Sunday, February 10, 2013

சொல்வனம் : மாதம் இரு முறை வெளிவரும் இணைய இதழ் ! !







http://solvanam.com/?p=23867#3

சீனா - தொழிற்சாலை வேலைகளும் பட்டதாரிகளும்

ஒரு புறம் யூரோப்பியர், ஜப்பானியர், அமெரிக்கர் போன்றாரெல்லாம் வேலைகளின்றித் திண்டாடுகின்றனர். பல பத்தாண்டுகளாக உழைத்துச் சேர்த்த பெருந்தனமும் ஜப்பானியரைப் பாதுகாக்கவில்லை.

பல நூறாண்டுகளாக உலகில் பல வெள்ளையரல்லாத மக்களைக் கொன்று, மதம் மாற்றி, அடிமைகளாக்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்தி, எத்தி, சுரண்டிச் சேர்த்த பெரும் செல்வம் யூரோப்பியரைப் பாதுகாக்கவில்லை. உலகெங்கும் ஏகாதிபத்தியத் திமிரில் போர்களை நடத்தி, லத்தீன் அமெரிக்க மக்களைக் கொடுங்கோலர் ஆட்சியில் ஆழ்த்தி அந்நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டிச் சேமித்த பெருந்தனம் அமெரிக்கர்களைப் பாதுகாக்கவில்லை.

சீனாவிலோ இன்று வேலையில்லாத் திண்டாட்டம் அல்ல பெரும் பிரச்சினை. வேலைகள் ஒரு புறம் ஆட்களில்லாமல் கிடக்க, இன்னொரு புறம் இளைஞர்கள் தம் விருப்பமான வேலைகள் வந்தால்தான் வேலைக்குப் போவது என்று இருக்கிறார்கள். இதை ‘Sectoral imbalance’ என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள்.

 மேம்போக்காகப் பார்த்தால் இது அத்தனை மோசம் இல்லையே என்று தோன்றும். உண்மையில் இந்த வகை அசமத்துவங்களைச் சீர் செய்வது கடினம்.  ஏனெனில் எந்த ஊக்குவிப்பு பெருவாரி மக்களைப் படித்தவர்களாக ஆக்குகிறதோ, அந்த ஊக்குவிப்பை அழிக்கவும் கூடாது, அதே நேரம் உடலுழைப்பே பிரதானமான வேலைகளுக்கும் ஆட்கள் வேண்டும்.  இது ஒன்றும் சுலபத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினை இல்லை. ஒரு தீர்வு, தானியங்கி உற்பத்தி எந்திரங்கள். கருத்தியல் அளவிலேயே தானியங்கி எந்திரங்களைச் சீனக் கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்க வேண்டி இருக்கும். ஆனால் அது எதிர்ப்பதில்லை.  அத்தகைய எதிர்ப்பு ஜனநாயக இந்தியாவில்தான் சாத்தியம்.

இந்தியாவில் இந்த பொருந்தா நிலைகள் பல பத்தாண்டுகளாக இருந்து வந்தன, இன்னும் இருக்கின்றன. இதை மறைக்கப்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் என்றும் அறியலாம். ஏனெனில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில்லாது, ஏதோ எப்படியோ கிட்டிய வேலைகளில் மாட்டிக் கொண்டு பல வருடங்கள் உழலும் இளைஞர்களின் பிரச்சினை ஒரு புறம், இன்னொரு புறம் மேன்மேலும் படித்துக் கொண்டிருந்தாலும் எந்த வேலையும் கிட்டாத பிரச்சினை. படித்த படிப்புக்கு வேலை கிட்டாததால் உடலுழைப்பு வேலைகளுக்குப் போகத் தயங்கும் இளைஞர்களின் பிரச்சினை ஒரு புறம். தம்மிடம் இருக்கும் வேலைகளுக்கு நம்பத்தக்க, உழைத்து ‘முன்னேற’த் தயாராக உள்ள இளைஞர்கள் கிட்டவில்லை என்று குறை சொல்லும் நிறுவனங்கள் இன்னொரு புறம். இந்தப் பிரச்சினைகள் குறித்துத் தமிழிலேயே கடந்த பல பத்தாண்டுகளில் ஏராளமான சிறுகதைகள், குறுங்கவிதைகள், நாவல்கள் வந்திருக்கின்றன. அகில இந்திய அளவில் இன்னும் பெரும் எண்ணிக்கையில் இத்தகைய புதினங்கள் உண்டு. இந்த நிலை சீனாவில் பரவி வருகிறது என்று செய்தி.

இதெல்லாம் சந்தைச் சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சினைகள், என்றுமே இருக்கும் என்று திறந்த பொருளாதாரத்தை முன்வைத்து வாதிடுவோர் சொல்கிறார்கள். மாறாக, இந்த வகைப் பிரச்சினைகள் பல நேரம் மூடிய பொருளாதாரங்களிலும் ஏராளமாகக் காணப்படும். இதை இந்தியா, கிழக்கு யூரோப் (சோவியத் அமைப்புகள்), சோவியத் ரஷ்யா போன்றவற்றில் எக்கச் சக்கமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. கையெழுத்துப் போட்டு விட்டு வேலைக்கு வராது தனியார் வியாபாரங்கள் செய்யும் அரசு ஊழியர்களை நாம் இந்தியாவில் பல பத்தாண்டுகளாக நிறையப் பார்க்க முடிந்திருக்கிறது. இதே இன்று சீனாவில் காணப்படுகிறது என்கிறார்கள்.

எல்லாப் பொருளாதாரங்களிலும் இந்த வகை ‘Structural imbalances’ என்பன தவிர்க்க முடியாதவை என்று ஒத்துக் கொண்டாலும், எத்தனை சீர்குலைவு ஏற்கத் தக்கது என்பது ஒரு கேள்வி.

 [இது குறித்து சொல்வனத்துக்கு யாரும் கட்டுரைகள் எழுதினால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.]

இங்கே சீனாவில் தாம் படித்து கல்லூரிப் பட்டங்கள் வாங்கி இருப்பதால் தொழிற்சாலை வேலைகளுக்குப் போக புதுத் தலைமுறை இளைஞர்கள் தயங்குகிறார்கள் என்று செய்தி சொல்கிறது. படித்துப் பாருங்கள்.

http://www.nytimes.com/2013/01/25/business/as-graduates-rise-in-china-office-jobs-fail-to-keep-up.html?em&pagewanted=all&_r=1&


11-06-2009 மாதம் இருமுறையாக வெளிவரும் இணைய இதழ். தொடர்ந்து வந்து கொண்டிருப்பது இதன் சிறப்பு. சில புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது
/
11-06-2010  இரண்டாம் ஆண்டின் துவக்க நாள்

11-06-2011  மூன்றாம் ஆண்டின் துவக்க நாள்

ஆசிரியர் குழுவில் உள்ள பெயர்களை வெளிப்படையாகவே அறிவிக்கலாம்.  எங்குமே வெளிப்படையான தன்மை வேண்டும்  வலுத்துவரும் இந்நாளில், ஆசிரியர் குழு வெளிப்படையாகவே இயங்கலாம். இயங்கவேண்டும் என்பது எமது விருப்பம்.

நூல் விமர்சனங்கள், நல்லோர் பேட்டிகள், புத்தக அறிமுகங்கள், பிரச்சினைக்குரிய தலைப்புக்களில் விவாதக் கட்டுரைகள் என, இணையத்த்தில் உலாவரும் “சொல்வனம்” அனைவரும் தவறாமல் படிக்க வேண்டிய இணைய இதழ். .

‘Sectoral imbalance’ குறித்த விவாதத்தைத் துவக்கிவைத்துள்ள ஓர் கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ளது. பொருளாதரத்துறையில் ஈடுபாடுடையோர் விவாதத்தைத் தொடர்வத எல்லோருக்குமே சிறப்பினைத்தரும். 


http://solvanam.com/?p=23867#3



0 comments:

Post a Comment

Kindly post a comment.