆய்வினை மேற்கொள்ளும். மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தக்‌ஷிண் கங்கோத்ரி ஆய்வாளர்கள் இந்த உலகத்தில் ரேடியோ / தொலைபேசு தொடர்பு தவிர வேறு தொடர்பு எதுவுமின்றிப் பணியாற்றுவார்கள்.

அண்டார்டிகாவின்  ஆபத்துடன் கூடிய அதிசயச் சூழலையும், இயற்கையின் இரகசியங்களத் தெரிந்து கொள்ளப் போராடும் மானுடம் அண்டார்டிகாவையும் விட்டுவைக்கவில்லை என்பதையும், இந்தியாவும் நாங்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்டிட், தென்துருவப் பனிப்பாலைவனப்பகுதியில் ஆய்வுக்கூடத்தை நிறுவியதையும் இவ்வளவு விரிவாக,எடுத்துரத்திட வேண்டிய அவசியம் என்ன ?


விவசாயக் குடும்பத்தில் பிறந்த கணேசன் கர்னல் கணேசனாக உயர்ந்த உண்மை வரலாறு

திருவாரூர் மாவட்டம், சன்னாநல்லூர் என்ற கிராமத்தில், பாவாடை-தெய்வானை என்ற விவசாயத் தம்பதியருக்கு நான்காவது வாரிசாகப் பிறந்த சாதாரண விவசாயி கணேசன், கர்னல் கணேசனாக இராணுவ உயர் அதிகாரியாக உயர்ந்த உண்மை வரலாற்றையும், 

அண்டார்டிகா ஆய்வுக் குழுவின் தலைவராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றித் திரும்பிய வீரசாகசச் செயலையும், 

தற்பொழுது பணிவிடை பெற்றபின் அவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதையும்,

50 கோடி வருடங்களாக உறைபனியால் மூடப்பட்டுக் கிடந்த சுமார் 400-500 கிலோ எடையுள்ள கற்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்து 5 இடங்களில் அகத்தூண்டுதல் நினைவுப் பூங்கா / தூண்களை அமைத்ததையும் அடுத்த  பாவையர் மலரில் விரிவாகக் காண்போம். , 




நன்றி :- அண்டார்டிகா குறித்த கர்னலின் நூல்கள்

                  கணினியில் கிடைத்த அண்டார்டிகா படங்கள்

 நன்றி :-பாவையர் மலர் 

ஆசிரியர் 

 வான்மதி,

pavaimathi@yahoo.com

mwccvm@yahoo.com

044 /2596 4747

1 comments:

  1. I thank you for the great info about Antartica and the heroic history of Mr.Pavadai Ganesan, rtd colonel-Indian Army.

    ReplyDelete

Kindly post a comment.