Thursday, January 10, 2013

கருப்பும் கறுப்பும்! -எப்படி விளக்குகின்றார் தமிழறிஞர் தமிழண்ணல் ?

                                                                     தமிழண்ணல்

ப்பு

கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் "கருப்பு' என்பதே.

கறுப்பு - சினம், வெறுப்பு. அவன் எந்த நேரமும் கறுவுகிறான். கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர் பொருள் "நிறம்' அன்று. சீற்றத்தால் கறுகறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற் பொருளாக அரிதிற் பயன்பட்டன.

"கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' - என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக் கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம்.

உரிச்சொல் இலக்கணத்தில்,

""... ... பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி

தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்

எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்'' (782)

பயிலாதவை - அடிக்கடி பயன்படுத்தாத அருஞ்சொற்கள். அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற் பொருள்களையும் தருதல் பாவலர்க்கு இயல்பு.

கருப்பு என்பது - கரிய நிறம். "வெளிப்படு சொல்லே கிடைத்தல் வேண்டா...'' என்பார் தொல்காப்பியர் (783).

கருப்பு நிறம் என்பது உலகறிந்த பொருள். துங்கக் கரிமுகத்துத் தூமணியே, கரு நெடுங்கண்ணி, கருவிழி, கரிகாலன், கருங்கனி நாவல், கருங்கார் குறிஞ்சி, கருங்குழலி, கார்வண்ணன், கரிது, கரி, காரி இவற்றில் எல்லாம் வல்லினத்தைப் போட்டுப் பாருங்கள். தொடர்புடைய சொற்கள் எல்லாம் கருப்பு என்பதிலிருந்தே கிடைக்கின்றன.

கறுப்பு

"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' (தொல்.855)

வெகுளி - கடுங்கோபம். இது சினத்தல், பகைத்தல். நிற்கறுத்தோர் அரணம் போல' - பகைத்தவரின் கோட்டை போல. "நீ சிவந்து இறுத்தி' (பதிற்-13) நீ சினந்து முற்றுகையிட்ட. "நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப' (856) நிறத்து உரு - நிறம் வேறுபடல் (கோபத்தால்). சீற்றத்தால் நிறமாற்ற மேற்படல் இயல்பு. கறுத்தோர் - பகைவர். மேகம் வானில் திரண்டு கறுப்பதுண்டு. நிறம் மாறி, கறுத்துக்கொண்டு வரும். "வானம் மாமலை வாழ்சூழ்பு கறுப்ப' (குறிஞ்சி-22) இது கருநிறம் மட்டுமன்று; மிக முற்றிய கருநிறம். "கவ்வை கறுப்பு' (அகம்.366) எள்ளின் இளங்காய் முற்றிய நிலை. அது கருநிறமாய் மாறிவருவது காட்டும். கவ்வை - எள்.

சினம் முற்றிய நிலையில் முகம் கறுத்துப் போகும். அல்லது கண்ணும் கன்னமும் எல்லாம் சிவந்து போகும். பயிர் முற்றிய நிலையில் நிறம் மாறிக் காட்டும். இது கருப்பு அன்று என்பதற்கே ஆசான் "நிறத்துஉரு' என்று குறிப்பிட்டுள்ளார். "எச் சொல்லாயினும் வேறு பொருள் கிளத்தல்' என்றபடி வந்தது இது. இது இடமும் சூழலும் நோக்கிக் கொள்ளப்பட வேண்டியது.

கருநிறத்தைக் குறிக்கும் கருப்பு நிலையானது. கறுப்பு, சிவப்பு இடம், சூழல் போன்றவற்றால் "நிறத்துரு' - தோற்றம் பெறும்; பிறகு மாறிவிடும். கறுப்பணசாமி என்றது கடுங் கோபக்காரச் சாமி என இடம் நோக்கிப் பொருள் கொள்ளவே ஆகும்.

"நின் புதல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு' என்றுதான் விசுவாமித்திரர், தயரதனிடம் கேட்கிறார்.

இன்றைய நிலையில் கருப்புப் பணம் என்பதற்கு இடையின "ரு' போடுவதுதான் பொருத்தமாக அமையும். "கறுப்புப் பணம்' என்று எழுதினால் உண்மையான பொருள் பொருந்தி வராது.

நன்றி :- தமிழ்மணி, தினமணி, ஞாயிற்றுக்கிழமை, 6, 2013

2 comments:

 1. podhuvan sengai podhuvan9@gmail.com

  * வேட்டியில் கறை (நிறம்)
  * கருநிறம் கொண்ட மிளகு 'கறி' (நிறம்)
  * கறைமிடற்று அண்ணல் (புறநானூறு 55) (நிறம்)
  * கறையடி யானை (அகம் 142) (நிறம்)
  * கறைகெழு வேல் (சிலப்பதிகாரம் 7-12-2) (நிறம்)

  * கருவி வானம் (தொகுதி)

  * தொன்று கறுத்து உரையும் துப்பு (மதுரைக்காஞ்சி 347) (சினம்)
  * சீறிக் கறுவி வெகுண்டு உரைப்பான் (திரிகடுகம் 46) (சினம்)
  * கைம்மேலே நின்று கறுப்பன செய்து (பழமொழி 201) (சினம்}

  சினம் கொண்டவன் முகம் சிவக்கும்.
  கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (தொலகாப்பியம், உரியியல்)

  * கருங்கயற்கண் (சிலப்பதிகாரம் 18-52)
  * கருங்கொண்மூ (நாலடியார் 8)
  * கருங்குயில் (கார்நாற்பது 16)
  * கருமை < கார் மேகம்

  இவறையெல்லாம் கருதிப் பார்த்து நிறத்தைக் கருமை < கருப்பு என வழங்கும் புத்தாக்கத்தையும் வரவேற்கத்தான் வேண்டும்.

  ReplyDelete
 2. மூதறிஞர் தமிழண்ணலின் கருத்தினை வரவேற்றுள்ளார், 2500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழ் விக்கியில் எழுதிச் சாதனைபுரிந்த செங்கை பொதுவன் அவர்கள். அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலை அப்படியே நகலெடுத்து பின்னூட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது

  ReplyDelete

Kindly post a comment.