Monday, January 21, 2013

தங்கமாகிறது தண்ணீர் -பெ.சுப்ரமணியன், அரியலூர்



நாடாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் அவற்றின் முன்னேற்றத்துக்கு இரு வழிகள் உண்டு. ஒன்று, இருக்கின்ற வளத்தைச் சிறிதும் வீணாக்காமல் திறம்படப் பயன்படுத்துவது; மற்றொன்று புதிய வளங்களை உருவாக்குவது.

வேளாண்மைதான் இந்தியாவின் முதுகெலும்பு என்னும்போது நீராதாரங்களின் விஷயத்தில் இந்தியாவின் நிலை என்ன?

நாடு, வீடு என்று இரு நிலைகளிலும் நாம் நீராதார விஷயத்தில் அலட்சியம் காட்டிவருகிறோம் என்பதே உண்மை. கடந்த இருபதாண்டுகளாக வேளாண்மை சிதைவடையாவிட்டாலும் அதன் முகம் மாறி வருகிறது.

அதிகரித்துவரும் நகர்மயமாதல், இடப்பெயர்வு, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக உருப்பெறுதல் போன்றவை இதன் அடையாளங்கள்.

மக்கள் தொகைப் பெருக்கம், நகர்மயமாதல், அதிகரித்துவரும் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றால் தண்ணீரின் பயன்பாடும் தேவையும் அதிகரித்து வருகிறது. அதனால் நிலத்தடி நீர் எந்தவிதக் கட்டுப்பாடும், கண்காணிப்பும் இன்றி படுவேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலையில் மாறுதல்கள், காடுகள் அழிப்பு, காற்று மண்டலத்தில் நச்சுக் கலப்பால் வறண்ட வானிலை ஆகியவற்றால் இதுவரை பெய்துவந்த மழைப் பொழிவும் குறைந்து வருகிறது. காலமல்லா காலத்தில் சில வேளைகளில் கன மழை பெய்து தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக வீணாகக் கடலில் சென்று சேர்ந்துவிடுகிறது. நீர்ப்பாசன சாகுபடிப் பரப்பு குறைந்துவரும் இந்த வேளையில், "மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை - 2012' சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் வரவேற்கத்தக்க சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்சேபிக்கத்தக்கவையும் உள்ளன.

புதிய கொள்கையின்படி பாசனத்துக்கும் குடிநீருக்கும் இனி விலை நிர்ணயிக்கப்படும். அரசின் முடிவு சாத்தியம்தானா, முறையாக நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.

விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு விவசாயிகள் என்ற நிலையில் பாசனத் தண்ணீருக்குக் கட்டணம் விதித்தால் அவர்களால் செலுத்த முடியுமா, அதன் பிறகு சாகுபடிப் பரப்பு மேலும் சரியுமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. சுருக்கமாகக் கூறினால் ""தங்கமாகிறது தண்ணீர்'' என்பதையே இந்த தேசிய நீர்க்கொள்கை உணர்த்துகிறது.

மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையில் இடம்பெற்றுள்ள "தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம்' அமைப்பது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தண்ணீர் வரத்துக்கு வழிவகை செய்வது, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதை உறுதி செய்வது போன்ற அம்சங்கள் சிறப்பானவையே.

தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்தால்தான் அதன் பயன்பாட்டில் சிக்கனம் ஏற்படும், வேளாண் பயிர்ச் சாகுபடியிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஆட்சியாளர்கள் கருதியிருக்கக்கூடும்.

தண்ணீரைச் சேமிப்பது, பயன்படுத்துவது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. இதை நாம் தெருக் குழாயில் இருந்து பெரிய நதி நீர்திட்டங்கள் வரையில் கண்கூடாகக் காணலாம்.

பெரிய அளவிலான திட்டங்களின் கீழ் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் ராட்சதக் குழாய்கள் வழியாகத் தண்ணீரைக் கொண்டு செல்லும்போது, குழாய் உடைந்ததால் அல்லது சேதப்பட்டதால் தண்ணீர் வீணானால், "தண்ணீர்தானே?' என்ற அலட்சிய எண்ணமே மக்களிடமும் அரசு அலுவலர்களிடமும் காணப்படுகிறது. நாள்கணக்காகத் தண்ணீர் வெளியேறினால்கூட அதைச் சரி செய்வது கிடையாது.

இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில் 83.5 சதவீதத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள்தான் வைத்துள்ளனர். பெரும்பாலான சிறு விவசாயிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். தண்ணீருக்கு விலை நிர்ணயித்தால் அதற்கான கட்டணத்தைச் செலுத்தும் சக்தி இல்லாதவர்கள். அப்போது வேளாண் தொழிலிலிருந்தே அவர்கள் விலக நேரிடும்.

தண்ணீர் தேவை குறைவாக இருக்கும் மாற்றுப்பயிர்களுக்கு மாறினால் அவற்றைச் சந்தைப்படுத்தும் வசதி இல்லாதவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள்.

விவசாயத்துக்காக வாங்கிய கடன்களை, சாகுபடி முடிந்த உடனேயே தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் இருப்பதால், இடைத்தரகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு.

தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்க, "தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அரசின் நீர்க் கொள்கை தெரிவிக்கிறது. எந்தச் சங்கமாக இருந்தாலும் நாளடைவில் அதில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கும் என்பது நம்முடைய அனுபவம். 

இன்றைய அரசியல்வாதிகள் "சேவை நோக்கை'விட "லாப நோக்கை'யே அதிகம் கொண்டவர்கள்.

நீர்நிலைகளுக்கு, தண்ணீர் வரும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், தண்ணீர் தடையில்லாமல் வர வழி செய்ய வேண்டும் என்ற அம்சம் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஏரிகள் ஒன்றோடு ஒன்று வாய்க்கால்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. எனவே ஏரிகள் நிரம்பி வழிந்தால் உபரி நீர் அதற்கடுத்த ஏரிக்குச் செல்லும் வகையில் வாய்க்கால்கள் இருந்தன. இப்போது பெரும்பாலான வாய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. எனவே இவற்றைப் புதுப்பித்து இணைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

நிலங்கள் துண்டு துண்டாக சிதறிக் கிடப்பதால், பக்கத்து நிலக்காரரை அனுசரித்தே சாகுபடி செய்ய வேண்டியிருப்பதால் பெரும்பாலும் குறிப்பிட்ட சிலவகைப் பயிர்களையே  மீண்டும் மீண்டும் சாகுபடி செய்கின்றனர். இந்த நிலை மாற விவசாயிகளுக்குப் போதிய விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு போன்றவற்றில் விவசாயிகளுக்கு ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்பட அரசின் நடவடிக்கை உதவினால், நீர்க் கொள்கை மிகுந்த வெற்றியைப்பெறும் என்பதில்ஐயமில்லை.

நன்றி :- கருத்துக்களம், தினமணி, 21-01-2013 :-                                   

0 comments:

Post a Comment

Kindly post a comment.