துரோணாச்சாரியார் ஏகலைவனிடம் குரு தட்சணையாக அவனது கட்டை விரலைக் கேட்டாலும் கேட்டார், அந்தப் பாவம்தான் இப்போது ஆசிரியர்களை இப்படி வதைக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களை அடித்தால் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனையாம். இப்படியொரு சட்டம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறிதான் "குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் -2009'. இந்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்துத்தான் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை எனும் சட்டம் வரவிருக்கிறது.
அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து, ஒரு ஆசிரியர் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனையைப் பெற்றால் அது, சுரண்டல், லஞ்சம், களவு, கொலை , சாட்சியங்கள் அழிப்பு, தேசிய சின்னங்களை அவமதித்தல் போன்ற குற்றங்களைச் செய்தவர்கள் அனுபவிக்கும் தண்டனையைவிட சற்று அதிகமாகவோ அல்லது அதற்கு இணையான தண்டனையாகவோகூட இருக்கக்கூடும்.
இத்துடன் நின்றுவிடுவதில்லை. இதனைத்தொடர்ந்து இன்னும் பல சட்டங்கள் முளைக்க இருக்கின்றன. "தனியார் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால், இருபத்து ஐந்து சதவீதம் இட ஒதுக்கீட்டை நலிவுற்ற பிரிவினர்களுக்கு மறுத்தால், மாணவர்களிடம் நன்கொடை பெற்றால், பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழ் கேட்டால், மாணவர்களை அதே வகுப்பில் தேக்கினால்' என்பதற்கெல்லாம் சட்டங்கள் வரவிருக்கின்றன.
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 பிரிவு 4, உட்பிரிவு 17 மற்றும் 17 (1) என்கிற சட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு அந்த தண்டனையைப் பெறவிருக்கிறார்கள்.
2002ஆம் ஆண்டே 86-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், கல்வி பெறுதல் அடிப்படை உரிமை என அறிவித்தது. அந்த வருடமே "கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்' வந்திருக்க வேண்டும். ஒரு வேளை வந்திருந்தால் அதிக தண்டனை பெறுபவர்கள் ஆசிரியர்களாக மட்டும் இருந்திருக்க மாட்டார்கள். அதிகாரிகள், அரசியல்வாதிகள் எனப் பலரும் இடம் பெற்றிருப்பார்கள்.
ஆம், தொடக்கத்தில் வலியுறுத்திய கல்வி உரிமைச் சட்டம் இதைவிட அதிகப் பிரிவுகளைக் கொண்டது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, "அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் குழந்தைகள் கண்டிப்பாக வீட்டுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில்தான் படிக்க வேண்டும்" என்பதாகும். இந்த ஒரு பிரிவை நீக்குவதற்காகத்தான் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இத்தனை வருடங்கள் கிடப்பில் போடப்பட்டது.
குழந்தைகள் மீது அக்கறை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைக் கடுமையாக எதிர்க்கிறது. அதற்கான சட்டத்தை நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் சட்டத்தைப் பின்பற்றி இயற்றி உள்ளது. ஐ.நாவில் 136 ஆவது நாடாக இணைத்துக்கொண்ட இந்தியா இப்படியொரு சட்டத்தை இயற்றியது முட்டிக்கால் போடுமளவிற்கு படுதாமதம்.
ஐ.நா., குழந்தைகளுக்கான வயதை 0-18 என நிர்ணயிக்க, நமது வல்லுனர்கள் 0-14 என நிர்ணயித்தார்கள். இல்லையேல் மேனிலைப் படிப்பையும் இலவசமாக அனைவருக்கும் கொடுத்தாக வேண்டுமே?
மற்றொரு சாராம்சத்தைக் கல்வியாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். அது தாய்மொழி வழிக்கற்றல்.
ஆனால் நமது அரசியல் தலைவர்கள் அதைச் சாதுரியமாக தவிர்த்துவிட்டார்கள். அப்படியொரு சட்டம் வந்துவிட்டால் தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் காட்டில் பண மழை பெய்யாதே? இப்போது பள்ளிக் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு சாவியை விட்டெறிந்து விட்டார்கள் அல்லவா?
"ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை' எனும் சட்டத்திற்கு மாணவர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு. பெற்றோர்கள் மத்தியில் பச்சைக் கம்பளம் விரிப்பு. சில தாய்மார்கள் மட்டும் இனி ஆசிரியரைக் காரணம் காட்டி பிள்ளைகளை அடக்கி ஆளமுடியாது என்பதாகக் கவலைப்படுவது தெரிகிறது.
இந்தச் சட்டத்தை வரவேற்கும் பெற்றோர்கள் ஒரு வகையில் பரிதாபத்திற்குரியவர்கள் தான். ஆமாம். அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்தச்சட்டம் நார்வே நாட்டின் நகல் என்று. அந்த நாட்டின் சட்டப்படி, குழந்தைகளைத் தண்டிக்கும் பெற்றோர்களை அரசு தண்டிக்குமாம்.
இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் அளவிற்கு ஆசிரியர் மாணவர் உறவு மற்ற மாநிலங்களில் இல்லை.
வட மாநிலங்களில் மாணவர்களின் தேர்ச்சி, தேக்கங்கள் ஆசிரியர்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவர்களிடம் டியூஷன் வைத்துக்கொள்வதன் மூலமும் தீர்மானிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.
ஒரு கருத்தை ஆசிரியர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்றைய காலத்தில் மாணவர்களை அடித்துதான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதல்ல. அதே சமயத்தில் ஒரு மாணவன் பிற்காலத்தில் காவல் துறையிடம் அடி வாங்கி திருத்தப்படும் சூழல் ஏற்படாதிருக்க அவனை மாணவப்பருவத்தில் ஆசிரியர் அடித்துத் திருத்துவதில் தவறொன்றும் இல்லை.
மாணவர்கள் தவறு செய்தால் திருக்குறள்களை கொடுத்து ஒப்பிக்கச் சொல்லுங்கள் என்கிறார்கள். அதைக் கொடுக்கவும் தயங்கத்தான் வேண்டியிருக்கிறது. காரணம், திருக்குறளில் இருப்பது இரண்டு அடிகளாச்சே!
நன்றிக்குரியோர்:-
ஆசிரியப்பா- அப்பப்பா! -சுரா.மாணிக்கம்
DINAMANI, First Published : 12 November 2012 03:45 AM IST
Monday, November 12, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.