Tuesday, March 26, 2013

1892-இல் திருக்குறள் மூலபாடம் ஞானப்பிறகாசனால் முதலில் பதிப்பிக்கப்பட்ட வரலாறு !


உலகளாவிய அளவில் பன்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட  மதச்சார்பற்ற நூல்களில் திருக்குறள் முதலிடத்தைப் பெறுகின்றது. மதம் பற்றிய நூல்களில் குர்ஆன் முதலிடத்தையும், பைபிள் இரண்டாவது இடத்தையும் பெறுகின்றது.

 வெள்ளி விழா மலர் , 1970-1975  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

கட்டுரை எண் 31. திருக்குறள் முதல் பதிப்பு

பேராசிரியர் டாக்டர் இ.சுந்தரமூர்த்தி
தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம் ( 1995 )


திருக்குறள் நூல்கள்

தமிழ் மொழியில் தோன்றியுள்ள பல்வேறு நூல்களுள் திருக்குறள் நூலே மிகுதியான பதிப்புகளையும் ஆய்வு நூல்களையும் பெற்றுப் பெருமையுடன் விளங்குகிறது. ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இதுகாறும் வெளியுள்ளன. இவற்றுள் சற்றொப்ப ஐந்தில் ஒரு பகுதி நூல்கள் பதிப்பு நூல்கள்; ஏனைய ஆய்வு நூல்கள். பன்முறையால் ஆராயப்பெற்ற பெருநூலாகிய திருக்குறளுக்கு எழுந்துள்ள பதிப்புகள், உரை நூல்கள் , ஆராய்ச்சி நூல்கள், மொழியாக்க நூல்கள், பல்வேறு நூல்களிலும் இதழ்களிலும் வெளிவந்துள்ள ஆய்வுக்கட்டுரைகள் முதலாயவற்றைப் பொருள் நிரலாகவும் கால நிரலாகவும் தொகுத்துப் பார்க்கும்போதுதான் திருக்குறள் ஆய்வு வளர்ச்சிப் போக்கை மதிப்பிட இயலும்.

திருக்குறள் பதிப்புகள்

திருக்குறளுக்கு எழுந்துள்ள பதிப்புகள் குறித்து ஆராய்வது அவ்வகையில் முதற்பணியாக அமைகின்றது. திருக்குறள் பதிப்புகளைப் பின்வருமாறு மூவகைப் படுத்தலாம்.

1. திருக்குறள் மூலம்
2. மூலமும் உரையும் அமைந்த பதிப்புகள், உரை தழுவிய பதிப்புகள்
3. புத்துரைகள், உரைத் தொகுப்புகள்

இவ்வனைத்துப் பதிப்புகளுமாகச் சேர்ந்து ஏறத்தாழ முந்நூறு நூல்கள் வெளியாகியுள்ளன.  கி.பி. 1812 தொடங்கி இன்றுவரை வெளியாகியுள்ள அனைத்துப் பதிப்புகளும் ஒரே இடத்தில் தொகுத்து வைப்பது ஆய்வு நோக்கிற்கு மிக இன்றியமையாததாகும்
.
திருக்குறள் முதல் பதிப்பு

திருக்குறளின் மூலப் பதிப்புகளுள் தமிழில் மிகத் தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி. 1812-இல் வெளியாகி “திருக்குறள் மூலபாடம்” என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும்.

’இலக்கண இலக்கிய ஆராய்ச்சியுடையவர்கலிகிதப் பிழையற வரலாற்று சுத்த பாடமாக்கப்பட்டது’  என்னும் குறிப்புடனும் ‘தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம், மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிக்கப்பட்டது - மாசத் தினசரி அச்சுக்கூடம்.

இ.ஆண்டு சரஅளயவு ( 1812 எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது ) என்னும் குறிப்புடனும் தலைப்புப்பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திருவள்ளுவமாலை மூலபாடமும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன.

மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப்பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி. 1712-இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே, அச்சுக்கூடம் ஏற்பட்டுச் சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது. நூற்றி எண்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இப்பதிப்பில் ( இக்கட்டுரை எழுதிய ஆண்டு 1995 ) காணப்படும் சில அரிய குறிப்புகள் மூலபாட ஆய்வியல் ( TEXUAL CRITICISM ) பற்றிய சிறந்த கருத்துக்களாக அமைகின்றன.

மூல பாட ஆய்வியல்

நெடிய கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது ஆசிரியரின் உண்மைப்பாடத்தைத் தெளிந்து பதிப்பிப்பது என்பது சிக்கலான செயலாகும். கிடைக்கின்ற பல்வேறு சுவடிகளையும் திரட்டி நுணுகி ஆராய்ந்து மூலபாடத்தைத் துணிதல் வேண்டும்.

நூலுக்குள்ளேயே கிடைக்கின்ற ஆதாரங்கள் ( INTERNAL EVIDENCES ) , நூலின் நடை, நூலில் கையாளப்படும் சொற்களின் தன்மை, வரலாற்றுக் குறிப்புகள் முதலாயின கொண்டு மூல பாடத்தைத் துணியலாம் என்பர்.


இரண்டாவதாக நூலுக்கு வெளியே கிடைக்கின்ற ஆதாரங்கள் ( EXTERNAL EVIDENCES ), நூலாசிரியருடைய பிற படைப்புகள், அவர் காலத்திய பிற படைப்புகளில் காணப்படும் அந்நூலைப்பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் முதலாயினவும் மூலத்தைத் துணிதற்குப் பயன்படும்.1


அச்சுப் பெற வேண்டிய இன்றியமையாமை

1812-இல் தோன்றிய ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் இம்முதல் பதிப்பின் பதிப்புரையில் மேற்கண்ட மூலபாட ஆய்வியல் இலக்கணக் கூறுகளுள் சில விதந்து கூறப்படுவது பெரிதும் எண்ணத் தக்கத்தாகும். ‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந்நூல் தரும் செய்தி வருமாறு.

‘கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினியற்றிய இலக்கண இலக்கியங்களாகிய அரிய நூல்களெல்லாம் - இந்நாட்டில் அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினாலெழுதிக் கொண்டு வருவதில் - எழுத்துக்கள் குறைந்தும் - மிகுந்தும் - மாறியும் சொற்கடிரிந்தும் - பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம் ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்றவால் - அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி - அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்கு உத்தேசித்து - நூலாசிரியர்களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்த - அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்கவுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் - முனிவர்களருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூலபாடமும் இப்போது அச்சிற் பதிக்கப்பட்டன’2
இக்குறிப்பினால் ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன் ( இக்கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 1995 ) தமிழிலக்கியங்கள் அச்சுப்பெறாதிருந்த நிலையினால் ஏற்படும் குறைகளையும் மூல பாடங்கள் வேறுபடுவதகான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.

பதிப்பு நெறிகள்

இந்நூலின் அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து பகுதி எடுத்துரைக்கும் “ இவை அச்சிற்பதிக்குமுன்னர் தென்னாட்டில் பரம்பரை ஆதீனங்களிலும் வித்வ செனங்களிடத்திலுமுள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்கும் இணங்கப் பிழையற இலக்கண இலக்கிய ஆராய்ச்சியுடையவர்களால் ஆராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டது என்னும் குறிப்பு திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும். சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அன்னுப்பி கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

“இஃதுண்மை பெற - திருப்பாசூர் முத்துசாமிப் பிள்ளை, திருநெல்வேலிச் சீமை - அதிகாரி - ம. இராமசாமி நாயக்கர் முன்னிலையி லன்னாட்டி;இருந் தழைப்பித்த சுத்த பாடங்களுட னெழுதி வந்த வரலாறு. இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் -  நாலடியார் மூலபாடமும் திருவள்ளூவ மாலையும்- ஆக - மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள் உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் - இலக்கண இலகியங்களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந்தீர்மானஞ் செய்து - ஓரெழுத்து - ஓர்சொல் - நூதனமாகக் கூட்டாமற் குறையாமல் அநேக மூல பாடங்களுரைப் பாடங்களுங் கிணங்கனிதாகத் தீர்மானம் பண்ணிய சுத்தப் பாடம் பார்த்தெழுதிச் சரவை  ( பிழை )பார்த்த பாடமாகையாலும் - அந்தப்படி தீர்மானம் பண்ணி எழுதின பாடமென்பதும் - இவடங்களவிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் - ஆகையாலும் பாடங்களிலெவ்வளவேனுஞ் சந்தேகப்பட வேண்டுவதனன்று - இப்படிக்கு திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர்.”   
இவ்வரிய பதிப்புரையில் மூலப்பாடத்தை நிர்ணயிப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் நெறிமுறைகளும் புலனாகின்றன. மூலபாடத்தை அறிதற்கு இலக்கியங்களையும் பிற இலக்கணங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்தனர்; எழுத்தோ சொல்லோ கூட்டாமலும் குறையாமலும் சுத்த பாடத்தைக் கணித்தனர்; ‘சரவை பார்த்த பாடம்’ என்றும்3, மகா வித்துவான்கள் எந்த அளவிலும் சந்தேகப்பட வேண்டுவதினின்று என்று உறுதி மொழியும் தந்தனர். இதற்குப் பின்னரும் பதிப்புரையில் பின்வரும் குறிப்புக் காணப்படுகின்றது; இந்தப் பாடங்களை இங்கு வந்திருந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான் சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலு மறுபடி கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டன”. எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.

இங்ஙனம் பல்வேறு அறிஞர்களிடம் அனுப்பியும் ஆய்ந்தும் முடிவு கண்ட இப்பதிப்பின் மூல பாடங்களிலும் பிழை திருத்தம் கண்ட வரலாறு பெரிதும் குரிப்பிடத் தகுந்ததாகும். இந்நூல் அச்சானதிற்குப் பின்னரும் இந்நூலினைப் பார்த்து ஓலையில் படியெடுத்து எழுதி வைத்துள்ளனர். அங்ஙனம் படியெடுத்தவர்கள் பாடபேதங்களைக் கூர்ந்தாராய்ந்து பிழை திருத்தியுள்ளனர்.           

பாட பேத ஆராய்ச்சி ஏடு


கல்கத்தா தேசிய நூலகத்தில் கிடைக்கும் திருக்குறள் ஓலைச் சுவடி மூலம் இவ்வரலாறு தெரியவருகின்றது,. அந்த ஓலைச் சுவடியில் தரும் குறிப்பு வருமாறு4

”இது பொத்தகம் கலியுகாப்தம் 4900-க்கு ஆங்கிரச தொண்டை மண்டலம் சென்னைப் பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. மாசம் தினச் சரிதையின் அச்சுக்கூடம், ஆண்டு 1812. திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழைதீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்புவிச்சு, அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற்பதித்த காகிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்பிரான் கவிடாயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேற்டு எழுதியிருப்பது மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாணக் கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது 999 தை மீ....... நம்முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது

என்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூலபாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதிப்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்து விட்ஃபக்கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள் பற்றி விரிவான குரிப்புகள் இருப்பதுமல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர்.

அதிகாரம், குறள், ஆழ்வார்திருநகரி ஏடு, அச்சடி-பிழை -என்னும் நான்கு தலைப்புகளின் கீழ் அமைக்கப்ப்பட்டுள்ளது. எனவே, இச்சுவடி “திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு” எனலாம்.

முடிவுரை 


 திருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப்பதிப்பு நூலிலேயே, பதிப்பு நெறிகள், குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன. அச்சு நூலினும் வரும் பிழைகளைக் களைகின்ற ஆய்வு நெறி “பாட பேத ஆராய்ச்சி ஏடு” ஒன்றினாலும் நமக்குத் தெளிவாகும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. ஆ.விநாயகமூர்த்தி, மூலபாட ஆய்வியல்.

2. திருக்குறள் மூலபாடம் ( 1812 ) பக்கம் 2

3. சரவை - எழுத்துப்பிழை ( தமிழ்ப் பேரகராதி தொகுதி 3. பக்கம் 1315 )

4. கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள் ( மு. சண்முகம் பிள்ளை & இ.சுந்தரமூர்த்தி ) பக்கம் 30 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------





4 comments:

  1. அருமையான பதிவும், செய்திகளும்.

    தமிழ் நூல்களில், கல்வியில் உலகளாவிய நெறிகளை, தூய்மையை, துல்லியத்தை ஏற்றிய
    வரலாற்றை அறிய முடிகிறது. They had a process to verify and validate the publications with utmost care and responsibility.

    Multi level reviews are included in any worldly projects. While I am happy to note that such process were followed in the past, it remains as a concern in the contemporary thamizh world.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழன்பர் நாக.இளங்கோவன் அவர்களே. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கென்றே ஓர் தளம் உள்ளது. தமிழைக் கற்றுக் கொடுப்பதற்கல்ல. தமிழ்க் கதைகள், நாவல்களைச் செவி வழியாகக் கேட்டு ரசிப்பதற்கு உதவுவதே அதன் வேலை.கணினியின் துணை கொண்டு தமிழும் ஆங்கிலமும் கலந்த புதியதொரு மொழி உருவாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுகின்றது. 64 வயது. ஒரு விரலில் தட்டச்சு செய்து இயன்றதைச் செய்து வருகின்றேன். ஊக்குவிப்பிற்கு நன்றி. வணக்கம்.

      Delete
  2. அருமையான பதிவு! நன்றி! ஐயா, 64 அகவை என்பது இன்று நடுத்தர வயதைச் சற்றே தாண்டிய வயது என்று சொல்லலாம்! :)
    அருமையான பணி, வாழ்க! வளர்க உங்கள் நன் முயற்சிகள்! இப்படிப் பத்துப் பதிவுகள் இட்டாலும் அது நல்வரலாறு ஐயா! அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொன்டிருக்கின்றேன் :)

    உங்கள் முடிவுரை நறுக்கென்று அரிய செய்தியைக் கூறுகின்றது!

    // திருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப்பதிப்பு நூலிலேயே, பதிப்பு நெறிகள், குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன. அச்சு நூலினும் வரும் பிழைகளைக் களைகின்ற ஆய்வு நெறி “பாட பேத ஆராய்ச்சி ஏடு” ஒன்றினாலும் நமக்குத் தெளிவாகும்.//

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்குவிப்பு, நெஞ்சில் அவ்வபொழுது எழும் சஞ்சல உணர்வுகளைப் புறந்தள்ளும் மாமருந்தாகின்றது; நன்றி நண்பர் செல்வா அவர்களே!

      Delete

Kindly post a comment.