Wednesday, December 5, 2012

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் உயரமான பெண் மரணம் !

உலகின் மிக உயரமான பெண்மணி என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த யாவ் டெபன் (40) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கிழக்கு சீனாவில் உள்ள சூசெங்கில் 1972-ம் ஆண்டு பிறந்த இவர், பிட்யூட்டரி சுரபியின் அபரிமிதமான செயல்பாடு காரணமாகத் தனது 15வது வயதில் 6 1/2  அடி உயரம் இருந்தார்.

பள்ளியில் படித்து வந்த காலத்தில் தோழிகளுடன் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக் கண்டு பதறிப்போன ஆசிரியர்கள், ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், யாவ் டெபனின் தலைப்பகுதியில் புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கட்டியினால் தூண்டப்பட்ட பிட்யூட்டரி சுரபி தான் இவரது அதிவேக வளர்ச்சிக்குக் காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரது வளர்ச்சி, உச்சக்கட்ட உயரமான 7 அடி 8 அங்குலத்தை எட்டியது. உடல் எடையும் 200 கிலோவுக்கு மேல் அதிகரித்தது. பின்னர் 2006-ம் ஆண்டு, ஷங்காய் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் நடந்த அறுவை சிகிச்சையில், இவரது தலையில் இருந்த புற்றுக்கட்டி அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்குப் பிறகு அவரது உயரத்திலோ, எடையிலோ வளர்ச்சி ஏதும் உண்டாகவில்லை.

உலகிலேயே மிக உயரமான பெண்ணாக இவரை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகம் சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சூசெங் நகரில் உள்ள பூர்வீக வீட்டில் மரணமடைந்தார்.                                                                              

நன்றி :- மாலைமலர், 05-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.