Saturday, January 12, 2013

”முதற்சங்கு” பொறுப்பாசிரியர் மலர்வதிக்கு சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது !




சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மலர்வதி (இ.மேரி ஃபுளோரா) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு விருது வழங்கிக் கெüரவித்து வருகிறது,சாகித்ய அகாதெமி. 2012-ஆம் ஆண்டுக்குரிய விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வுசெய்வதற்காக, சாகித்ய அகாதெமியின் செயற்குழு கூட்டம், அதன் செயல் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் புதுதில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற 19 மொழிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில், தற்போது 19 மொழிகளுக்கான சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்புரி, நேபாளி, சந்தாலி, தெலுங்கு ஆகிய மொழிகளுக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிந்தி மொழிக்கு விருது கிடையாது.

விருதுக்குத் தேர்வானவர்கள்: இவ்வாண்டில் சிறந்த நாவலுக்கான விருதை மலர்வதி (தமிழ்), திகாந்தா லவாரி (போடோ), அமன் சேத்தி (ஆங்கிலம்), குணால் சிங் (ஹிந்தி), பர்கத் சிங் சட்டவுஜ் (பஞ்சாபி) ஆகியோர் பெறுகின்றனர்.

கவிதைத் தொகுப்பு: கமல் குமார் தண்டி (அசாம்), யாஸ் ரெய்னா (டோக்ரி), ஜட்டுஸ் ஜோஷி (குஜராத்தி), ஆரிஃப் ராஜா (கன்னடம்), அருணாவ் செüரவ் (மைதிலி), லோபா.ஆர் (மலையாளம்), ஓம் நாகர் (ராஜஸ்தானி),  பிரவிண் பாண்டியா (சம்ஸ்கிருதம்) ஆகியோர், சிறந்த கவிதை தொகுப்புக்காக இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறுகதைத் தொகுப்பு: சிறந்த சிறுகதை தொகுப்புக்காக, சாதிக் ஹுசேன் (பெங்காலி), சிருஸ்டிஸ்ரீ நாயக் (ஒடியா), தர்மகீர்த்தி சுமந்த் (மராத்தி) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலக்கிய விமர்சனம்: ஃபாரூக் ஷஹீன் (காஷ்மீரி), நமான் தவாஸ்கர் சாவந்த் ( கொங்கனி), கஜன்ஃபார் இக்பால் (உருது) ஆகியோர், சிறந்த இலக்கிய விமர்சனத்துக்காக, சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுக்கான இந்த விருது பின்னொரு நாளில் வழங்கப்படும். இவர்களுக்கு, தலா ஒரு தாமிர பட்டயமும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் அளிக்கப்படும்.  

நன்றி :- தினமணி, 28-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.