Monday, December 10, 2012

முற்போக்குப் படைப்புகளின் முன்னோடி விந்தன் - சிகரம். ச. செந்தில்நாதன்

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுத்தாளர்களுக்குச் சில நோக்கங்களும், கடமைகளும் இருந்தன. சுதந்திரப் போராட்ட உணர்வை மக்களிடம் வளர்க்க வேண்டியது முக் கிய நோக்கமாக இருந்தது. நவீன தமிழ் இலக்கியத்தை வளர்ப்பது கடமையாக இருந்தது. தேச பக்தியை ஊட்டுவதற்கு நாட்டின் வரலாற்றுப் பெருமைகளையும், பண்பாட்டுப் பெருமைகளையும் பற்றி எழுத வேண்டி யிருந்தது. அந்நிய ஆட்சியின் விளைவால் ஏற்பட்ட சுரண்டலை அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. அதனால்தான் “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ” என்று பாரதி பாடினான். சுதேசியத்தின் அவசியம், சமூகச் சீர்திருத்தம் முதலியப் பற்றியும் அவற்றிற்கு ஆதரவாகவும் எழுத வேண்டியிருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தால் நாடு முன்னேறும், வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க வேண்டியிருந்தது. சுதந்திரப் போராட்டக் கால இலக்கியத்தின் பிரதிநிதியாக நாம் ‘கல்கி’யை வைத்துக் கொள்ளலாம்.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மாறுபட்ட சூழ்நிலையில், இலக்கியம் மாற்றங்களின் வெளிப்பாடாக விளங்க வேண்டியதாயிற்று, அரசியல் சுதந்திரம் கிடைத்த போதும், சமூக, பொருளாதார நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இந்தியா சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்த நிலைமை என்ன? கடுமையான பொருளாதார நெருக்கடி, இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மீள முடியாத காலகட்டம், வறுமை, உணவுப் பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம் இவை எல்லாம் கூட்டணி வைத்துப் பொருளாதார நெருக்கடிகளை உக்கிரமாக்கின. சுதந்திரம் அடைந்தால் நாடு பொன்னாடாகும் என்று எதிர் பார்த்த மக்கள் ஏமாற்றத்தின் விளிம்பில் நின்றார்கள். தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர் வாழ்க்கையின் நெருக்கடிகளையும் போராட்டங்களையும் தன் படைப்பாக மாற்றியவர் எழுத்தாளர் விந்தன். அந்த வகையில் பின்னால் எழுத வந்த ஜெயகாந்தனுக்கும் இவரே முன்னோடி. 

கவிதையில் தமிழ் ஒளியும், சிறுகதை நாவலில் விந்தனும் முற்போக்கு இலக்கியத்திற்குப் புதிய தடம் பதித்தவர்கள். 

தொழிலாளர் பிரச்சனைகளைப் படைப்பில் பதிவு செய்த முதல் எழுத்தாளர் விந்தன் என்றும் பெருமையோடு சொல்லலாம். விந்தன் எந்த அமைப்பும் சாராத எழுத்தாளர். அவரை ஒரு மார்க்சியவாதியாகப் பார்க்க வேண்டியதில்லை. அப்படி விமர்சனமும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதார்த்த வாழ்க்கையை அதன் நெருக்கடிகளோடு இணைத்துப் பார்த்து, மனிதாபிமானத்தை வளர்த்த எழுத்தாளர். வணிகப் பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டே முற்போக்கான கதைகளைச் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே வணிகப்பத்தி ரிகைகளிலேயே எழுத முடிந்தது என்பது அவருடைய எழுத்தின் உண்மைக்கும், எழுத்தாற்றலுக்கும் கிடைத்த வெற்றியா கும்.

திராவிடர் கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தபோது, அது கலை இலக்கியத்துறையில் ஒரு பெரும் 
சக்தியாக வளர்ந்தது. அவர்களின் கலை இலக்கியப் பார்வை மற்றும் மொழிசார்ந்த, சமூகம் பற்றிய பார்வை விந்தனை ஈர்க்கவில்லை. அவற்றில் ஒருவகைப் போலித்தனம் இருப்பதாக உணர்ந்து, தன் படைப்புக்களில் கேலியும், கிண்டலும் செய்தார். தமிழ் ஆசிரியர்கள் கூட அவருடைய கிண்டலிலிருந்தும் கடும் விமர்சனத்திலிருந்தும் தப்ப முடியவில்லை, திராவிட இயக்கத்தின் சீர்திருத்தங்களையும் போலியானவை என்றே சித்தரித்தார்.

விந்தனின் படைப்புகளில், அதிலும் குறிப்பாக நாவல்களில் ஒரு நம்பிக்கை வறட்சி இருப்பதைப் பார்க்க முடிகிறது. சுதந்திரத்தை அடுத்து எழுதத் தொடங்கிய முற்போக்கு இலக் கிய முன்னோடி விந்தனிடம் இந்தப் போக்கு இருப்பதற்கு என்ன காரணம்? பாலும் பாவையும் நாவலை அவர் முடிக்கும் போது “ நல்லவர்கள் வாழ்வதில்லை நானிலத்தின் தீர்ப்பு” என்று சொல்லி முடிக் கிறாரே இதை நியாயப் படுத்த முடியுமா என்று சிலர் கேட்கி றார்கள். அதை நியாயப்படுத்த முயல வேண்டியதில்லை. ஆனால் விந்தனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காதல் கதையின் முடிவில் தான் இந்த வாசகங்கள் வெளிப்படுகின்றன. விந்தன் காதலுக்கு எதிரி அல்ல, சந்தைச் சரக்காகி விட்ட காதலுக்குத்தான் அவர் எதிரி. பெண்கள் போலியில், பகட்டில் ஆண்களிடம் ஏமாந்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை அவர் படைப்புகளில் வெளிப்படுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், சாதி வேறுபாடுகளும் உள்ள சமூகத்தில் பொருளாதார பலமே இல்லாமல் காதலில் வெல்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்று சொல்வதே அவருடைய நோக்கம்.

பக்குவம் இல்லாதவர்கள் காதலித்து, காதலின் கோட்பாட்டிற்கே சாவுமணி அடித்து விடுகிறார்கள். பணக்கார வர்க்கத்தின் மீது தனக்கு 
இயற்கையாகவே வெறுப்பு உண்டு என்று விந்தன் ஒப்புக் கொள்கிறார். அந்தப்பணக்கார சமூகத்தின் எதார்த்த நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே பலபடைப்புகளில் விந்தன் கூறும் செய்தியாகும். இதை அவர் தனக்கு கைவந்த எள்ளல் நடையில் கூறுகிறார்.

புதுமைப்பித்தன் விட்ட இடத்தில், சுதந்திரம் பெற்ற நாட்டின் எதார்த்தங்களைப் பிரதிபலித்த, அமைப்புசாரா முன்னோடி முற்போக்கு எழுத்தாளர் விந்தன்.

நன்றி :- தீக்கதிர், 10-12-2012

தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.
  1. அன்பு அலறுகிறது
  2. இந்திய இலக்கியச் சிற்பிகள்
  3. இலக்கியப்பீடம் 2005
  4. எம்.கே.டி.பாகவதர் கதை
  5. ஒரே உரிமை
  6. ஓ, மனிதா
  7. கண் திறக்குமா?
  8. காதலும் கல்யாணமும்
  9. சுயம்வரம்
  10. திரையுலகில் விந்தன்
  11. நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
  12. பசிகோவிந்தம்
  13. பாலும் பாவையும்
  14. பெரியார் அறிவுச் சுவடி
  15. மனிதன் இதழ் தொகுப்பு
  16. மனிதன் மாறவில்லை
  17. மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
  18. விந்தன் இலக்கியத் தடம்
  19. விந்தன் கட்டுரைகள்
  20. விந்தன் கதைகள் - 1
  21. விந்தன் கதைகள் -2
  22. விந்தன் குட்டிக் கதைகள்
  23. வேலை நிறுத்தம் ஏன்?  
நன்றி :- தமிழ் விக்கிபீடியா.

0 comments:

Post a Comment

Kindly post a comment.