Monday, April 8, 2013

சென்னை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்- ஜெ.

டெல்லி: மாநில மொழிகளில் வழக்கு நடவடிக்கைகள் இருந்தால்தான் அது மக்களுக்குப் புரியும். எனவே மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா. மாநாட்டில் முதல்வர் சார்பில் உள்ளாட்சி, சட்டம், கோர்ட், சிறைத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அவர் முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

நமது நாட்டின் மாபெரும் தலைவர்கள் தோற்றுவித்த சட்ட நெறிமுறைகளின்படி நமது நாடு ஜனநாயகப் பாதையில் இயங்கி வருகிறது. சட்டமன்றம், நிர்வாகம், நீதி ஆகிய மூன்றும் 3 தூண்களாக மாநிலங்களில் விளங்குகின்றன. இந்த 3 அமைப்புகளும், தனித்தனி அதிகாரம் கொண்டவையாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றி வருகிறது. அரசியல் சட்டத்தில் உறுதி அளித்துள்ளபடி நாட்டு மக்கள் அனைவருக்கும் சம நீதி, சுதந்திரம் போய்ச் சேர வேண்டும். நம் நாட்டின் கடந்த 65 ஆண்டு கால ஜனநாயக பயணத்தில் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகள் மூலம் நீதித்துறை தலை நிமிர்ந்து நிற்கிறது. இதைத் தமிழகம் நன்கு உணர்ந்துள்ளது.

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தீர்வு காண 20 ஆண்டுகளாகப் பல்வேறு வகையில் போராடினோம். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால்தான் காவிரி நடுவர்மன்ற உத்தரவு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. தற்போது நடைபெறும் மாநாட்டின் மூலம் நாடு சந்திக்கும் பல்வேறு பிரச்சினையில் பெரும்பான்மை மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் எதிர்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். ஏழைகளை சட்ட ரீதியில் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு விரைவான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.

தமிழகத்தில் எனது தலைமையிலான அரசு நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. இதற்காக 2013-14 நிதி நிலை அறிக்கையில் ரூ.695 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் நீதிமன்ற கட்டிடங்கள், நீதித்துறையில் பணியாற்றிபவர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட இதர கட்டமைப்புகளுக்காக ரூ.162.13 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 857 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 87.28 சதவீத கோர்ட்டுகள் சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. 12.72 சதவிதம் மட்டுமே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அவற்றுக்குச் சொந்தக் கட்டிடங்கள் கட்ட ரூ.222.44 கோடி தேவைப்படுகிறது. தமிழக அரசு தனது சொந்த நிதியில் இருந்து சொந்தக் கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது.

2010-11, மற்றும் 2011-12-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவே இல்லை. 2012-13-ம் ஆண்டுக்கு வெறும் ரூ.19.53 கோடி நிதி மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 2013-14-ம் ஆண்டுக்கு ரூ.70 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் 2016-ம் ஆண்டுக்குள் அனைத்து கோர்ட்டுகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்ட முடியும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கோர்ட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கடந்த 2 நிதி ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு 105 புதிய கோர்ட்டுகளைத் தொடங்கியுள்ளது. இதில் 60 கோர்ட்டுகள் நில அபகரிப்பு வழக்குகள், வாகன விபத்துகளில் இழப்பீடு பெற்றுத்தருவதற்கான கோர்ட்டுகள் ஆகும். 33 குடும்ப நல மற்றும் மகளிர் கோர்ட்டுகள், 12 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கள் மற்றும் மாவட்ட முன்சீப் கோர்ட்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. 56 மாலை நேர கோர்ட்டுகள் செயல்படும் நிலையில் மேலும் 90 மாலை நேர கோர்ட்டுகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கோர்ட்டுகள் தொடங்கும் போது மேலும் நீதிபதிகளை நியமிக்க வேண்டிய தேவை உருவாகி உள்ளது.

2012-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 167 சிவில் நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கீழ் கோர்ட்டுகளில் பெரும்பாலான காலி இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதே அடிப்படையில் 2013-ம் ஆண்டிலும்
நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இது போதுமானாக இல்லை. சார்நிலை கோர்ட்டுகளில் மேலும் நீதிபதிகள் தேவைப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கும் வகையில் 1992-ம் ஆண்டில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கினேன். தமிழ் நாட்டில் அனைத்து சப்-டிவிஷன்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இது விசாரித்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெண்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதற்காக 13 அம்ச திட்டத்தை அறிவித்துள்ளேன்.

அவை வருமாறு:- - பெண்களுக்கு எதிரான ‘பாலியல்' கொடுமையை மிகப்பெரிய குற்றமாக கருதி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பெண் போலீஸ் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தபடுகிறது. - இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலனாய்வு முடியும் வரை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் டி.ஐ.ஜி.க்கள் மூலம் விசாரணை நடைபெறுகிறது. - புலன் விசாரணை மற்றும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகள் மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கள் மூலம் மறு ஆய்வு செய்யப்படுகிறது. அதன் அறிக்கையை சட்டம்- ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கு 15 நாட்களுக்குள் சமர்பிக்கப்படுகிறது. - பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. - பாலியல் கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவில் விசாரித்து முடிக்க அனைத்து மாவட்டங்களில் அதிவிரைவு மகிளா (பெண்கள்) கோர்ட்டுகள் தொடங்கப்பட உள்ளது. - இந்த கோர்ட்டுகளில் அரசு வக்கீல்களாக பெண் வக்கீல்கள் நியமிக்கப்படுகிறார்கள். - வழக்கை விரைவில் முடிக்க இது போன்ற வழக்குகளை தினசரி விசாரிக்கப்படுகிறது. - பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க செய்யும் வகையில் மத்திய அரசு இச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். - பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்க போலீஸ் பயிற்சி நிறுவனங்கள் பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். - பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளையும் மேற்கொள்ளும். - பெண்களுக்கென்று ஒரு ஒருங்கிணைந்த டெலிபோன் சேவை தொடங்க வேண்டும். - பொது கட்டிடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவை அரசு அமைத்துள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றம் இழைப்பவர்களை கண்டு பிடிக்க உதவியாக உள்ளது. - பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க பொது இடங்களில் சாதாரண உடை அணிந்த போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் கீழ் மாநில மொழிகளில் கோர்ட் நடவடிக்கைகள், தீர்ப்பு கள் வழங்க உரிமை அளித்துள்ளது. இதுபோல் 4 மாநிலங்களில் மாநில மொழிகளில் கோர்ட் நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக கொண்டுவர வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்த பதிலில் அது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. மாநில மொழிகளில் வழக்கு நடவடிக்கைகள் இருந்தால்தான் அது மக்களுக்கு புரியும். எனவே மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

நன்றி :-ஒன் இந்தியா, 08-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.