Monday, April 29, 2013

மதுரை காந்தி அருங்காட்சியகச் செயலர் மு.மாரியப்பன் மறைவு !



மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் செயலரும், சர்வோதய இலக்கியப் பண்ணைத் தலைவருமான வழக்குரைஞர் மு.மாரியப்பன் (75),  மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) காலை மாரடைப்பால் காலமானார்.

வழக்குரைஞர் பணியில் 50 ஆண்டுகால ஆழ்ந்த அனுபவம் உள்ள அவர், தமிழறிஞர்களான ம.பொ.சி., தெ.பொ.மீ, மு.வ. ஆகியோருடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவர். மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தின் எல்லைகளைக் காப்பதற்கான போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், கல்லூரி மாணவராக இருந்த மாரியப்பன், ம.பொ.சி.யின் உரையால் ஈர்க்கப்பட்டு அவரது தமிழரசு கழகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, ம.பொ.சியும், மாரியப்பனும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக இருந்து பணியாற்றினர். சட்ட மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.யுடன் அமெரிக்கா செல்வதற்காக மாரியப்பனை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்து அனுப்பினார். ம.பொ.சியுடனான நெருக்கம் காரணமாக அவரது இறுதி காலம் வரை அவருடன் இருந்தார். ம.பொ.சி. உடனான தொடர்பை விளக்கும் வகையில், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன் என்ற நூலை மாரியப்பன் எழுதியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான தெ.பொ.மீனாட்சிசுந்தரனாருடன் இணைந்து பல்கலையில் காந்திய சிந்தனை துறை தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். அதைத்தொடர்ந்து துணைவேந்தர் மு.வ. காலத்திலும் காந்திய சிந்தனைத் துறை சிறப்பாகச் செயல்படுவதற்கு உதவியாக இருந்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், மதுரை மாநகராட்சி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், வங்கிகளுக்கு சட்ட ஆலோசகராக இருந்துள்ளார். இறால் பண்ணை எதிர்ப்பு வழக்கில் சட்ட ஆலோசகராக இருந்தார். அமெரிக்கா, இத்தாலி, இலங்கை, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலும் காந்தியம் பரவ பாடுபட்டவர். சர்வோதயம் மலர்கிறது என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தார். புதுதில்லியில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார்.

அவருக்கு மனைவி திலகவதி, மகன் வழக்குரைஞர் செந்தில்குமார், மகள்கள் காயத்ரி, பிரியா ஆகியோர் உள்ளனர். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் (பிளாட் எண் 355) வைக்கப்பட்டுள்ளது. சர்வோதய, காந்திய நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 94422 28930.             

நன்றி :- தினமணி, 29-04-2013                                                                                             

0 comments:

Post a Comment

Kindly post a comment.