Monday, December 31, 2012

பாமர மக்களுக்கும் இணையத் தமிழ்ப் பயிற்சியளிக்க வேண்டும்- பொன்னவைக்கோ



கணினி இணையத் தமிழை கிராமப்புற பாமர மக்களும் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் பயிற்சி அளிக்க முன்வர வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயராய்வு மையம், உலகத்தமிழ் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) மற்றும் கணித் தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து 11-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டைப் பல்கலைக்கழக குமாரராஜா முத்தையா அரங்கில் டிச.28 முதல் 30 வரை நடத்தின. மாநாட்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ பங்கேற்று பேசியது:

தமிழகஅரசுக் கணினித் தமிழை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. யுனிகோடினை மட்டும் நம்பாமல் அனைத்து எழுத்துத் தரப்பாட்டினை மேம்படுத்தினால்தான் கணினித் தமிழை மேம்படுத்த முடியும். இணையத்தளத்தை தமிழ் வழியில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடத்தப்படவுள்ளது. இணைய தளத்தில் தமிழைக் கிராமப்புறப் பாமர மக்கள் பயன்படுத்துவது குறித்துப் பல்கலைக்கழகங்கள், உத்தமம் அமைப்புடன் இணைந்து பயிற்சிகளை அளிக்க முன் வர வேண்டும். நமது நாட்டில் தனித் தமிழ் கணிப்பொறி உருவாக்க வேண்டும் என்றார்.÷

விழாவில் கணித் தமிழ்ச் சங்கத் தலைவர் வள்ளி ஆனந்தன் பேசியது: தமிழகத்தின் 32 மாவட்ட தலைநகரங்களிலும் இன்னும் ஓராண்டிற்குள் தமிழ்க் கணினி விழிப்புணர்வுப் பயிலரங்கம் மற்றும் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு உரிய கணினித் தமிழ் தொழில்நுட்பப் பயிற்சியும், பொதுமக்களுக்கு அடிப்படை தமிழ்க் கணினிப் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும் என்றார்.

மாநாட்டிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். 

விழாவில் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத் (உத்தமம்) தலைவர் மு.மணிவண்ணன் மாநாட்டு முடிவுகளை அறிவித்துப் பேசுகையில்,

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், 
அண்ணா பல்கலைக்கழகம், 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், 
காமராஜர் பல்கலைக்கழகம் 

ஆகிய 5 பல்கலைக்கழகங்கள் உத்தமம் மாணவர்கள் அமைப்பைத் தொடங்கி கணித்தமிழ் பயிற்சி பட்டறைகளை நடத்துவது என முடிவு செய்துள்ளன என தெரிவித்தார்.                                                                                                                                      

நன்றி :- தினமணி, 31-12=2012                                                                                                                           



0 comments:

Post a Comment

Kindly post a comment.