Sunday, April 14, 2013

விசாரணை முடிந்த பிறகும் வாசிக்கப்படாத தீர்ப்புகள் !

இந்தியாவில் உயர் நீதிமன்றங்களில் விசாரணை முழுமையாக முடிந்த பிறகும்கூட பல வழக்குகளில் மாதக் கணக்கில் தீர்ப்புகள் வாசிக்கப்படாத நிலை நிலவுகிறது.

அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தாதது; ஏற்கெனவே உள்ள நீதிபதிகள் இடங்களும் ஏராளமாக காலியாக இருப்பது; போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களை நியமிக்காதது; அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் இருப்பது; வழக்குரைஞர்களின் போராட்டம் இப்படிப் பல காரணங்களால் இந்தியாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில்  இலட்சகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

விசாரணை முழுமையாக முடிந்த பிறகும் கூட நீதிபதிகள் உரிய காலத்துக்குள் தீர்ப்பை வாசிக்காததாலும் வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

கொலைக் குற்றம் உள்ளிட்ட வெவ்வேறு குற்றங்களுக்காக 9 பேருக்கு தண்டனை வழங்கி கடந்த 4.5.1991 அன்று ஒரு செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் 23.8.1995 அன்று விசாரணை முழுமையாக முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு நாள்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் என ஓடின. ஆனால் தீர்ப்பு மட்டும் வரவே இல்லை.

இதற்கிடையே சிறையில் இருந்த 9 பேரில் ஒருவர் இறந்தே போனார். இறுதியாக இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வில் ஒருவரது பதவிக் காலம் முடியும் தேதி நெருங்கியதை அடுத்து, 14.8.1997 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், ஆர்.பி.சேத்தி ஆகியோர், விசாரணை முடிந்த பிறகும்கூட உரிய காலத்துக்குள் தீர்ப்புகளை எழுதாத சில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நடவடிக்கையால் இந்திய நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை தளர்ந்து போகும் என எச்சரித்தனர். மேலும், ஒரு சில நீதிபதிகளின் செயலால் ஒட்டுமொத்த நீதித்துறையின் கண்ணியத்துக்கும் களங்கம் ஏற்படுவதை அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 2001-ம் ஆண்டு அவர்கள் பிறப்பித்த அந்த தீர்ப்பில், உரிய காலத்துக்குள் தீர்ப்புகள் வாசிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உயர்நீதிமன்றங்களுக்கு சில வழிகாட்டுதல்களையும் கூறியிருந்தனர்.

ஒவ்வொரு அமர்விலும் அந்தந்த மாதத்தில் விசாரணை முடிந்தும், வாசிக்கப்படாமல் இருக்கும் தீர்ப்புகளின் விவரங்களை தருமாறு தலைமை நீதிபதி கேட்க வேண்டும். தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் கவனத்துக்கு தலைமை நீதிபதி கொண்டு செல்லலாம்.

மூன்று மாதம் வரை தீர்ப்பு வாசிக்கப்படாமல் இருந்தால் வழக்கில் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு தரப்பினர் தீர்ப்பை விரைவாக வாசிக்குமாறு கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம். ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படாவிட்டால், அந்த வழக்கை வேறு நீதிபதிகளின் விசாரணைக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதியிடம் வழக்கில் தொடர்புடையவர்கள் முறையிடலாம் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்கியுள்ளனர்.

எனினும் அதன் பிறகும் நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை. இது குறித்து கருத்துத் தெரிவித்த வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு முன்பு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. எனினும் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறும்போது, இவ்வளவு காலத்துக்குள் தீர்ப்புகளை வழங்கியாக வேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்கினால் தீர்ப்புகள் விரைவில் கிடைக்கும் என்று சிலர் கூறுவதை நம்புவதற்கில்லை. மக்களுக்கு விரைவான நீதியை வழங்க வேண்டுமானால் விரைவாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்ற உணர்வு நீதிபதிகளிடம் தாமாகவே ஏற்படாத வரை, பெரிய அளவிலான எந்த மாற்றமும் சாத்தியமில்லை என்றார்.

நீதிபதி சந்துரு கூறுவதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், ஆர்.பி.சேத்தி ஆகியோரும் கூறியுள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதைகள் ஒரு தீர்ப்பு எவ்வளவு நாளுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்ற வரையறையை உருவாக்கவில்லை. தேவையில்லாமல் எந்தவொரு நீதிபதியும் தீர்ப்பை காலதாமதம் செய்ய மாட்டார் என்று அவர்கள் அப்போது நம்பியதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அந்த மாமேதைகளின் நம்பிக்கை உண்மையாக்கப்படுமானால், தாமதிக்கப்பட்ட நீதி மக்களுக்கு கிடைப்பது தடுக்கப்படும் என்பது  நிச்சயம். 

நன்றி ள்- வி.தேவதாசன், தினமணி, 13-04-2013         

0 comments:

Post a Comment

Kindly post a comment.