Tuesday, April 16, 2013

தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு விருது; 4 தமிழறிஞர்கள்-கலைஞர்களுக்கும் அரசு விருதுகள் !

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கம் (தமிழ்த் தாய் விருது) மற்றும் நான்கு தமிழறிஞர்கள்-கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிக் கெüரவித்தார் முதல்வர் ஜெயலலிதா. நிகழ்ச்சியில் (இடமிருந்து) தில்லித் தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் பி.இராகவன், பொதுச் செயலாளர் ஆர்.முகுந்தன், கவிஞர் முத்துலிங்கம் (கபிலர் விருது), முனைவர் ம.லோகநாயகி (சொல்லின் செல்வர் விருது), பேராசிரியர் ம.வே.பசுபதி (உ.வே.சா. விருது), முனைவர் பால.ரமணி (கம்பர் விருது).

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலை ஆகியவற்றைப் போற்றி வளர்த்து வரும் தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் நான்கு தமிழறிஞர்கள்-கலைஞர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காத்து, தமிழ் மொழி, இலக்கியம், கலை ஆகியவற்றைப் போற்றி வளர்த்திடும் வகையில் தமிழ்ச் சங்கங்கள்-குழுமங்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கி சிறப்பாகச் செயல்பட செய்வதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்த் தாய் விருது கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டுக்கான தமிழ்த் தாய் விருது புது தில்லியில் சிறப்புடன் தமிழ்ப் பணியாற்றி வரும் தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.

விருதுக்கான தொகை ரூ.5 லட்சம், கேடயம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முகுந்தன், இணைச் செயலாளர் பி.இராகவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நான்கு பேருக்கு விருதுகள்: மரபுச் செய்யுள் மற்றும் கவிதைப் படைப்புகளைப் புனைவதில் ஆற்றல் பெற்றவரான முத்துலிங்கத்துக்கு தமிழக அரசால் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கபிலர் விருதையும், ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள் மற்றும் கிடைத்தற்கரிய நூல்களைத் தொகுத்து தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ம.வே.பசுபதிக்கு உ.வே.சா. விருதையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும் இந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கம்பர் விருதானது, கம்ப ராமாயணத்தின் உயரிய கருத்துகளைப் பரப்பி வரும் தமிழறிஞரான முனைவர் பால.இரமணிக்கும், சிறந்த இலக்கியப் பேச்சாளரான முனைவர் ம.உலோகநாயகிக்கு சொல்லின் செல்வர் விருதையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கி கௌரவித்தார்.

இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதிச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை அடங்கியதாகும். விருதுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.                                                                                   

நன்றி :- தினமணி, 16-04-2013        

0 comments:

Post a Comment

Kindly post a comment.