Wednesday, January 2, 2013

பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சட்டத்திற்கு மாணவியின் பெயர்: மாணவியின் தந்தை, சகோதரர் ஒப்புதல் !


புதுடில்லி: மத்திய அரசு கொண்டுவரத் தீர்மானித்துள்ள பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சட்டத் திருத்தத்திற்கு டில்லி மாணவியின் பெயரை வைக்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

டில்லியில் கடந்த டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட இந்த சோகம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிக்கு நீதி கேட்டு டில்லி மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து கற்பழிப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவிற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் வந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் நாட்டிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சட்டத்தைக் கடுமையாக்குவது குறித்த கருத்துக்களைக் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பா.ஜ., இத்தகைய  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கூறியிருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், இத்தகைய  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் போன்ற தண்டனைகள் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

பாலியல் பலாத்காரத்திர்கு  எதிரான சட்டத்திற்கு உயிரிழந்த டில்லி மாணவியின் பெயரை வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சசிதரூர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். சசிதரூரின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தபோதும், தற்போது மாணவியின் பெற்றோர் புதிய சட்டத்திற்குத் தங்களது மகளின் பெயரை வைக்கச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாணவியின் தந்தை மற்றும் சகோதரர், பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதற்கு மாணவியின் பெயரை வைப்பதற்குத் தங்களுக்கு எவ்வித ஆட்சேபணை இல்லை என்றும், அது இறந்த மாணவிக்குப் பெருமை தரும் செயல் என்றும் தெரிவித்தனர்.                                                                                  

நன்றி :- யாஹூ தமிழ் நியூஸ்



0 comments:

Post a Comment

Kindly post a comment.