Wednesday, April 10, 2013

மேட்டூர் அணைப் பகுதியில் வெளியில் தெரியும் கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டைக் கோபுரங்கள்.!

                        மேட்டூர் அணை வறண்டு போனதால், அணைக்குள் இருக்கும்  

                        நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தின் 

                                இரட்டைக் கோபுரங்கள் வெளியில் தெரிகின்றன.

மேட்டூர் அணை கட்டுமானப் பணியின் போது, அந்தப் பகுதியில் இருந்த கிராமத்தினர் வேறு இடத்துக்கு குடியமர்த்தப்பட்டனர். அப்போது, அந்தக் கிராம மக்கள் வழிபட்டு வந்த கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பழைமை வாய்ந்த கோட்டைகள் ஆகியவை அணையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கின.

குறிப்பாக, கோட்டையூர் பகுதிகளில் இருந்த திப்புசுல்தான் கோட்டைகள், பண்ணவாடியில் ஜலகண்டேஸ்வரர் கோயில், கிறிஸ்தவ ஆலய இரட்டை கோபுரங்கள், கீரைக்காரனூரில் சோழப்பாடி வீரபத்திரன் கோயில், சாம்பள்ளியில் மீனாட்சியம்மன் கோயில் ஆகியவை அணைக்குள் மூழ்கின.

அணையின் நீர்மட்டம் உயரும் போது, இந்த ஆலயங்கள் வெளியில் தெரியாது. ஆனால், நீர்மட்டம் குறையும் போது, இந்தக் கோயில்கள், தேவாலயங்கள் வெளியில் தெரியும். இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இப்போது 26 அடியாகக் குறைந்ததால், தண்ணீரில் மூழ்கியிருந்த பண்ணவாடி பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டைக் கோபுரங்கள் ஆகியன முழுமையாக வெளியில் தெரிகின்றன.

நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டைக் கோபுரங்கள் பல ஆண்டுகள் தண்ணீரில் மூழ்கியிருந்தாலும், அதன் கட்டுமானத் தன்மையின் சிறப்பால், எந்தவித மாற்றமும் அடையாமல் உறுதியாக உள்ளது.

காவிரியில் நீர்வரத்து குறைந்திருப்பதால், தருமபுரி மாவட்டம், நாகமரை பகுதியில் உள்ள வறண்ட காவிரி ஆற்றுப் பகுதியில் விவசாயிகள் சோளப் பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். மேலும், அந்த வழியாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்குப் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.


நன்றி :- தினமணி, 10-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.