Friday, April 12, 2013

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில் அலைச்சறுக்கு விளையாட்டுகள் !



First Published : 10 April 2013 01:03 PM IST தினமணி

மணப்பாடு கிராமம் உலகச் சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறும் அளவுக்கு தரம் உயர்த்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் குலசேகரன்பட்டிணம்,மணப்பாடு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செயவதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார் செவ்வாய்கிழமை வந்தார்.

மணப்பாட்டில் அலைச்சறுக்கு விளையாட்டினை (வாட்டர் சர்பிங்) துவக்கி வைத்த ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வாட்டர் சர்பிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டுமையம் மணப்பாட்டில் அமைக்கப்படும். இதில் வாட்டர் சர்பிங் விளையாட்டில் வாட்டர் ஸ்கூட்டர்ஸ், ஸகூபா டைவிங், கைட் போர்டிங், பாராகிளைடிங் என பல்வேறு விளையாட்டுகள் உள்ளன.

இந்த விளையாட்டு மையங்களை மணப்பாட்டில் அமைப்பதன் மூலம் மணப்பாடு கிராமத்தில் அடிப்படை வசதிகள், பொருளாதாரம், ஆகியவை மேம்படும். இதன் மூலம் உலகச் சுற்றுலா வரைபடத்தில் மணப்பாடு இடம்பெறும். இதற்கு உள்ளூர் மக்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இதற்கு மாவட்ட விளையாட்டு மையமும், சுற்றுலாத்துறையும் இணைந்து பணிகளை மேற்கொள்ளும். மேலும் மணப்பாட்டில் இதன்மூலம் வேலைவாய்ப்புகள், முன்னேற்றம் ஆகியவை அதிகரிக்கும் என கூறினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் குலசேகரன்பட்டிணம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட செய்தித் தொடர்பு அலுவலர் தமிழ்இனியன், துணைச் செய்தி தொடர்பாளர் குமார்,திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன், கோட்டாட்சியர் கொங்கன்,மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரதீப்,கிராம நிர்வாக அலுவலர் நடராஜன், வருவாய் அலுவலர் இசக்கிதுரை,உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி மல்லிகா, துணைத்தலைவர் ராஜதுரை, உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் இ.தமிழ்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் பிரதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கு சுற்றுலவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒன்பது வெளிநாட்டினர் மணப்பாட்டில் அலைச்சறுக்கு விளையாட்டினை மகிழ்வுடன் விளையாடி வந்தனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார் அலைச்சறுக்கு விளையாட்டினை மணப்பாட்டில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டறிந்தார்.

ஹவாய் தீவில் இருந்து வந்திருக்கும் எரிக் என்பவர் கூறும்போது, மணப்பாடு கடல் அலைகள் வாட்டர் சர்பிங்(அலைச்சறுக்கு) விளையாட்டிற்கு ஏற்றதாக உள்ளது. நாங்கள் ஒரு குழுவாக வந்திருந்து இவ்விளையாட்டினை அனுபவித்து விளையாடி வருகிறோம் என தெரிவித்தார்.

இவர்களுடன் இந்தியாவின் முதல் தொழில் பெண் சர்பிங் பயிற்றுநர் இஷிதா மாளவியாவும் வந்திருந்தார்.

 தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு  கடலில் அலைச்சறுக்கு விளையாட்டுகள்



நன்றி :- தினமணி,

0 comments:

Post a Comment

Kindly post a comment.