Tuesday, April 16, 2013

கோவிந்த நாயக்கர் அறக்கட்டளைச் சொத்துகளைப் பயன்படுத்த பச்சையப்பா அறக்கட்டளைக்கு இடைக்காலத் தடை !

கோவிந்த நாயக்கர் அறக்கட்டளைச் சொத்துகளை பச்சையப்பா அறக்கட்டளையினர் பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 இந்த விவகாரம் தொடர்பாக சென்னை சூளையைச் சேர்ந்த பி.ஏழுமலை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த எம்.பி. திருஞானம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கல்விச் சேவை உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களுக்காக எனது பாட்டனார் கோவிந்த நாயக்கர் தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவினார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை கடந்த 1846-ம் ஆண்டு அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.

 தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிந்த நாயக்கர் அறக்கட்டளைச் சொத்துகளை பச்சையப்பா அறக்கட்டளையினர் நிர்வகித்து வருகின்றனர். கோவிந்த  நாயக்கர் அறக்கட்டளை மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தனித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். கோவிந்த நாயக்கர் அறக்கட்டளைச் சொத்துகளை பச்சையப்பா அறக்கட்டளையினர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் ஏழுமலை கோரியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிந்த நாயக்கர் அறக்கட்டளைச் சொத்துகளை பச்சையப்பா அறக்கட்டளையினர் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளனர்.                             
நன்றி :- தினமணி, 16-04-2013         

0 comments:

Post a Comment

Kindly post a comment.