Thursday, January 24, 2013

நேதாஜிக்கு நினைவு மண்டபம்: மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு !



நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் அதற்கு பாரம்பரியச் சின்ன அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேதாஜியின் 116ஆவது பிறந்த நாள் விழா, கொடாலியா என்னுமிடத்தில் உள்ள அவரது மூதாதையர் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா கூறியதாவது:

நேதாஜியின் பெயரில் உள்ள இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும். மேலும் அவரது மூதாதையரின் இல்லம் மோசமான நிலையில் உள்ளது. அந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு, அதற்குப் பாரம்பரியச் சின்ன அந்தஸ்து வழங்கப்படும். இந்தப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.

நேதாஜி, சுவாமி விவேகானந்தா, ரவீந்திரநாத் தாகூர், புலவல் நஸ்ருல் மற்றும் குதிரம் போஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற தலைவர்கள் பிறந்த பூமியில் பிறப்பது பெருமையான விஷயம்.

புரட்சிக்குப் பெயர் பெற்ற மேற்கு வங்கம் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. இந்த மண்ணில் பிறந்தவர்கள் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வரை பரவி உள்ளனர்.

"உன் ரத்தத்தைக் கொடுத்தால் சுதந்திரம் வாங்கித் தருவேன்' என நேதாஜி சூளுரைத்தார். திட்டக் குழு மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை நேதாஜியால் உருவாக்கப்பட்டவை. அவருடைய பிறந்த நாளை அறிந்துள்ள நாம் மறைந்த நாளை அறிய முடியாமல் போனது துரதிர்ஷ்டம் என்றார் மம்தா.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் எம்.கே. நாராயணன், நேதாஜியின் மகள் அனிதா போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா இடம் மாறியது ஏன்? பார்வர்டு பிளாக் கேள்வி: நேதாஜியின் பிறந்தநாள் விழா அவரது உருவச் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, எல்ஜின் சாலையில் உள்ள நேதாஜியின் மூதாதையர் இல்லத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் எச்.ஏ. சாய்ராணி கூறியது: நேதாஜியின் பிறந்தநாள் விழாவை வேறு இடத்துக்கு மாற்றியது அதிர்ச்சி அளிக்கிறது. ஏன் அவ்வாறு செய்தார்கள் என தெரியவில்லை.

நேதாஜி பிறந்தநாள் விழாவை மாநில அரசும் நேதாஜி ஜன்மோத்சவ் கமிட்டியும் இணைந்து நடத்த வேண்டும் என நானும் இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸும் மம்தாவுக்கு கடிதம் எழுதி இருந்தோம். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றார் சாய்ராணி.                                 

செய்தி உதவி :- தினமணி, 24-01-2013
படம் உதவி  :- கூகிள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.