Tuesday, March 26, 2013

தமிழும் ஆங்கிலமும் கலந்த புதியமொழி தோன்றி விடுமோ !


கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி' என்ற பெருமை தமிழ்க் குடிக்கு உண்டு. ஆனால், அந்த தமிழ்க் குடி இன்று தனித் தன்மையிழந்து, பழம்பெருமை மறந்து, தடுமாறித் தள்ளாடி நிற்பது பரிதாபத்துக்குரியது.

இன்னும் சில நூற்றாண்டுகளில் தமிழ் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இது மிகைப்படுத்தப்படாத உண்மை. ஆங்கிலேயர், முகலாயர், பிரெஞ்சுக்காரர்கள் என பல்வேறு நாட்டினர் நம் மீது செலுத்திய ஆதிக்கத்தின் காரணமாக நம் மொழியில் பிற மொழிச் சொற்கள் கலந்து விட்டன.

அதிலும், குறிப்பாக அன்று ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியதைவிட, இன்று ஆங்கிலம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது என்றே கூற வேண்டும். தூய தமிழில் நம்மால் பேச முடியா விட்டாலும் பரவாயில்லை, ஆங்கிலச் சொல் கலக்காமல் எளிய தமிழில் நம்மால் பேசவோ, எழுதவோ முடியுமா என்றால், கட்டாயமாக முடியாது. அந்த அளவுக்கு தாய்மொழியை மழுங்கடித்து, அன்னிய மொழி நம்மை ஆட்கொண்டுள்ளது.

தாயைக் காப்பது எப்படி ஒரு தனயனின் கடமையோ, அதேபோல் தாய் மொழியைக் காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. ஆனால், நாம் என்ன செய்கிறோம், அன்னிய மொழி மீது கொண்ட மோகத்தினால், தேனென இனிக்கும் நம் தாய்மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு சாதாரண மொழிப் பாடமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் தமிழ்மொழியிலும் கற்பிக்கப்பட்டன. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ்.

தமிழ் என்பது சாதாரண மொழிப் பாடமாகிவிட்டது. ஆங்கிலம் உள்பட மற்ற பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன.

அதனால்தான் இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழைத் தவறின்றி வாசிக்கவோ, எழுதவோ தெரிவதில்லை. "என் குழந்தைக்கு இங்கிலீஷ் மாதிரி தமிழ் சரளமா வர மாட்டேங்குது' எனப் பெற்றோர்கள் பெருமையாகக் கூறுவது வெட்கப்பட வேண்டிய விஷயம். இதற்கு, புற்றீசலாய் பெருகிவிட்ட ஆங்கிலப் பள்ளிகளும் ஒரு முக்கியக் காரணமாகும்.

தமிழறிஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தவிர, தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர் கூட்டமும் தமிழை ஆர்வத்துடன் படித்து வந்தனர். இது தமிழ் மொழி மீது உள்ள காதலால் அல்ல, அரசுப் பணியில் சேர்ந்திட தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ்மொழி சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கவே இந்த அக்கறை.

சரி அப்படியாவது தமிழ் படிக்கிறார்களே என மனதைத் தேற்றினால், அதிலும் இடி விழுந்தது போல், கடந்த வாரம் ஓர் அறிவிப்பு வந்து விழுந்தது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அரசுப் பணிகளில் சேருவதற்காக தேர்வெழுதும் மாணவர்களுக்கான முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தில் தமிழ் மொழியையே நீக்கி விட்டனர். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால் முடிவை நிறுத்திவைத்துள்ளனர்.

இனி தமிழ் என்பது மாணவர்களுக்கு மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சிபெற வேண்டிய ஒரு பாடம் என்றுதான் தோன்றுமே தவிர, அது ஓர் உயிர்ப்புள்ள, எழுச்சியான மொழி என்பது தெரியாது. இதே சூழ்நிலை தொடர்ந்தால் நாளடைவில் அனைவரும் தமிழை எழுதவும், படிக்கவும் மறந்து, பேச்சு மொழியாக மட்டுமே மாற்றி விடுவார்கள். இல்லையெனில் தமிழும், ஆங்கிலமும் கலந்து புதிய கலப்பு மொழி தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 இனியாவது நாம் விழித்துக் கொண்டு, தமிழைக் காக்கவும், வளர்க்கவும் நடவடிக்கை எடுக்காவிடில், பாரதியின் வார்த்தைகள் பலித்தே விடும். ஆம், மெல்லத் தமிழினிச்சாகும்.                                                                     

நன்றி :- ஆர்.பரணீதரன், தினமணி, 26-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.