Thursday, March 28, 2013

இராமன் ஓர் அவதாரமல்ல ! இராவணன் மாயாஜால அரக்கனுமல்ல ! அனுமன், வாலி, சுக்ரீவன் எல்லோரும் மனிதர்களே !!

                  சீதாயணம் நாடக நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன், கனடா
இனிய  வாசகர்களே,

வையவன் நடத்தும் சென்னை  “தாரிணி பதிப்பகம்” எனது “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.  இந்த நாடகம்  2005 ஆண்டில் முன்பு  திண்ணையில் தொடர்ந்து வெளியானது.
“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப வரலாறு  இது.

அன்புடன்
சி. ஜெயபாரதன்

http://jayabarathan.wordpress.com/seethayanam/    ( சீதாயணம் நாடகம் )


சீதாயணம்  (நாடகம்) கிடைக்குமிடம் :
விலை ரூ: 70  பக்கங்கள் :  76
M. S. P. Murugesan   (வையவன் )
Dharini Pathippagam
1. First Street,
Chandra Bagh Avenue,
Mylapore,
Chennai : 600004
Phone:  99401-20341

.
Bharathiya Vidhya Bhavan Ramayana by C.R Rajagopalachari ( 1958 ) 

மூலநூல் இராமாயணம் பின்னால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க்கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்படமாக்கப்பட்ட ஒரு காப்பியம் ( CORRUPTER MANUSCRIPT )  என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜகோபாலாச்சாரியார் கூறுகிறார். வால்மீகி ஒன்பதாம் நூற்றாண்டிலே எழுதிய இராமாயணத்தை இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்தரிக்கவில்லை என்றும், இராமனே தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவனன் அழிக்கப்பட்டவுடன் இராமனின் அவதாரப்பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்தியாபுரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும்போது, அவன் வெறும்  மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார்.

உத்தர காண்டத்தில் நளினமிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராம காதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால், அதுவும் இராமனின் பன்பு நெறிக்கு உடன்பாடாகவில்லை. உத்தரகாண்டத்தைப் படிக்கும்போது மனம் மிகவும் வேதனைப்பட்டது என்று பின்னுரையில் ( EPILOGUE )  இராஜாஜி மனமுடைகிறார். 

 -------  சாமான்யர்கள் என்றால் பத்தோடு பதினொன்று என்று படித்து விட்டுச் 
 சென்றுவிடுவர். ஆனால், இந்திய அணுவியல் அறிஞர் சி.ஜெயபாரதன், அவர்களது நெஞ்சில் இராமாயணத்தைப் படித்தபொழுது ஏற்படுத்திய அலைகளுக்கு ஓர் கரை தென்பட்டது.  இராமாயணம் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்தினார்.
1. Valmiki's Ramayana, Dreamland Publications, By : Ved Prakash ( 2001 ) & Picture Credit to Kishnan Lal Verma ( ப்யன்படுத்தியுள்ள படங்களுக்குச் சொந்தக்காரரையும் அடையாளம் காட்டும் நற்பண்பு )
2. Mahabharatha By : Rosetta William ( 2000 )
3. The Wonder that was India By: A.L. Basham  -ஆகிய நூல்களும் துணை நின்றன. மெய்யான மனித நேயமுடைய சிந்தனைவாதியாக இராமாயணத்தை ஆய்வு செய்கின்றார்.

சீதாயணம் 

ஆறு காட்சிகளில் சீதா பட்ட பாட்டினை எடுத்துரைக்கின்றார். இராமாயணக் கதாநாயகியின் பெயரானது, தமிழ் நாடகம் என்ற காரணத்தால் சீதை என்றே  அழைக்கப் பட்டிருக்க வேண்டும். “சீதாயணம்” என்ற பெயரை நாடக நூலுக்குச் சூட்டுவதன் அவசியத்தின்பாற்பட்டு “சீதா” -ஆக்கப்பட்டுள்ளார். ஆங்கிலக் கலப்பற்றுப் பேசத் தெரியாத தமிழருக்கு இது ஒன்றும் பார்வைக்கும் புத்திக்கும் சற்றும் தோன்றாது.64-வது நாயன்மார் என்று அழைக்கப்படும் வாரியார் சுவாமிகள், ”மண்ணாசையால் விளைந்தது மகாபாரதம், பெண்ணாசையால் விளந்தது இராமாயணம் என்று மட்டுமே” கூறிச் சென்றுள்ளார். பள்ளித் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் வைக்கப்பட்ட கம்ப இராமயணத்தைத் தவிர எதுவும் படித்ததில்லை. அதில் ஓர் எட்டு வரிகள் மனப்பாடப் பகுதியாக வரும் அந்த எட்டு வரிகளை மட்டும் மனனம் செய்து விட்டு, எஞ்சியவற்றிற்குக் கதை வடிவில் பதில் எழுதத் தெரிந்திருந்தால் போதும் தமிழக மாணாக்கரது இராமாயணப் பாடம் முடிந்துவிடும்.

கொஞ்சம் புத்திசாலி மாணாக்கர்கள் மட்டும், வாலியை  கடவுள் பிறப்பென்று சொல்லப்படும் இராமன் மறைந்திருந்து வில்லால் அம்பெய்திக் கொன்றது என்ன நியாயம்? யாரோ ஓர் வண்ணானும், ஊர்க்காரர்களும் சொன்ன காரணத்திற்காக சீதாவின் கற்பை உறுதி செய்திட தீக்குளிக்கச் செய்தது என்ன நியாயம் இருக்கின்றது ? என்று பேசிக்கொள்வோம். எங்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த இராமயணக் கதை இவ்வளவுதான்.

இராமயணப் பட்டி மன்றங்களில் வாலி வதம் தண்டமிழ்ப் புலவர்களால் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் நியாயப் படுத்தப்படும். சீதாவை இராவணன் வலிந்து கவர்ந்து விண்ணூர்தி மூலம் ( அந்தக் காலத்திலேயே விமானம் இருந்ததற்குப் பெருமையான  உதாரணமாகவும் கூறப்பட்டும் )

அசோகமரத்தடியில் சோகமாக அமர்ந்திருக்கும் சீதையிடம் அவ்வப்பொழுது நேரடியாகவும், காவல் காக்கும் பெண்கள் மூலமாகவும் இராவனன் தன் காம இச்சைக்கு இணங்குமாறு வேண்டுகோள் விடுக்கும் கதைகள் மட்டும் பட்டிமன்றக் கூட்டங்களிலும், ஆசிரியர் கூறும் கதைகளின் வாயிலாகவும் இராவணனின் நேர்மைத் திறம் குறித்து அறிந்துள்ளோம்.

இராவணன் சிவபக்தன், நேர்மையானவன் என்றே எங்களுக்கு இராமன் - இராவண யுத்தம் வரை பாடம். போரின் போதுதான் பத்துத் தலைகளையும், மாயாஜால வித்தைகளையும் கொண்ட அரக்கன் என்று அறியப்படும்.

இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்பது இந்த நாடகத்தில் மறுக்கப்பட்டிருக்கிறது. இராவணன் பத்துத் தலைகளைக் கொண்ட மாயாஜாலங்கள் கற்ற அரக்கன் என்பதும் மறுதலிக்கப்பட்டிருக்கிறது. அனுமன், சுக்ரீவன் போன்ற வானர சேனைகளும் மனிதராகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். இராமனுக்கு உதவிய தென்னிந்தியர்கள் முழுவதுமே வானரங்களாக இராமாயண காதையில் கூறப்பட்டுள்ளனர் என்று வாதாடுவோர் பேச்சையும் கேட்ட அனுபவமுண்டு.

மொத்தத்தில் நடந்த உண்மை நிகழ்வோ / எழுதப்பட்ட கதையோ நமக்குக் கிடைத்திருக்கும் இராமாயணம் மூதறிஞர் இராஜாஜி கூறியுள்ளதைப் போல “ஒரிஜினல்” இராமாயணம் அல்ல. 300-க்கும் மேற்பட்ட இராமாயணக் கதைகள் உள்ளதாகவும் கூறுவர். ஒரு இராமாயணத்தில் இராமனின் தங்கையாக சீதா சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கேள்வி.

நமது  இராமாயணத்தில், சீதா, துவக்கத்திலிருந்தே ஓர் மனுஷியாகப் பார்க்கப்படவில்லை. வில்லை ஒடித்தால் சீதா கிடைப்பாள். சீதா ஓர் பரிசுப் பொருள். சீதா இடத்தில் வேறு யாராகவும் இருக்கலாம்; அல்லது வேறு எந்தப் பொருளாகவும் கூட இருக்கலாம். வில்லை ஒடித்தவனுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும்.

சீதாலட்சுமி என்ற சமூகக் கல்வியாளரும், பூங்குழலி என்ற ஆங்கில மருத்துவரும், ஜெயஶ்ரீ ஷங்கர்,( புதுச்சேரி)என்ற எழுத்தாளரும், முகவுரை மற்றும் பின்னுரையில் படைப்பாளியான
சி.ஜெயபாரதனும், பதிப்புரையில் பழம்பெரும் எழுத்தாளர் வையவனும்
இந்நூல் குறித்த கருத்துக்களை அருமையான முறையில் எழுதியுள்ளனர்.

அவற்றுள் எழுத்தாளர் ஜெயஶ்ரீ ஷங்கர்,( புதுச்சேரி  எழுதிய அணிந்துரையிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு.

 ( பன்முறை எழுத முயன்று தோற்றுப் போனதால் இந்த முடிவு.)” இராமா .. நீ சீதாவுக்குச் செய்தது நியாயமா ? உன்னை மீண்டும் மன்னனில் இருந்து மானிடனாக்கி மக்கள் முன் மேடையேற்றி நியாயம் கேட்கிறேன், பார்’ என்று துணிச்சலோடு எழுதியுள்ளார்.
 
‘சீதாயனப் போரை உணர்வுபூர்வமான சீதாவின் மன ஓட்டத்தை, எண்ணச் சீற்றத்தை, அவலத்தை, ஆற்றாமையை, பதி செய்த சதியை, வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும். என்று ஜானகியின் போராட்ட வாழ்வைக் கண்முன்னே கொண்டு நிறுத்தி இராமனை நியாயத் தராடில் ஏற்றி நிறுத்திய விதம் அவரது எழுத்திற்குக் கிடைத்த வெற்றி என்பேன்.
 
இதிகாசப், புராண காலம் தொட்டே ஆணாதிக்கத்தால் பெண்களின் நிலையாக கண்ணகி, தமடந்தி, சாவித்திரி, திரெளபதி, சீதா என்று ஆரம்பித்து கஸ்தூரிபாய், செல்லம்மா மனைவி என்ற அந்தஸ்தில் அடிமையாய் அகப்பட்டு சீர்குலைந்து காணப்பட்டதாலும், இந்தக் கலியுகத்திலும் மேலும் அதே நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பெண்னின் நிலைமை மாற வேண்டுமே  என்ற ஆதங்கத்தில் நல்ல ஆக்க சிந்தனையில் எழுதப்பட்ட ஒரு நாடகம்.
 
நாட்டில் பெண்னின் மதிப்பு உயரவேண்டும்; ஒற்றுமை ஓங்க வேண்டும் என்ற நல்ல நொக்கத்தோடு படைக்கப்பட்ட சீதாயணம் படிக்கும் அனைவரது மன மேடையிலும் தவறாது அரங்கேறும்.சீதாயணத்திற்கு ஒரு அணியாக எனது அணிந்துரையும் அலங்காரம் செய்வதில் நான் பெற்ற பேறாக எண்ணுகிறேன்.இந்த வாய்ப்பை எனக்களித்த ஆசிரியருக்கும், பதிப்பாளருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
 “சீதாயண” சீதா நெஞ்செல்லாம் நிறைந்து நிற்கிறாள்.
 
எழுத்தாளர் ஜெயஸ்ரீ ஷங்கர்
 
பரதன்,இலட்சுமணன், சத்துருக்கனன், அனுமான், லவன்  குசா புதல்வர்கள்
எல்லோருமே  இராமனைப் புறக்கணித்து விலகிவிடுகின்றனர். வால்மீகி, இராமனிடம், பொதுமக்கள் புகார்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, “வாய் திறந்து வாராய் “ என ஒரு முறை அழைத்து சீதாவை உடன் அழைத்துச் செல்லுமாறு கூறுகின்றார். சீதா, “ என் முடிவே இறுதி முடிவு; எல்லோரது பிரச்சினைகளுக்கும் இதுவே தீர்வு காணும்...நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை!..நான் தீண்டத் தகாதவள் !.. நான் தேவைப் படாதவள் !.. தமியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதைவிட ஒரே நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது !... நானினி வாழ்வதில் உங்களுக்குப் பலனில்லை !.../.எனக்கும் பயனில்லை !...என்று சொல்லிவிட்டு ஓடோடிச் சென்று  அனைவரையும் வணங்கிவிட்டுக் குன்றிலிருந்து குதித்து உயிரை விட்டு விடுகின்றாள்...  
                                          -

இன்றளவும் இராமாயணத்தில் சீதை படும்பாட்டை எடுத்துரைத்த நூல்கள் எதையும் படித்ததாக நினைவில் இல்லை 

.சி.ஜெயபாரதனின் சீதாயணம் நாடகம், அயோத்தி இராமர் கோவில் பிரச்சினைக்குக்கூட நியாயத் தீர்ப்பினை வழங்குகின்றது. 

ஒரு நாடகம் என்பது எப்படி எழுதவேண்டும் என்பதற்குப் பாட நூலாக வைப்பதற்குரிய அனைத்து வகையான தகுதிகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது சீதாயணம்.

இந்நூல் இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம். இன, மத வேறுபாடுகள் நீங்க அஃது துணை செய்யும்
 
திரைப்படமாகவும் எடுக்கலாம். சகல தகுதிகளும் உண்டு.2 comments:

  1. உண்மையான விளக்கம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Kindly post a comment.