Saturday, January 12, 2013

தமிழறிஞர் கோபாலையர் வியந்துரைத்த பாவலர் பாலசுந்தரம் எழுதிய 6 இலக்கண நூல்கள் !
http://www.kalachuvadu.com/issue-93/page68.asp

அஞ்சலி: பாவலர் பாலசுந்தரம் (18.01.1924 - 01.08.2007)

( ”விலகிய மனோநிலை” என்னும் தலைப்பில் பொ.வேலுச்சாமி காலச்சுவடு

93-வது இதழில் எழுதிய  அஞ்சலிக் கட்டுரை.)கரந்தைப் புலவர் கல்லூரியில் சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருந்த பாவலர்
பாலசுந்தரம் அவர்களை 1969-1973 ஆகிய காலகட்டத்தில் தொடர்ந்து சந்தித்து உரையாடும்
வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தொல்காப்பியத்தையும்
தமிழ் இலக்கணத்தின் அமைப்பையும் அவர் நுட்பமாக ஆராய்ந்துவந்தார். இதன் விளைவாகத்
தமிழ் மொழியின் அமைப்பைக்கொண்டு திராவிட மொழிகளின் தனித்துவத்தை விளக்கியதுபோலத்
தமிழ் மொழியின் இலக்கண அமைப்பு என்பது வட மொழியின் இலக்கண அமைப்பிலிருந்து
முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையது என்பதைப் பாவலர் கண்டுபிடித்தார். இந்தக்
கண்டுபிடிப்பின் அடிப்படையில் இவர் நன்னூலாருக்கு இலக்கணம் தெரியாது,
சேனாவரையருக்குத் தமிழ் புரியாது, நச்சினாக்கினியர், சிவஞான முனிவர் போன்றவர்கள்
தமிழ் இலக்கணத்தின் தனித் தன்மையைப் புரிந்துகொண்டவர்களாக இருந்தும் பெரியவர்கள்
சொன்னதை மறுதலிக்ககூடாது என்று அஞ்சிச் சமாதானங்கள் கூறி அமைதி பெற்றனர் என்றெல்லாம்
அவர் கூறுவார்.

'பவணந்தியாருக்குத் தமிழ் தெரியாது என்கிறீர்களே. ஆனால், அவர் எழுதிய நன்னூல் கடந்த
எண்ணூறு ஆண்டுகளாகத் தமிழர்களால் படிக்கப்பட்டும் படிப்பிக்கப்பட்டும் வருகிறதே.
பிழையான ஒரு நூல் எண்ணூறு ஆண்டுகளாக உயிருடன் இருப்பதன் காரணம் என்ன? இன்றும் அதைப்
படித்துக்கொண்டு வருபவர்கள் எல்லாம் மடையர்களா? நீங்கள்கூட அத்தகைய மனிதர்களிடந்தானே
நன்னூலையும் தொல்காப்பியத்தையும் படித்தீர்கள்? உங்களுக்கு மட்டும் இது எப்படிப்
புரிந்தது?' என்றெல்லாம் கேட்பேன்.

அவர் சொன்ன பதில் இது - தொல்காப்பியத்துடன் தமிழ் இலக்கணக் கல்வி முடிவடைந்துவிட்டது.
பின்பு வந்த ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுக் காலத்தில் வடமொழியான சமஸ்கிருத இலக்கணந்தான்
தமிழ் இலக்கணத்தின் அடிப்படை என்னும் கருத்து உருவாகி வலுப்பெற்று நிலைபெற்றுவிட்டது.
பழந்தமிழ் இலக்கணப் புலவர்கள் இலக்கணத்துக்கு அடிப்படையாக வழக்கு மொழியையும்
செய்யுள் மொழியையும் சமமாக எடுத்து ஆராய்ந்தார்கள். எழுதப்பட்ட இலக்கணத்தைவிடப்
பேச்சு மொழிதான் உயிரோட்டம் உள்ளது. ஆகவே, பேச்சுமொழியை இலக்கணத்துக்கு
அடிப்படையாகக் கொள்ளாவிட்டால் இலக்கணநூல் என்பது செத்த மொழிக்கு எழுதப்பட்ட இலக்கணம்
ஆகிவிடும். உயிரோட்டமுள்ள வாழும் மொழிக்கு இலக்கணம் இல்லாமலே போய்விடும். இந்த அவலம்
தமிழ் இலக்கண வரலாற்றில் நிகழ்ந்தது

எழுத்து மொழிக்கான இலக்கணங்கள்தாம் தமிழில் பயிலப்பட்டும் எழுதப்பட்டும்வந்தன. இது
மனிதர்கள் பேசாத சமஸ்கிருத மொழி இலக்கணத்திற்குப் பொருத்தமாக இருந்தது. பேச்சு
மொழியாக இருந்த தமிழுக்கு அந்நியமாகிப்போனது. இந்த அந்நியமான எழுத்து மொழி
இலக்கணத்தைத்தான் நன்னூலூம் தொல்காப்பிய உரையாசிரியர்களும் எழுதியும் பயிற்றியும்
வந்தனர். அதனால் நன்னூல் இன்றுவரை பயிலப்பட்டுவருகின்றது. இதனால்தான் தமிழ் மொழி
என்பது எழுத்தில் ஒருவகையாகவும் பேச்சில் வேறு வகையாகவும் மாறிவிட்டது என்று
விளக்கினார்.

தமிழ் இலக்கண அறிஞரான தி.வே. கோபாலய்யர் 'பாவலரேறு இங்ஙனம் இந்நூலில் உள்ள
குறைபாடுகளை எடுத்து விளக்கிய பின்னரே நன்னூல் அமைப்பிலும் இவ்வளவு குறைகள் உள்ளனவா
என்று நாம் வியக்கிறோம். இவர் குறிப்பிடும் பல குறைகளில் சில வழுவமைதியாகக்
கொள்ளப்படலாம். பல குறைகளுக்கு அமைதி காண்டல் எளிதன்று' என்று கூறுகிறார் (மடைமாறிய
தமிழிலக்கண நூல்கள்-முன்னுரை). எடுத்துக்காட்டாக வேற்றுமையின் இலக்கணத்தைக் கூறவந்த
தொல்காப்பியர் ஒரு பெயர்ப்பொருள் செயல்படத் தொடங்கும் நிலைகளில் அந்தப்
பெயர்ப்பொருள் அடையும் வேறுபாடுகளை விளக்கிக்காட்டுவதாக அமைக்கிறார்.
செயல்படுவதாகிய வினையே வேற்றுமைக்குக் காரணமாக இருப்பதால் தொடர்மொழி இலக்கத்தில்தான்
அது விளங்கும். ஆகையால் தொடர்மொழியைக் கூறும் இயல்களில் அதனை வைத்து விளக்குவார்.

எழுத்து வடிவில் உள்ள மொழிதான் இயல்பானது என்று கருதிய பவணந்தியார் தமிழ் மொழியின்
இந்த நுட்பத்தை உணராது பெயர்ச் சொற்களில் ஏற்படும் மாற்றத்தை வேற்றுமை என்கிறார்.
அவ்வேற்றுமைக்கு அடிப்படையானது ஐ, ஆல், கு போன்ற வேற்றுமை உருபுகளே என்று
கருதியதனால் இதனைப் பெயர்ச் சொல்லுக்கு உரிய இலக்கணப் பகுதியாகப் பெயரியலில்
கூறுகிறார். உருபுகளே வேற்றுமை செய்யும் என்பது வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் உள்ள
கொள்கையாகும். இந்தக் கருத்து சரியானால் முதல் வேற்றுமைக்கும் எட்டாம்
வேற்றுமைக்கும் உருபே கிடையாதே அவை எப்படி வேற்றுமையாகும் என்ற கேள்வியைப் பாவலர்
எழுப்பிப் பவணந்தியாருக்குத் தமிழ் மொழியின் நுட்பம் தெரியாததை விளக்குகின்றார். இது
போன்ற பல்வேறு நுட்பமான விளக்கங்களைப் பாவலர் தன்னுடைய தொல்காப்பிய உரை நூலிலும்,
நன்னூல் திறனாய்வுரை, தமிழ் இலக்கண நுண்மைகள், மடைமாறிய இலக்கண நூல்கள்
போன்றவற்றிலும் விளக்கி உரைக்கின்றார்.

சொந்த ஊரான தஞ்சையில் எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டுத் தனது தந்தையாருடைய
கற்பட்டறையில் வேலைசெய்துவந்த பாவலருக்கு அவர் தந்தையின் நண்பர் ஒருவர் பக்கத்தில்
உள்ள கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ்ப் படிக்கலாம் என்று அறிவுரை கூறினார்.
அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்காமலேயே நுழைவுத் தேர்வு எழுதிப் புலவர்
வகுப்பில் சேரலாம் என்பதனால் நுழைவுத் தேர்வு எழுதி வித்துவான் வகுப்பில் சேர்ந்தார்.
சேர்ந்து நான்கு ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறினார். அப்பொழுது அவருடைய
வகுப்புத் தோழராகவும் நண்பராகவும் இருந்தவர் இடதுசாரிக் கவிஞரான தமிழொளி என்பது
குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தோழமையுடைய நண்பர்களின் தொடர்பினால் நவீன உலக இலக்கியவாதிகளான டால்ஸ்டாய்,
தஸ்தயெவ்ஸ்கி, கார்க்கி போன்றவர்களின் படைப்புகளைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இத்தகைய நூல்களை அவருடைய வீட்டில் நான் பார்த்திருக்கிறேன். இதன் விளைவாகப்
பாரம்பரியமான புலவர்களின் மனோநிலையிலிருந்து அவர் விலகியவரானார். எதனையும் ஏன்
எதற்கு என்று கேள்வி எழுப்பி ஆராயும் மனோபாவம் படைத்தவராக இருந்தார்.

பள்ளியக்கரகாரம் நீ. கந்தசாமிப் பிள்ளை, கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளை, க.
வெள்ளைவாரணர் போன்ற பழந்தமிழ்ப் புலவர்களிடம் இவருக்குப் பழக்கம் இருந்தது.
இருந்தாலும் நன்னூலார், சேனாவரையர், நச்சினார்க்கினியர் போன்ற மாபெரும் புலவர்களிடம்
இருந்த பிழைகளை இவர் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. வெறுமனே சுட்டிக்காட்டாது
சரியானவற்றைத் தம் ஆராய்ச்சியின் மூலம் நிறுவியதுதான் தொல்காப்பியம் மூன்று
அதிகாரங்களுக்குமான உரை விளக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. வடமொழி மரபிலிருந்து
தமிழ் மரபு என்பது எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை ஏராளமான தமிழ்ச் சொற்களைக்கொண்டு
இவர் விளக்கிக்காட்டுவார்.மொட்டும் மலரும் - சொற்பொருள் விளக்கம் மி, மிமி, மிமிமி
ஆகிய மூன்று நூல்களில் மூவாயிரம் சொற்களுக்கான இந்த விளக்கங்களை விரிவாக எழுதுகிறார்.

இலக்கணக் கலைச் சொல் விளக்க அகராதி என்ற வரிசையில்
இவர் எழுதியுள்ள
1.எழுத்திலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதி,
2. சொல்லிலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதி,
3. யாப்பிலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதி,
4.அகப்பொருளிலக்கணக் கலைச் சொல், கிளவித் துறை விளக்க அகராதி,
5. புறப்பொருளிலக்கணக் கலைச்சொல் துறை விளக்க அகராதி,
6. மொழியாக்க நெறி மரபிலக்கணம் ஆகிய நூல்கள் தமிழ்
மொழியில் உள்ள சொற்களின் தனித்துவமான பண்புகளை விளக்கும் தன்மையுடையனவாகும்

பொதுவாகத் தமிழ் இலக்கணத்தைப் படிப்பவர்கள் எழுத்திலக்கணங்களைப் பற்றி விளக்கும்
எழுத்ததிகாரத்தை முக்கியமானதாகக் கருதுவது இல்லை. சொல்லிலக்கணத்தைக் கூறும்
சொல்லதிகாரத்தைத்தான் இலக்கணமாக மதிப்பார்கள். இது வடமொழி மரபையே தமிழ் மரபாகக்
கருதிக்கொண்டதனால் வந்த நிலை. இதன் விளைவாகத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு
அறுவருக்கும் மேற்பட்டோ ர் உரை எழுதியிருக்க எழுத்துக்கும் பொருளுக்கும் இருவர்,
மூவர்தான் உரையெழுதியுள்ளனர். எழுத்திலக்கணப் பகுதிகளின் முக்கியத்துவத்தை நமக்கு
மிகத் தெளிவாக விளக்கும் வகையில் பாவலர் தொல்காப்பிய எழுத்ததிகாரத்துக்கு உரை
எழுதியுள்ளார்.

மெய் எழுத்துகளைப் பற்றிய அவருடைய விளக்கம் என்பது தமிழர்கள் எழுத்துகளைப் பற்றி
எப்படி நுண்மையான கருத்துகளைக் கொண்டிருந்தனர் என்பதைச் சிறப்பாக விளக்குகின்றது.
நூன்மரபு என்பதற்கு நுவலும் மரபு என்று இவர் தரும் விளக்கம் அறிவியல் ரீதியாக உள்ளது.

எழுத்ததிகாரம் 16ஆம் நூற்பாவான "எகர ஒகரத் தியற்கையு மற்றே" என்பதை "இகர உகரத்
தியற்கையு மற்றே" என்று மாற்றி அமைத்துத் தொல்காப்பியத்தில் முன்பு இருந்த பாடம்
பிழையானது என்று இவர் கூறுவதை இலக்கணப் புலவர் கோபாலய்யர் வியந்து பாராட்டுகிறார்.
இதே போன்று தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு இவர் எழுதியுள்ள உரை இரண்டாயிரம்
ஆண்டுகளுக்குப் பின்னர் அதைச் சரியாகப் படித்து முறையாக விளக்குவதாக உள்ளது என்று
கோபாலய்யர் கூறுவதை நாமும் படித்தால் உண்மையென்று ஒப்புக்கொள்வோம். சரியாகச்
சொல்வதானால் தொல்காப்பியரே மீண்டும் பிறந்து வந்து தன்னுடைய நூலைத்தான் கொண்டுள்ள
நியாயங்களுடன் தமிழ் மொழியின் அமைப்பையும் செம்மையாக இணைத்து விளக்குவது போன்று
இவருடைய உரை அமைந்துள்ளது எனலாம்.

பெரும் புலவர்களாக இருந்தவர்கள் கூடத் தலைமுறை தலைமுறையாகத் தமிழ் இலக்கணத்தையும்
தொல் காப்பியத்தையும் வடமொழிப் பார்வையின் ஊடாகத் தவறாக வாசித்து வந்தனர். நவீனக்
காலமாகிய 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தனித்தமிழில் ஆர்வம் கொண்ட தமிழ் அறிஞர்களும்
இந்தச் சிந்தனைப் போக்கிலிருந்து வெளிவரவில்லை. வையாபுரிப் பிள்ளை, தெ.பொ. மீனாட்சி
சுந்தரனார் போன்ற நவீனத் தமிழ் அறிஞர்களும் இதனைப் புரிந்துகொண்டிருந்தனர் என்று
சொல்லமுடியாது.

ஆங்கிலத்தின் வாடையே அறியாது தமிழ் ஒன்று மட்டுமே கற்றிருந்த பாவலர்
பாலசுந்தரம் தன்னுடைய சுயசிந்தனையின் விளைவாகவும் கடின உழைப்பின் மூலமாகவும் தமிழ்
இலக்கணத்தின் சரியான தன்மையைத் தொல்காப்பியத்தின் ஊடாக விளக்கிய ஒரே மனிதர் என்று
துணிந்து கூறலாம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.