Thursday, February 21, 2013

நிறுத்தப்பட்ட சீர்காழி தமிழிசை மூவர் விழா தொடருமா ?



அரசு சார்பில் ஆண்டுதோறும் ஆனி மூலம் நட்சத்திர தினத்தில் தொடங்கி 3 நாட்கள் சீர்காழியில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழா கடந்த 3 ஆண்டுகளாகத் தடைபட்டுள்ளது. கடந்த 2010-ல் கோவை செம்மொழி மாநாடு காரணமாக இந்த விழா தடைபட்டது. 2011, 2012-களில் காரணம் ஏதும் குறிப்பிடப்படாமலேயே விழா கைவிடப்பட்டது.

தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் இல்லாத நிலையில், சீர்காழி சட்டநாதர் கோவிலில் கொண்டாடப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாகத் தடைபட்டுள்ள தமிழிசை மூவர் விழாவை நிகழாண்டிலிருந்து, மூவர் மணிமண்டபத்தில் சிறப்பாகப் கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

மூவரின் பெருமைகள்

முத்துத்தாண்டவர்: தமிழகத்தின் கீர்த்தனம் - கிருதி - மரபுக்குப் பிதாமகன் எனக் குறிப்பிடப்படும் இவர் சீர்காழியில் இசைவேளாளர் மரபில் பிறந்தவர். தில்லை (சிதம்பரம்) நடராஜப் பெருமானுக்குத் தனது கீர்த்தனைகளையும், பதங்களையும் அர்ப்பணித்தவர். 80 வயதுக்கும் மேல் வாழ்ந்த இவர் இயற்றிய கீர்த்தனங்கள் பல நூறு என அறியப்பட்டாலும், இவர் பாடிய 80 கீர்த்தனங்கள் மட்டுமே தமிழிசை உலகுக்குக் கிடைத்துள்ளன.

மாரிமுத்தாப்பிள்ளை: சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் சைவ வேளாளர் மரபில் பிறந்தவர் இவர். தில்லை நடராஜப் பெருமான் மீது பல கீர்த்தனங்களையும், பதங்களையும் பாடியவர். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்கள் வரிசையில் இடம் பெற்றவர். இவரது படைப்புகளில் குறவஞ்சி, நொண்டி நாடகம் மற்றும் சொந்த ஊரைப் பற்றிப் பாடிய பதிகங்கள் குறிப்பிடத்தக்கவை.

அருணாச்சலக் கவிராயர்: நாகை மாவட்டம், தில்லையாடியில் சைவவேளாளர் குலத்தில் பிறந்த இவர் கம்பராமாயணத்தையும், இராம சரித்திரத்தையும் கீர்த்தனையாகப் பாடியவர். இவரது கீர்த்தனைகளைப் பாடாத இசைவாணர்களே இல்லை எனக் குறிப்பிடப்படுவதன் மூலம் இவரின் பெருமையை உணரலாம்.

தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள்

மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சுமார் 250 பேர் அமர்ந்து பார்க்குமளவு இடவசதி உள்ளது. நாட்டிய நிகழ்ச்சி நடத்துவதற்கேற்ப மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பனை அறை, கழிப்பறை ஆகியன அமைக்க வேண்டும். தமிழிசை மூவரின் கீர்த்தனைகளை சுவர்களில் பொறிக்க வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

சீர்காழி தமிழிசை மூவர் பேரவையின் நிர்வாகி பாலவேலாயுதம்:

தமிழிசை மூவர்களின் கீர்த்தனைகள், வாழ்க்கை வரலாறுகள் குறித்த நூல்கள் இந்த மண்டபத்தில் இடம்பெற வேண்டும். இதைப் பார்வையிடுவோருக்குத் தமிழிசை மூவர் குறித்த அனைத்து விவரங்களும் தெரியும் வகையில் ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும்.

திருப்பாணர் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அமிர்த ஜெயராமன்:

இங்கு அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலைகள் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டன. தமிழ் மீதான ஆர்வம் மற்றும் தன்னார்வத்துடன் இந்தச் சிலைகளை மண்டபத்துக்குள் இறக்கிவைக்கும் பணியில் ஈடுபட்ட எனக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தமிழிசை மூவரின் கீர்த்தனைகளை தினமும் இந்த மணிமண்டபத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும். மூவரின் கீர்த்தனைகளையும் சுவர்களில் பதிக்க வேண்டும். இந்த மணிமண்டபம் தமிழிசை மூவரின் புகழ் பரப்பும் மையமாகச் செயல்பட வேண்டும்.

திருக்குறள் பண்பாட்டுப் பேரவை நிர்வாகி கு. ராஜாராமன்:

இந்த மணிமண்டபத்தில் இசை நிகழ்ச்சிகள் பிரதானமாக இடம்பெற வேண்டும். தமிழிசை மூவரின் வரலாறு, கீர்த்தனை புத்தகங்கள் இடம் பெற வேண்டும்.                                                                                                                                         

நன்றி :- தினமணி, 21-02-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.