Sunday, February 17, 2013

சோவியத்தைப் போல சீனாவும் சிதைந்துவிடும்: சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை !


கட்சியில் கொள்கை விஷயத்தில் கருத்து வேறுபாடும், பிரச்னைகளும்  ஏற்பட்டால் சோவியத் ரஷியாவைப் போல சீனாவும் சிதைந்துவிடும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

அதிகரித்து வரும் ஊழல், ராணுவத்தில் ஒழுங்கின்மை ஆகியவை நாட்டைச் சரிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதத்தில் அங்குள்ள குவாங்டாங் மாகாணத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கட்சித் தலைவர்கள் மத்தியில் அவர் பேசியதன் விவரம் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் இப்போது வெளியாகியுள்ளது. அதில் ஜி ஜின்பிங் பேசியதாகக் கூறப்பட்டிருப்பது: சோவியத் யூனியனிடம் இருந்து சீனா பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அங்கு அரசியல் சீரழிந்து, கொள்கைப் பிடிமானத்தில் தளர்வு ஏற்பட்டு, இராணுவத்தில் ஒழுக்கம் குறைந்து ஆளும் கட்சிக்குப் பெரும் சரிவை ஏற்படுத்தியது.

சோவியத் யூனியன் சிதைந்ததற்கும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வீழ்ந்ததற்கும் கொள்கைகளும், குற்றத் தீர்ப்பு முறைகளிலும் தள்ளாடியதுதான் காரணம்.

சோவியத் யூனியனின் கடைசித் தலைவரான கோர்பசேவ், சோவியத் யூனியன் கம்யீனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டபோது கூறிய வார்த்தைகள் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கடைசியில் யாருமே உண்மையானவர்களாக இல்லை, யாருமே எதிர்த்துப் போராட முன்வரவில்லை என்பதுதான் அந்த வார்த்தைகள்.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அந்நாட்டை 74 ஆண்டுகள் ஆண்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இப்போது 64ஆவது ஆண்டை எட்டியுள்ளது.

நாம் மிகப்பெரியாக சக்தியாக இருக்கிறோம். நமது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் எவ்விதத் தவறுகளும் நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது நமது நாட்டில் எழுந்துள்ள சிறுசிறு பிரச்னைகள் நாம் விழித்துக் கொள்வதற்கான எச்சரிக்கை மணியாக உள்ளது. சோவியத்திடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.

கம்யூனிஸத்தின் இரும்புக் கோட்டையாக  விளங்கி வரும் சீனாவில், இப்போது அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊழலும், ஒழுக்கக் கேடான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.                                

நன்றி ;- தினமணி, 16-02-2013
                              



0 comments:

Post a Comment

Kindly post a comment.