Tuesday, December 11, 2012

கரணம் தப்பினால் மரணம்: சென்னை மாணவர்களின் ஆபத்தான படிக்கட்டு பயணம் !


சென்னையில் பஸ்சில் செல்லும் பள்ளி-கல்லூரி மாணவர்களின் படிக்கட்டுப் பயணம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது. சென்னை மாநகர அனைத்து சாலைகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் செல்லும் மாணவர்கள் பஸ்சுக்குள் சென்று பாதுகாப்பாகப் பயணம் செய்வதை மானப்பிரச்சினை போலக் கருதுகிறார்கள்.

படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மட்டுமே துணிச்சலான மாணவர்கள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ள இவர்கள், பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்யும் மாணவர்களைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அரசு பஸ்களில் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பிகளில் முழு பலத்தையும் காட்டியபடி மாணவர்கள் படிக்கட்டு மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் தொங்கிக் கொண்டு பயணிப்பது தினமும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

வட சென்னையில் இதுபோன்ற காட்சிகளை அதிகம் காண முடியும். குறிப்பாக வேப்பேரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாலை நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் சாலையில் கூடி நிற்பார்கள். இங்கு நிற்கும் மாணவர்களுக்குப் பயந்து ஒரு சில பஸ் டிரைவர்கள் தூரத்தில் சென்று பஸ்சை நிறுத்துகிறார்கள். அப்போது மின்னல் வேகத்தில் ஓடிச் செல்லும் மாணவர்கள், நிரம்பி வழியிம் பஸ்சில் கிடைப்பதைப் பிடித்து தொங்கிக் கொண்டே செல்கிறார்கள்.

இந்த நேரத்தில் அவர்கள் தோளில் தொங்க விட்டுள்ள புத்தகப் பைகள் சாலையில் செல்வோரை பதம் பார்க்கிறது. நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் ஆகியோர் கீழே விழுந்து எழுந்து செல்கிறார்கள். சில நேரங்களில் பஸ்சைப் பிடிப்பதற்காகக் கண்ணை மூடிக் கொண்டு ஓடுபவர்கள், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மீது மோதிவிட்டு செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன.

சென்னையில் பல இடங்களில் சாலை யோரங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளிலும் படிக்கட்டில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் சிக்குகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாசர்பாடியில் பள்ளி மாணவர் ஒருவர் கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இன்று காலையில் 4 மாணவர்களின் உயிரைப் படிக்கட்டு பயணம் பறித்துள்ளது.

இதுபோன்ற ஆபத்தான பயணங்களால் மாணவர்களின் விலை மதிப்பில்லா உயிர்கள் பலியாவதைத் தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். படிக்கட்டில் தொங்கிச் செல்லும் மாணவர்களை பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும். இது ஒன்றே அவர்களை அச்சுறுத்தும் ஆயுதமாகும். அதே நேரத்தில் மாணவர்களும், தங்களை எதிர்பார்த்து வீட்டில் பெற்றோர் கனவுகளுடன் காத்திருப்பார்கள் என்பதை உணர வேண்டும்.

"படியில் பயணம் நொடியில் மரணம்" என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அனைத்து பஸ்களிலும் தவறாமல் இடம் பெற்றுள்ளன. இதனை மாணவர்கள் மனதில் பதிய வைத்தாலே இது போன்ற மரணங்களைத் தடுக்க முடியும்.                                                                                                                                              

நன்றி: மாலைமலர், 10-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.