Sunday, March 10, 2013

அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? -ஜெனி ஃப்ரீடா ; படம்: ஏ.எஸ்.கணேஷ்.



                           சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் நூருதீன்.

2002-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியில் முதல் பரிசை வென்று "மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் பெற்றவர். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் உலக அளவில் பல்வேறு பரிசுகளை வென்று நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். இன்று ஆட்டோ ஓட்டி தன் அன்றாட பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.

அவர் வாழ்க்கையில் சந்தித்த வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கேட்டபோது:

""மூன்றாவது வயதில் போலியோ தாக்கி என் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 சகோதரிகள். 1999-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்தேன். அதன் பின்பு படிப்பில் என் கவனம் செல்லவில்லை. எனக்கு உடற்கட்டை வளப்படுத்தும் பயிற்சியில் (பாடி பில்டிங்) ஆர்வம் அதிகமானது. அதை என் நண்பர்களிடம் கூறியபோது அவர்கள் என்னை ஆர்வத்துடன் உடற்பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். என்னால் நடக்க முடியாது என்பதால் அவர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்வார்கள்.

ஆனால் உடற்பயிற்சி மையத்திற்குள் சென்றவுடனேயே அங்கிருந்த பலர் என்னிடம் "உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது' என்று மட்டம் தட்டினார்கள். ஆனால் என் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தேன்.

2002-ம் ஆண்டு "மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றேன். என்னால் நிற்க முடியாது என்பதால், உட்கார்ந்து கொண்டுதான் போட்டியில் பங்கேற்றேன். அதன் பின்பு நின்றுகொண்டுதான் பங்கேற்க வேண்டும், உட்காரக் கூடாது என்று தடைவிதித்துவிட்டார்கள்.

2003-ம் ஆண்டு சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் மாநில அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் "பெஞ்ச் பிரஸ்'பிரிவில் சாதாரண வீரர்களுடன் பங்கேற்றேன். அதில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என்று அடுத்த முறை எனக்கு  அனுமதி மறுக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றேன். 2003-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள் வென்றேன்.

2005-ம் ஆண்டில் எனக்கு வீல்சேர் வாள்வீச்சில் (வீல் சேர் ஃபென்ஸிங்) கவனம் சென்றது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். 2006-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிளுக்கான பசிபிக் போட்டியில் கலந்து கொண்டேன். அதுதான் என் முதல் வெளிநாட்டு போட்டி. சில தொழில்நுட்ப காரணங்களினால் என்னால் அந்தப் போட்டியில் பரிசு எதுவும் பெறமுடியவில்லை. 2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற வீல்சேர் வாள்வீச்சில் சேபர் முறையில் "பி' பிரிவில் வெண்கலம் வென்றேன்.

2011-2012-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஒலிம்பிக் முகாமில் கலந்து கொண்டேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்பவர்களுக்கான பயிற்சி முகாம் அது. ஆனால் கனடாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் எங்களுக்கு நுழைவு கிடைக்கவில்லை. மேலும் ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற வீல்சேர் வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்பு விசா கிடைக்காததால் அதிலும் பங்கேற்க  இயலவில்லை. இதனால் அதற்காக செலுத்திய கட்டணமும் திரும்பக் கிடைக்கவில்லை. நான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதால் தமிழக அரசின் சார்பில் கிடைக்கும் ரூ.10,லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கப் பரிசு கிடையாது என்று கூறிவிட்டனர்.

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி வீரருக்கு அரசு சார்பில் தற்காலிக பயிற்சியாளராக வேலையும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கும் அதே போன்று வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று அரசை அணுகினேன். ஆனால் எனக்கு எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு, போராடிக்கொண்டே இருக்கிறேன்.  ஒவ்வொரு முறையும் என் வண்டியைத் தலைமைச் செயலகத்தில் நிறுத்திவிட்டு தவழ்ந்து தவழ்ந்து சென்று ஒவ்வொரு அதிகாரிகளையும் பார்த்துவிட்டு வருவதற்குள் மிகவும் சிரமப்பட்டுவிடுகிறேன். எனக்கு ஒரு வேலை கிடைத்தால் எனக்குப் பின்னால் வரும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஓர் ஊக்கமாக இருக்கும்.

என் வீட்டிலும் வறுமை. நான் ஆட்டோ ஓட்டிதான் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' வேலை உள்ளிட்ட பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்காணலின்போது "உன்னால் படியெல்லாம் ஏற முடியாது. அடுத்த முறை பார்க்கலாம்' என்று கூறி எனக்கு வேலை தர மறுத்துவிடுகிறார்கள்.

என் மனைவியிடம் கடைசியாக இருந்த ஒரு நகையை விற்றுதான் இந்த ஆட்டோவை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கும் மாதம் ரூ.6,000 வங்கியில் "ட்யூ' செலுத்த வேண்டும். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. யு.கே.ஜி. படிக்கும் என் குழந்தையின் படிப்பையும் பார்க்க வேண்டும். இதனால் மனதளவில் மிகவும் சோர்ந்து 8 மாதமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். வாங்கிய உபகரணங்கள் எல்லாம் வீட்டிலேயே உபயோகமற்றுக் கிடக்கின்றன'' என்கிறார்.                       

நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், 10-03-2013             



0 comments:

Post a Comment

Kindly post a comment.