Saturday, December 1, 2012

மீளுமா சாலையோர வசந்தம்... ? -வி.பி. கண்ணன்

இந்தியா முழுவதும் முக்கிய சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. நேர்த்தியாக அவை வடிவமைக்கப்பட்டு அகலமாக்கப்பட்டுள்ளன. குண்டும், குழியும் இல்லாத சாலையில் மிருதுவாக ஒடுகின்றன பஸ்கள். எட்டு, பத்து மணிநேர பயணத் தொலைவு எல்லாம் 5, 6 மணி நேரமாகக் குறைந்துவிட்டது.                                                                                 

இதையெல்லாம் பார்த்து ஆகா.. நாடு முன்னேறிவிட்டது, தேவை காலத்துக்கேற்ற மாற்றம் என மனது சந்தோஷப்பட்டாலும், மனதின் ஒரு மூலையில் வெறுமையும் படர்ந்துள்ளது.

ஒரு காலத்தில் இச் சாலைகள் 2 வழிச்சாலைகள் தான். சாலைகளும் நேர்த்தியாக இருக்காது. ஆனாலும், அந்தப் பயணங்கள் இனிமையாக இருந்தன. இரு புறமும் ஓங்கி வளர்ந்து கூடாரம் போல இருக்கும் மரங்களினூடே பயணிப்பது விநாடிக்கு விநாடி சுவாரஸ்யம் மிக்கது.

இரண்டு ஆட்கள் சேர்ந்தாலும் கட்டிப் பிடிக்க முடியாத அகலமான மரங்கள், மரங்களின் உச்சியில் இருக்கும் காக்கைக் கூடு. அதிலிருந்து தப்பி விழுந்த காக்கைக் குஞ்சு அடிபட்டுவிடக் கூடாதே என பஸ்ஸைச் சற்று ஒதுக்கிச் செலுத்திய ஓட்டுநர், திடீரென ஒரு திருப்பத்தில் கண்ணில் அறைந்த பட்டுப்போன மரம், விபத்தில் மரத்தில் சொருகி நிற்கும் லாரி, மழைக் காலத்தில் யானையே சாய்ந்ததுபோல சாலையின் குறுக்கே விழுந்த கிடக்கும் மரம், இரவு வேளையில், யாருமற்ற சாலையில் விரைந்து செல்லும் பஸ்ஸில், ஓட்டுநர் இருக்கை அருகே அமர்ந்து நீண்டு, நெளிந்து செல்லும் மரங்களடர்ந்த சாலையை ரசிப்பது... இப்படி பஸ் பயணத்தில் தூக்கம் தப்பிய கணங்களை இந்த மரங்கள் சுவாரஸ்யப்படுத்தியதே அதிகம்.

சுவாரஸ்யம் மட்டுமல்ல, கடும் வெயிலில் இளைப்பாறவும் அவை உதவின. இந்த மரங்களை ரசிக்கும்போதெல்லாம், பள்ளி வகுப்பில், "அசோகர் சாலை ஒரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டார்' என ஆசிரியைப் பாடம் நடத்திய குரல் மட்டும் காதுக்குள் ரீங்காரிக்கும்.

இன்று வளர்ச்சியின் பெயரில் எல்லா மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன. இன்றைய பஸ் பயணங்கள் சுவாரஸ்யமற்று வெறுமையாய் உள்ளன. இயற்கையை மறந்துவிட்டு வீடியோவில் திரையிடப்படும் செயற்கையான சினிமா பாடல்கள் மீது ஆர்வம் வந்துவிட்டது.

எத்தனை மரங்களை வெட்டினோம், வேறிடத்தில் அதற்காக மரங்களை நட்டு வைக்கவில்லையே என்ற கவலை இல்லை; யார் புதிய மரங்களை நட்டு வைத்துப் பராமரிப்பது எனவும் சிந்திக்கவில்லை. இருந்தாலும் ஊர் முழுக்க சம்பிரதாயமாக நடைபெறுகின்றன மரக் கன்றுகள் நடும் விழாக்கள்.

விரிவாக்கப்பட்ட சாலைகள் முழுவதும் அரசே மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிப்பது என்பதைவிட மக்களையே இதில் நேரடியாகச் சம்பந்தப்படுத்திவிட்டால், நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

சில நெடுஞ்சாலைகளில் புதிதாக நடப்படும் மரங்கள் கண்ணுக்கு அழகான காகிதப் பூக்களைக் கொண்டுள்ள காட்சி மரங்கள்தான். அவற்றின் மலரோ காயோ கனியோ எதற்கும் பயன்படாது. அந்த மரமே அடுப்பெரிக்கக்கூட காணாது. வைரத்தைத் தொலைத்துவிட்டு உப்புக்கல்லைச் சேகரிக்கத்தான் இந்த வளர்ச்சி!

இதற்குப் பதிலாக, 4 வழிச்சாலையாக விரிவாக்கப்பட்ட இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களே சாலையோரத்தில் பயன்தரும் மரங்களை வளர்க்கலாம். அந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பலன்களை அவர்களே காலம் முழுவதும் அனுபவிக்கலாம் என அறிவிக்கலாம்.

தற்போது பெரும்பாலான 4 வழிப் பாதைகளில்தான் அதிகளவில் பொறியியல் கல்லூரிகளே உள்ளன. ஒவ்வொரு கல்லூரியும் குறிப்பிட்ட தொலைவுக்கு சாலையோரங்களில் மரங்களை வளர்க்க வேண்டும். அந்த மரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை, அந்தக் கல்லூரியின் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது எல்லாம் சாத்தியமா? வேலைக்கு உதவாது, அந்தப் பிரச்னை வரும், இந்தப் பிரச்னை வரும் எனப் பலர், பல கருத்துகளைக் கூறலாம். அவற்றைக் காது கொடுத்துக் கேட்டு, அலசி ஆராய்ந்தால் தீர்வு பிறக்கும்.

முயன்றால் சாத்தியம் உள்ளது, முயலாமல் இருக்கலாமா?                                 

நன்றி :- தினமணி, 01-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.