Tuesday, March 5, 2013

34 நாட்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார், சசி பெருமாள் !

     சென்னை, கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரதத்தை நிறைவு செய்து ஆதரவாளர்களிடமிருந்து விடை பெறுகிறார் காந்தியவாதி சசி பெருமாள்.

பூரண மதுவிலக்குக் கோரி கடந்த 34 நாள்களாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த காந்தியவாதி சசி பெருமாள் தனது போராட்டத்தைத் திங்கள்கிழமை நிறைவு செய்தார்.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்வரை தனது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறினார். போராட்டத்தை தொடங்கிய, சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை முன் தனது உண்ணாவிரதத்தை அவர் நிறைவு செய்தார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சசி பெருமாள், மகாத்மா காந்தியின் நினைவு நாளான கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

சசி பெருமாளின் உடல்நிலை ஞாயிற்றுக்கிழமை மிகவும் மோசமானது. இதையடுத்து அன்று மாலை போலீஸôரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுச் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அவர் தொடர்ந்து அங்கேயும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அதனால் திங்கள்கிழமை முழுவதும் அவருக்கு குளுக்கோஸ் மட்டுமே ஏற்றப்பட்டது.

உண்ணாவிரதம் நிறைவு: ஆனாலும் அவரது உடல் நிலை சீராகவில்லை. அதனால் தொடர் சிகிச்சை தேவை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால், டிஸ்சார்ஜ் செய்து வெளியே அனுப்பினால்  உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன் என சசிபெருமாள் கூறியதாகக் கூறப்படுகிறது. உடல்நிலை சீராகாமல் வெளியே அனுப்ப முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தனராம். 

ஆனால் சசி பெருமாள் உறுதியாக இருந்ததால், டாக்டர்கள் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலை 5.10 மணிக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து மெரீனா கடற்கரைக்குக் காரில் சென்றார். அங்கு போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்தார்.

2014-க்குள் மிகப்பெரிய விழிப்புணர்வுப் போராட்டம்: உண்ணாவிரதத்தை நிறைவு செய்து சசிபெருமாள் கூறியது: உண்ணா விரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று எனது நலவிரும்பிகள் கேட்டுக் கொண்டதால் தற்போது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமையும் வரை எனது போராட்டம் ஓயாது. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து மதுஒழிப்புக்காகப் போராடுவேன். மேலும், அனைத்து சத்தியாகிரகவாதிகளையும் ஒன்றிணைத்து மதுவுக்கு எதிரான மிகப்பெரிய விழிப்புணர்வு போராட்டத்தை 2014-க்குள் நடத்துவேன் என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் பழச்சாறு கொடுத்து சசி பெருமாளின் உண்ணாவிரதப் போராட்டத்தை  முடித்துவைத்தார். 

நன்றி :- தினமணி, 05=03-2013                     

0 comments:

Post a Comment

Kindly post a comment.