Sunday, April 7, 2013

மாநில விருது முன்னே ; தேசிய விருது பின்னே !

"தேசிய விருது வழங்கப்படுவதற்கு முன்பே மாநில விருது வழங்கிக் கௌரவித்துவிட வேண்டும்'' என்று "தினமணி' ஆசிரியர்
கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.

தினமணியும் தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கே. வைத்தியநாதன் பேசியதாவது:

ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கும் போதெல்லாம் எனக்கு மன வருத்தம் ஏற்படுவதுண்டு. சிலருக்குத் தேசிய விருது வழங்கப்பட்ட பிறகு மாநில விருது வழங்கப்படுவதுதான் அதற்குக் காரணம்.

உதாரணமாக, எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த பிறகுதான் "கலைமாமணி' விருது கிடைத்தது.சாகித்ய அகாதெமி விருது காலதாமதமாகத் தரப்பட்டதுகூட எனக்கு வருத்தமில்லை. அவருக்கு "கலைமாமணி' விருது ஏன் அதுவரை தரப்படாமல் இருந்தது என்பதுதான் எனது ஆதங்கம். தில்லி அடையாளம் காட்டித்தானா, நமது எழுத்தாளர்களின், கலைஞர்களின், சமூகத் தொண்டர்களின் சிறப்பும் அருமையும் நமக்குத் தெரிய வேண்டும்?

மாநில அளவில் அறியப்படாத ஒருவரை நிச்சயமாக தேசிய விருதுக்கு தேர்ந்தெடுத்திருக்க முடியாது எனும்போது, மாநில அளவில் அவர்கள் முதலில் பாராட்டப்பட்டிருக்க வேண்டாமா?

நமது மாநிலத்தில் உள்ள சாதனையாளர்களை, சமூக சேவகர்களை, கலைஞர்களை, படைப்பாளிகளை நாம் அடையாளம் காணாமல் இருந்து, அவர்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்றால் அது நமக்கு இழுக்கு.

இனிமேலாவது அவர்கள் தேசிய விருதுகளைப் பெறுவதற்கு முன்பே திறமைசாலிகளையும், சாதனையாளர்களையும் அடையாளம் கண்டு தமிழக அரசு விருதுகளை வழங்கிவிட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.  "மாநில விருது முன்னே, தேசிய விருது பின்னே' என்கிற நிலைமை உருவாக வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கு விருது வழங்கப்பட்டாலும், சினிமா விருதானாலும் பத்ம விருதானாலும் தில்லித் தமிழ்ச் சங்கம் அவர்களை அழைத்துப் பாராட்டி மகிழ்கிறது. விருது பெற்றதைவிட தில்லித் தமிழ்ச் சங்கத்தால் பாராட்டப்படுவதில் அவர்கள் அதிக மகிழ்ச்சி அடைவதை நான் நேரில் பார்க்கிறேன்.

அதுபோல, விருது பெறுவோருக்கு அவரவர் பிறந்த மாவட்டத்தில் ஒரு பாராட்டு விழா நடத்த  வேண்டும். அப்போதுதான், மண்ணின் மைந்தரான அவர்களின் சாதனையைப் பார்த்து, "இதுபோன்று நாமும் சாதனையாளராகி பாராட்டு பெற வேண்டும்' என அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கம் ஏற்படும். விருதுகள் யாருக்கு வழங்கப்பட்டாலும் அவர்கள் பிறந்த மண்ணில் அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு போல, இந்த முறையும் இதே மேடையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

இவ்விழாவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கச் செயலர் இரா.முகுந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் வடிவேலு முகுந்தன், முன்னாள் எம்பி கார்வேந்தன், தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி, இணைச் செயலர் பெ. ராகவன் நாயுடு, பொருளாளர் ப. அறிவழகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  துணைத் தலைவர் ரமாமணி

சுந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.                                                             

நன்றி :- தினமணி, 07-04-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.