Sunday, March 3, 2013

சென்னையில் பார்வையற்ற இளைஞர், எழுதிய நூலின் வித்தியாசமானவெளியீட்டுவிழா !



சென்னை ஆவணக் காப்பகத்திலும், பல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனும் நாட் கணக்கில் செலவிட்டு, நூறு வருடங்களுக்கு முன்பு மெட்ராஸ் தொழிற்சங்கம் எப்படி ஏற்பட்டது ? என்பதை மார்க்ஸீயக் கண்ணோட்டத்தில் தனது பி.ஹெச்.டி. ஆய்வுக்கு ஓர் இளைஞர் தேர்ந்தெடுத்தார். அவர் பிறகு சென்னை ஐ.ஐ.டி.யில் ஹ்யூமானிடீஸ் துறையில் பேராசியர் ஆனார்.

அவருக்குப் பார்வை கிடையாது என்பதால், அவருக்கு எல்லாவற்றையும் ஒருவர் படித்துக் காட்ட வேண்டும். படித்துக் காட்டுபவருக்கும் இந்தத் துறையில் ஆர்வம் இருக்க வேண்டும். அந்த இளைஞரின் தாத்தா அவருக்கு உதவியாக இருந்த நேரம் தவிர, அந்தத் தாத்தாவின் வயதை எட்டிய ஒருவர் அந்த உதவியைச் செய்ய முன் வந்தார். தம் நூலகம் முழுவதையும் அவர் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார். படித்துக் காண்பித்தார். இளைஞர் சொல்வதை எல்லாம் எழுதினார். எனவே அந்த தீஸிஸ் நூல் வெளிவர அவரும் முக்கியமானவர் ஆனார். அவர் தமிழ் நாடு மின்சாரத்துறையில் இஞ்சினீயராகப் பணியாற்றியவர்.


 நூலை "லெப்ட்வேர்ட்' பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்த போது, அதைப் படித்தவர் உடனே அச்சுக்கு அனுப்பிவிடச் சொன்னார். அந்த நூலை வெளியிட வேண்டும் என்று இங்கே அந்த இளைஞரின் நண்பர்கள் கேட்டுக்கொண்ட போது, தில்லியிலிருந்து அந்தப் பதிப்பகத்தின் எம்.டி.யே வந்து அந்த நூலை சென்ற சனிக்கிழமை மாலை வெளியிட்டார்.


அந்த அந்தக இளைஞர் பெயர் திலீப் வீரராகவன். நூலின் தலைப்பு: தி மேக்கிங் ஆஃப் த மெட்ராஸ் ஒர்க்கிங் கிளாஸ்.


 தீஸிஸ் பிரதியை அனுப்பிய உடனே அதை அச்சுக்குக் கொடுக்கச் சொன்னார் பதிப்பகத்தில் இருந்தவர். நூலை நீங்கள்தான் வந்து வெளியிட வேண்டும் என்று ஈமெயில் மூலம் கேட்டுக்கொண்டவுடன் உடனே சம்மதம் தொவித்தார் சி.பி.எம். செயலர் பிரகாஷ் காரத்.

"வீரராகவனுடன் நான் நிறைய விவாதித்தேன். நிறையக் கேள்விகள் கேட்டேன். அவருடைய பதில்கள் அவருடைய ஆய்வு மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டின..'' என்றார் அறிமுகம் செய்த ஆராய்ச்சியாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதி.


 "பிரதியைப் படித்த உடனே அச்சுக்கு அனுப்பச் சொன்னது நான்தான்'' என்று ஆரம்பத்திலேயே குட்டை உடைத்தார் காரத். ""நான்தான் அந்த வெளியீட்டு நிறுவனத்தின் எம்.டி. அதனால்தான் நானே இங்கு வந்து வெளியிட ஒப்புக்கொண்டேன்...'' என்று இரண்டாவது குட்டையும் உடைத்தார் பிரகாஷ் காரத்.


 1918 முதல் 1931 வரையிலான சென்னை தொழிற்சங்கத் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துப் பின்னணியில் கூர்ந்து கவனித்து, பி.அன்ட்.சி. மில் உட்பட அப்போதிருந்த தொழிற்சங்க நிலைமையை அற்புதமாக எழுதியிருக்கிறார் லீப் வீரராகவன். 

காரத் வெளியிட கண்ணன் பெற்றுக்கொண்டார். கண்ணன்தான் வீரராகவனுக்கு ஆவணங்களையும், நூல்களையும் படித்துக் காண்பித்த முதியவர். அவர் சொன்னதை எழுதியவர். எஸ்.எஸ். கண்ணனை எல்லோரும் "கண்ணன் மாமா' என்றே மரியாதையுடன் குறிப்பிட்டனர்.

கண்ணன், ""தமக்குப் பார்வை இல்லை என்பதற்காக திலீப் எந்தக் குறையையும் சொன்னதில்லை. எவரிடமும் அனுதாபம் தேடியதும் இல்லை'' என்றார். அவருடைய இடையறாத உழைப்பையும், அசாத்தியமான நினைவாற்றலையும் மனமாரப் புகழ்ந்தார். இந்த நூல் ஏற்கெனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதை நினைவுகூர்ந்தார் பெரியவர் கண்ணன்.


 புத்தகத்தை வெளியிடுபவரும் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்பவரும் ஒருவரை ஒருவர் வானளாவப் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்காமல் நடந்த இந்த வித்தியாசமான புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்களால் மயிலை ராக சுதா ஹால் நிரம்பி வழிந்தது. ஐ.ஐ.டி. பேராசியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் நெகிழ்வோடு அமர்ந்து இருந்தனர்.


 ""இந்த நிகழ்ச்சிக்கு இலவசமாக இடத்தைth தந்த ஜெயாவுக்கு எங்கள் நன்றி...'' என்றார் பேராசியர் முரளி. ""தன் நூல் வெளியிடப்பட்டால் இங்குதான் வெளியிட வேண்டும்...'' என்று திலீப் வீரராகவன் கூறியிருந்தாராம்.
 சாதாரணமாக மார்க்ஸீயவாதிகள் இசை போன்றவற்றில் ஆர்வம் காண்பிக்க மாட்டார்கள் என்று சொல்வதுண்டு.

 திலீப் வீரராகவன் இருந்தவரை அவர் எல்லா கர்நாடக இசைக் கச்சேரிகளையும் கேட்டு ரசித்திருக்கிறார். அவருக்குத் துணையாக ஓர் இளைஞர் அவர் கூடவே வருவார். குறிப்பாக, திலீப் வீரராகவன் ராகசுதா அரங்குக்குத் தவறாமல் வந்து இசையைக் கேட்டு ரசித்திருக்கிறார். அந்த உண்மையைச் சொல்லாமல் விட்டது கொஞ்சம் நெருடலாக இருந்தது.                
நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 03-03-2013            



0 comments:

Post a Comment

Kindly post a comment.