Wednesday, February 13, 2013

நச்செள்ளையார், காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் ஆன நிகழ்வு !
இயற்பெயர் மறைந்து, சிறப்புப் பெயரே பலருக்கு இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. அப்பட்டிப்பட்ட சங்காலப் புலவர்களுள் நச்செள்ளையாரும் ஒருவர்.

இவர் இயற்றிய பாடல்களின் கீழ் இயற்றியவர் பெயர், காக்கைப் பாடினியார் என்றே எழுதப்படுவது  வழக்கமாகிவிட்டது. நச்செள்ளையாரை நம்மில் பலர் மறந்தே போனோம். இதற்குக்  அவர்  காக்கையைப் பற்றி இயற்றிய பாடலே காரணமாகிவிட்டது.

சங்க காலத்தில் பொருளீட்டுவது ஆடவருக்கான கடமையாய் இருந்தது. காடும் மலையும் கடந்து தொலைநாடு அடைந்து நெடுநாள் இருந்து பொருள் ஈட்டித் தனது சொந்த ஊருக்குத் திரும்புகின்றான், ஓர் இளைஞன். திருமணமான அந்த இளைஞன், தன்னைப் பிரிந்திருந்தமையால், தனது மனைவி பெரிதும் இளைத்திருப்பாள் என்ற நினைவோடு வந்தான்,. ஆனால், அவன் மனைவியோ, இவன் பிரிந்து செல்லும்பொழுது இருந்தது போன்று பருத்த உடலுடையவளாகவே இருப்பது கண்டான். உடனிருக்கும் தோழியின் சிறந்த கவனிப்பே இதற்குக் காரணமாயிருக்கும் என்று கருதி அந்தத் தோழிக்கு நன்றி கூற முற்பட்டான்.

அந்தத் தோழியோ, தங்கள் தலைவி பிரிவுத் துயரால் இளைத்துத்தான் போனாள் இன்று காலை வீட்டிற்குள் வந்து காக்கை ஒன்று கரையக் கண்டாள். கணவனின் வருகை உறுதி எனக் கொண்டாள். மெலிந்த அவள் உடல் பருத்து விட்டது. ஆதலால், அக்காக்கைக்குத்தான் நீவிர் நன்றி சொல்ல வேண்டும்

.நள்ளி என்ற வள்ளலுக்குரிய காட்டில் வாழ்பவர்களாகிய ஆயர்களிடையே உள்ள பசுக்கள் பல அளிக்கும் நெய்யில், தொண்டி நகரில் விளந்த வெண்நெல் அரிசி இட்டு ஏழுபொற்கலங்களில் வைத்துக் காக்கைக்கு அளித்தாலும், அது , உன் காதலியின் உடல்மெலிவைத் தீர்த்த, உதவிக்கு ஈடாகாது என்றும் தோழி கூறினாள்.

காக்கை கரைந்தால்தான் தலைவன் வருவது உறுதியானது. தலைவன் வருவது உறுதியானதால்தான் பிரிவால் மெலிந்திருந்த தலைவியின் உடல் பழைய நிலைக்கு வந்தது. இவ்வாறு காக்கைக்குச் சிறப்பிடம் கொடுத்துக் கருத்துள்ள பாடலை நச்செள்ளையார் பாடிய காரணத்தால், காக்கைப் பாடினியார் என்ற சிறப்ப்புப் பெயருடன் அழைக்கப்பட்டார்.

திண்தேர் நள்ளிகானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”  .

(குறுந்தொகை : பாடல் : 210
 

பாடியவர் : காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்)

இளஞ் சிறுவனைப் போருக்கனுப்பி, மார்பில் காயம்பட்டு வீழ்ந்ததறிந்து

மகிழ்ந்த தமிழச்சியைப் பற்றிப் புறநானூற்றில் பாடிப் புகழ்பெற்றவரும்

காக்கைப் பாடினியார் நச்செள்ளைதான்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நான்காவதாகக் கருதப் படுவது, 

பதிற்றுப்பத்து.  இதில் இரண்டாம் பத்தும், பத்தாம் பத்தும் காணாமற் 

போய்விட்டன. அதில் ஐந்தாம் பத்தில், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 

என்னும் மன்னனைப் பற்றியும் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்,

காக்கைப்பாடினியார் நச்செள்ளை. பதிற்றுப்பத்தில் பாடியுள்ள

ஒரே பெண்பாற்புலவர் இவர் மட்டும்தான் !

தகவல் உதவி:-

பதிற்றுப்பத்து விளக்கம் எண் : 5. ஆறாம் பத்து

வடுஅடும் நுண் அயிர்

ஆசிரியர்
புலவர். கா.கோவிந்தன்
திருவத்திபுரம்

வெளியீடு
எழிலகம், செய்யாறு, 604 407

முதற்பதிவு: மார்ச்சு 1990
100 பக்கங்கள்

திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் வாங்கப்பட்டது.
விலை அழிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக வீட்டில் இருந்தநூல்.


1 comments:

Kindly post a comment.