Saturday, March 30, 2013

தமிழக அரசு அலுவலகங்களுக்குத் தனியான தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகை ! பலகோடி ரூபாய் மிச்சம் !



 தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கெனத் தனியான தமிழ் எழுத்துருக்கள் மற்றும் விசைப்பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட அரசு தலைமை அலுவலகங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் முற்றிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கோப்புகளைத் தயார் செய்வது உள்பட பெரும்பாலான பணிகள் கம்ப்யூட்டர் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு அலுவலகத்திலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போன்று எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அலுவலகங்களில் வானவில் என்ற பெயரிலான எழுத்துரு உபயோகிக்கப்படுகிறது.

ஆனால், இந்த எழுத்துருவுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தியாக வேண்டும். வேறு சில எழுத்துருக்களைப் பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்குக் கட்டணம் அவசியம். இதனால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே எழுத்துரு பயன்படுத்துவது என்பது கனவாகி இருந்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே எழுத்துருக்கள் மற்றும் விசைப் பலகைகளை பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான முயற்சி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதற்காக, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் பி.ஆர்.நக்கீரன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பி.செல்லப்பன், மணிவண்ணன், தேசியத் தகவலியல் மையத்தின் உறுப்பினர் ஜே.டி.பிரின்ஸ், தேசியக் கம்ப்யூட்டர் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

 இந்தக் குழு சார்பில் பாரதி, கபிலர், கம்பர், வள்ளுவர், காவிரி ஆகிய பெயர்களில் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துருக்கள் ஒரே வகையைச் சேர்ந்தவைதான். இவற்றை விண்டோஸ், லினக்ஸ் உள்ளிட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

பல கோடி ரூபாய் மிச்சம்: இந்த எழுத்துருக்களுக்கான விசைப் பலகை, சாதாரண டைப்ரைட்டிங் இயந்திரத்தில் உள்ளது போன்றும், ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை அடித்தால், அது அப்படியே தமிழில் மாறுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், விசைப் பலகையை வேகமாக இயக்கத் தெரியாதவர்கள்கூட, ஆங்கிலத்தில் எழுத்துக்களை அடித்து அதைத் தமிழில் தோன்றச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த எழுத்துருக்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளதால், எழுத்துருக்களுக்காகத் தமிழக அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் செலவிடப்படும் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என தலைமைச் செயலக அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள்: அரசு அலுவலகங்களின் கம்ப்யூட்டர்களில் வானவில் போன்ற எழுத்துருவைக் கொண்டு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள கோப்புகள், அரசு உத்தரவுகளைப் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் எழுத்துருவுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதனால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் எழுத்துருக்களால் எவ்வித நடைமுறைச் சிக்கல்களும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி  :-  கே.பாலசுப்பிரமணியன் , தினமணி, 30-03-2013-

2 comments:

  1. நல்ல செய்தி வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நண்பர், மணிவானதி அவர்களே !

      Delete

Kindly post a comment.