Thursday, November 15, 2012

காந்தியையும் நேருவையும் எனக்கு நெருக்கமானவர்களாக உணர்கிறேன்: ஆங் சான் சூச்சி !



 தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில்மலர் அஞ்சலி செலுத்தும் மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி. நாள்: புதன் கிழமை.

மகாத்மா காந்தியையும் நேருவையும் எனக்கு நெருக்கமானவர்களாக உணர்கிறேன் என்று மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.

சூச்சிக்கு ஜவாஹர்லால் நேரு நினைவுப் பரிசு கடந்த 1995ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் தில்லியில் புதன்கிழமை ஜவாஹர்லால் நேரு நினைவு உரையை ஆற்றினார்.

 அவர் பேசுகையில், ""மகாத்மா காந்தியும், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவும் இந்திய விடுதலைப் போரில் சந்தித்த பல்வேறு சவால்களையும் எனது விடுதலை இயக்கமும் சந்தித்தது.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடையே தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் இருந்த உறவு இந்திய அரசியலின் வெற்றியாகும்.

காந்தியையும் நேருவையும் எனக்கு நெருக்கமானவர்களாக உணர்கிறேன். எனது அரசியல் சிந்தனையில் மகாத்மா காந்தியின் தாக்கம் குறித்து பலருக்கும் தெரியும். ஆனால், எனது அரசியல் வாழ்க்கையில் நேருவின் தாக்கம் குறித்து சிலருக்கு மட்டுமே தெரியும்'' என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, ஒரு வார கால சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆங் சான் சூச்சி, பிரதமர் மன்மோகன் சிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, மியான்மரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகள், ஜனநாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

""உங்களுக்கும், உங்களின் போராட்டத்துக்கும் எங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு. நீங்கள் காட்டும் அசாத்திய வீரத்தை நாங்கள் நேசிக்கிறோம்'' என்று பிரதமர் மன்மோகன் சிங், சூச்சியிடம் தெரிவித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மியான்மர் அதிபர் தீன் சீன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் வரவேற்றார். இரு நாட்டு மக்களிடையிலான சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

புதுதில்லியில் சூச்சியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜவாஹர்லால் நேரு உரையை ஆற்ற ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.

 இந்த உரையை ஆற்றுமாறு சூச்சியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி அழைத்திருந்தார். சூச்சி சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார்.

அவர் தனது பயணத்தின் ஒரு பகுதியாகத் தாம் படித்த தில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். அதன் பின், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்துக்கும், ஆந்திரத்துக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளார்.                                
நன்றி :- தினமணி, 15-11-2012                  



0 comments:

Post a Comment

Kindly post a comment.