Friday, January 25, 2013

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் மருத்துவமனைக்கு அனுமதி: எதிர் மனுக்கள் தள்ளுபடி !



புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றுவது என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்று 19.8.2011 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து வழக்குரைஞர் ஆர்.வீரமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் கட்டடத்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று கூறி அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் டி. முருகேசன், கே.கே. சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடைசியில் இந்த வழக்கினை வேறு நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக நீதிபதிகள் கே.என். பாஷா, என். பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த புதிய அமர்வு வழக்கு குறித்து கடந்த சில மாதங்களாக விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதிகள், அரசின் முடிவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பு விவரம்: சென்னையில் ஏற்கெனவே பல மருத்துவமனைகள் இருந்தாலும்கூட, சென்னையின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டால் இந்த மருத்துவமனைகள் போதுமானது அல்ல. ஆகவே, மக்களுக்குத் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்று தமிழக அரசு எடுத்த முடிவை வீணான முடிவு எனக் கூற முடியாது.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனைகூட இன்றுவரை சென்னையில் இல்லை. இந்நிலையில், புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்று தமிழக அரசு எடுத்த முடிவு மக்கள் நலனைக் கருதியே எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முடிவுக்குத் தமிழக சட்டப்பேரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. சட்டப்பேரவை ஒப்புதல் அளித்த அரசின் இந்தக் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், கட்டடத்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்யச் சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றிதழையும் அரசு பெற்றுள்ளது.

இதே விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அதே பிரச்னையை மீண்டும் எழுப்ப முடியாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.                                                                                                                                     



நன்றி :- தினமணி, 25-01-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.