Sunday, November 18, 2012

நல்லூர் இராசதானி காலத்தில் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட 'கூட்டத்தார் கோவில்'?

By General
2012-10-10 10:48:35


இலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது, அங்கிருந்த சிவிகசாலா, சொத்திசாலா என்னும் இரு ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகிறது. பேராசிரியர் செனரத் பரணவிதானா இவ்வாலயங்களில் ஒன்று சிவலிங்கத்தைக் கொண்ட ஆலயம் எனவும், மற்றையது பிராமணர்கள் மந்திரம் ஓதும் இடம் எனவும் கூறுகிறார்.

ஆயினும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தைப் போல் இலங்கையிலும் காணப்பட்ட சிறு தெய்வங்கள் அல்லது கிராமிய ஆலயங்கள் அழியக் கூடிய மண், மரம், சுதை கொண்டு அமைக்கப்பட்டதால் அவை பற்றிய ஆதாரங்கள் பிற்காலத்தில் அதிகம் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பல்லவர் ஆட்சியோடு தோன்றிய பக்தி இயக்கத்தால் ஆகம மரபில் கற்களைப் பயன்படுத்தி ஆலயங்கள் அமைக்கும் மரபு தோற்றம் பெற்றது. இதன் செல்வாக்கு சமகாலத்தில் இலங்கையிலும் ஏற்பட்டது. இதற்கு நாயன்மார் பாடல்களில் முதன்மைப்படுத்திப் பாடப்பட்ட திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய ஆலயங்கள் சிறந்த உதாரணங்களாகும்.

ஆயினும் இதற்கு முந்திய ஆகம மரபு சாராத ஆலயங்கள் செல்வாக்கு இழந்ததெனக் கூறமுடியாது. அவை தற்காலம் வரை இலங்கையிலும், தமிழகத்திலும் தொடர்ந்து செல்வாக்குடன் இருந்து வருவதைக் காணலாம். இதற்கு வட இலங்கையில் உள்ள நாச்சிமார், ஐயனார், நாகதம்பிரான், காளி, அண்ணமார், வைரவர், காளகண்டன், முனி, ஊத்தைக்குடியன், காளமுனி, இளந்தாரி முதலான ஆகம மரபு சாராத சிறு தெய்வ ஆலயங்களைக் குறிப்பிடலாம். இவற்றின் இன்னொரு தனித்துவமான வடிவமே வலிகாமத்தில் இளவாலையில் காணப்படும் கூட்டத்தார் கோவிலாகும்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியற் பிரிவு ஆசிரியர்களான இக்கட்டுரை ஆசிரியர், விரிவுரையாளர் செல்வி. சசிதா குமாரதேவன் மற்றும் வீரகேசரி நிறுவன ஊடக இணைப்பாளர் திருமதி. உமா பிரகாஷ் ஆகியோர் இணைந்து வலிகாமத்தில் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த ஆலயங்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது, இளவாலை வசந்தபுரத்தைச் சேர்ந்த திரு. நாகன் என்பவர் தமது கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த 'கூட்டத்தார் ஆலயம்' பற்றிச் சுவைபடக் கூறினார். இப்பெயர் சம கால ஆலய வழிபாட்டில் எமக்கு அதிகம் பரீட்சயமற்றதாக இருந்ததால் அவ்வாலயத்தையும், அப்பெயர் ஏற்பட்டதற்கான காரணங்களையும் ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

ஆயினும் நாம் பார்வையிடச் சென்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் போரின் காரணமாக அங்கிருந்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறிவிட்டதால் அவ்விடங்களுக்கு இலகுவாகப் போக்குவரத்துச் செய்ய முடியவில்லை. பிரதான வீதிகளில் பயணிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி கிராமத்து வீதிப் பயணங்களில் காணமுடியவில்லை. பல குடியிருப்புக்கள் இருந்த இடம் தெரியாது தொலைந்துவிட்டன.

சில குடியிருப்புக்களை அடையாளம் காணமுடியாத அளவிற்குச் சிறிய பற்றைக் காடுகள் வீடுகள் மீதும், வீடுகளைச் சுற்றியும் வளர்ந்துள்ளன. இந்நிலையில் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் மீளக்குடியேறியவர்களுக்கு அரசு, அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒரே வடிவில் அமைத்துவரும் வீடுகளும், வீதிகளும், கல்லூரிகளும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அங்கெல்லாம் பாரம்பரியமாக இருந்து வந்த ஆலயங்களையும், வீடுகளையும், அரச நிறுவனங்களையும் அழிவடையாத நிலையில் பார்ப்பதென்பது அதிசயப் பொருளாகவே இருந்தது.

ஆயினும் சமீபகாலங்களில் அங்கு மீளக்குடியேறிய மக்கள் தமது வாழ்விடங்களைவிடத் தமது பாரம்பரிய வழிபாட்டு ஆலயங்களைப் பாதுகாப்பதற்காகப் புதுப்பித்துக் கட்டுவதில் அல்லது அதேபெயரில் புதிய ஆலயங்களை அமைப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அவ்வாறான ஆலயங்களில் ஒன்றுதான் இளவாலையில் உள்ள 'கூட்டத்தார்' ஆலயமாகும். போர் நடந்த காலத்தில் குண்டுத்தாக்குதலில் அழிவடைந்த ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். பழமை வாய்ந்த மிகப்பெரிய ஆலமரங்களுக்கு கீழே காணப்படும் இவ்வாலயம் ஏறத்தாழ பதினைந்தடி நீளமும், ஆறு அடி அகலமும் கொண்டது.



மேலும் சிறிய கர்ப்பக்கிருகத்தையும், அதன் முன்னால் அந்தராளத்தையும் கொண்டுள்ளது. இவ்வாலயம் அப்பிரதேசக் கடற்கரைப்பகுதில் கிடைத்த கோறல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதன் மூலம் அதன் வரலாற்றுப் பழமையை உணரக் கூடியதாக இருக்கிறது.

தற்போது அந்தராளச் சுவர்களைத்தவிர ஆலயத்தின் ஏனைய பகுதிகள் முற்றாக அழிவடைந்துள்ளன. இதனால் கர்ப்பக்கிருகத்தில் இருந்த தெய்வச் சிலைகளுக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. ஆயினும் கர்ப்பக்கிரகத்தில் இருந்த ஐம்பொன்னாலான தெய்வவிக்கிரகம் ஆலயம் அழிவடைவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ பீடத்தின் மேற்பகுதியுடன் வெட்டி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதை அங்கிருந்து எடுக்கப்பட்ட பீடத்துடன் இணைந்த விக்கிரகத்தின் பாதப்பகுதி உறுதி செய்கிறது. 


இவ்விக்கிரகம் சாதாரண மனித வடிவில் அலங்காரங்களின்றி இரு கைகளிலும் போர்க் கருவிகளுடன் வடிக்கப்பட்டிருந்ததாக அவ்வாலயத்தைப் பராமரித்து வந்த வயோதிபர் ஒருவர் கூறினார். இவ்வாலயத்தில் பல தெய்வங்களுக்குரிய சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றை நினைவுபடுத்தும் வகையில் தற்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் சாதாரணக் கற்களை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். அவற்றுள் நாக வழிபாட்டிற்குரிய ஆலயமாக ஆலமரத்தின் கீழ் உள்ள பாம்பு புற்றுக்கு மக்கள் படையல் இட்டு, தீபமேற்றி வழிபாடு செய்யும் முறை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தார் கோவிலும் யாழ்ப்பாண இராசதானியும்

பேராசிரியர் பொ.இரகுபதி ஆதிகால, இடைக்கால வரலாற்றில் அரசையும், அரசனையும் பாதுகாக்கும் பொருட்டு தன்னுயிரைத் துச்சமாக மதித்து எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்டதே 'கூட்டத்தார் கோவில்' எனக் குறிப்பிடுகிறார். அக்காலத்தில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வணிகர்கள் சென்று வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டது போல் கூலிப்படை வீரர்களும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆட்சியில் இருந்த மன்னர்களுக்காகப் போரிட்டு வீரமரணமடைந்தபோது அவர்களுக்கும் இவ்வாறான கோவில்கள் அமைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறுகிறார்.

இவ்வகையான கோவிலகள் தென்னாசிய நாடுகளில் மட்டுமன்றி ஆபிரிக்கா, மாலைதீவு, இந்தோனேசிய முதலான நாடுகளிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் ஏனைய மாநிலங்களை விடக் கேரள மாநிலத்திலேயே இவ்வகை ஆலயங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் இராஜவேலு தமிழகத்தில் இவ்வாலயம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டளவில் போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு அமைக்கப்பட்ட நடுகல் வழிபாட்டுடன் முதலில் தோன்றியதாகக் கூறுகிறார். தென்னிலங்கையில் சிங்கள மன்னர் ஆட்சியிலும் போர் வீரர்களுக்காக இவ்வகை ஆலயங்கள் இருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு. அவற்றுள் கண்டியில் தலதாமாளிகை பாதுகாக்கும் 'தடிமுண்டன்' காவல் தெய்வம் இவ்வகையைச் சார்ந்ததாகும்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கூட்டத்தார் கோவிலின் தோற்றத்தை நல்லூர் இராசதானி காலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண மன்னர்களது ஆட்ச்சிக்காலத்தில் அவ்வரசுக்குச் சார்பான பல்வேறு படைப்பிரிவுகள் இருந்துள்ளன. அதில் உள்ளுர்ப் படை வீரர்களும், பிறநாடுகளில் இருந்து வரைவழைக்கப்பட்ட படைவீரர்களும் யாழ்ப்பாண மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்து, அவர்கள் மேற்கொண்ட படையெடுப்புக்களில் பங்கெடுத்ததற்கு ஆதாரங்கள் உண்டு.

கி.பி.14ஆம் நூற்றாண்டு கால இலங்கை அரசியல் நிலைவரம் பற்றிக் கூறும் 'ராஜவலிய' என்ற சிங்கள இலக்கியம் இலங்கை அரசர்களுள் யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் பொருள் வளத்திலும், படைப்பலத்திலும் மேன்மைபெற்றிருந்தனர் என்றும், அவர்கள் தென்னிலங்கையில் ஆட்சி புரிந்த அழகக்கோனாரை எதிர்த்து பல இலட்சம் போர் வீரர்களை அனுப்பி வைத்தனர் எனவும் மிகைப்படுத்திக் கூறுகிறது. அந்நூல் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் (1450) கோட்டை அரசன் செண்பகப்பெருமாள் என்னும் ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த போது யாழ்ப்பாண மன்னர்களது படைகளில் கருநாடர், கேரளர், தமிழர், துளுவர், வன்னியர், சோனர் முதலான படைவீரர்கள் பராக்கிரமபாகுவை எதிர்த்துப் போரிட்டதாகவும் மேலும் கூறுகிறது.

16 ஆம் நூற்றாண்டு போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த போது முதலாம் சங்கிலி மன்னன் (1519-1561) அரச தலைநகரைப் பாதுகாக்க 12,000 இற்கு மேற்பட்ட படைவீரர்களை நிறுத்தி வைத்திருந்தான் என்றும், அவன் தனக்கு உதவியாக தென்னிந்தியா குறிப்பாக கன்னட நாட்டிலிருந்து மேலும் படைவீரர்களை வரவழைத்தான் என்றும் போத்துக்கேய ஆசிரியரான குவேறோஸ் சுவாமியார் கூறுகிறார். ஆகவே கூட்டத்தார் கோவில்கள் தோன்றிய வரலாற்றுப் பின்னணியை நோக்கும் போது யாழ்ப்பாணத்தில் அது நல்லூர் இராசதானி காலத்தில் தோன்றியதெனக் கருத இடமுண்டு.

இளவாலை வசந்தபுரக் கிராமத்தில் காணப்படும் கூட்டத்தார் கோவில் வரலாற்றுப் பழமைவாய்ந்ததென்பதை அவ்வாலயத்தைக் கட்டுவதற்குப்பயன்படுத்திய மூலப்பொருட்களில் இருந்து உறுதி செய்ய முடிகிறது. ஆயினும் அவ்வாலயம் யாழ்ப்பாண இராசதானி காலத்தில்தான் கட்டப்பட்டதென்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் அதன் பழமையையும் நிராகரிக்க முடியாது. யாழ்ப்பாண அரசு போத்துக்கேயரால் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் அவ்வரசில் படைவீரர்களாக இருந்தவர்கள் அதே தொழிலைப் பிற்காலத்திலும் தொடர்ந்தனர் எனக் கூறமுடியாது.

அதேபோல் பிற நாடுகளில் இருந்து கூலிப்படைவீரர்களாக வந்து யாழ்ப்பாண மன்னர்களுக்கு உதவியவர்கள் இவ்வரசின் வீழ்ச்சியோடு அனைவரும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பியதற்கும் ஆதாரங்கள் இல்லை. இவர்கள் போத்துக்கேய, ஒல்லாந்தப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தமது போர்த் தொழிலைக் கைவிட்டு பல்வேறு தொழில்களை ஆற்றப் பணிக்கப்பட்டதை போத்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்களில் இருந்து அறியமுடிகிறது.

உதாரணமாக இலங்கையில் சோழர் ஆட்சிக்காலம் தொட்டுப் படைவீரர்களாக இருந்த செங்குந்தர் சமூகம் பின்னர் நெசவுத் தொழில் புரியும் கைக்குளவர்களாக மாறியதையும், வட கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து கூலிபடைகளாக வந்து யாழ்ப்பாண அரசில் இணைந்து கொண்ட கறுப்பின மொறாக்கோ படைவீரர்கள் பின்னர் யாழ்ப்பாணத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டதையும் இங்கு குறிப்பிடலாம். இவ்வாறு யாழ்ப்பாண அரசு காலத்தில் படைவீரர்களாக இருந்த பல இனத்தவரும், நாட்டவரும் காலப்போக்கில் அத்தொழிலைக் கைவிட்டு பிற தொழில்களில் ஈடுபடவேண்டிய சூழல் தோன்றியதால் அவர்கள் ஆற்றிய தொழிலின் காரணமாக குறிப்பிட்ட தொழிலுக்குரிய சாதிப்பெயர் அல்லது சமூகப் பெயர் தோன்றக் காரணமாகியது.

இவர்கள் போர்வீரர்களாக இருந்து பின்னர் பிறதொழிலுக்கு மாறிய போது போர்வீரர்களுக்குரிய கூட்டத்தார் கோவில் பின்னர் குறிப்பிட்ட தொழில் புரிந்த சமூகத்திற்கு அல்லது சாதிக்குரிய கோவிலாக மாறியிருக்கவேண்டும். பேராசிரியர் பொ.இரகுபதி இலங்கைத் தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு மரபாக இருந்து வரும் அண்ணமார், இளந்தாரி முதலான ஆலயங்கள் தொடக்க காலங்களில் போர் வீரர்களுடன் தொடர்புடையதெனக் கூறியிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இதற்கு மேலும் சான்றாக பேராசிரியர் சிவலிங்கராஜா திருகோணமலை, காலி முதலான இடங்களில் உள்ள கூட்டத்தார் கோவில் பிற்காலத்தில் வணிக சமூகத்திற்குரிய கோவிலாக மாறிய வரலாற்றை அடையாளப்படுத்தி இருப்பது இங்கு நோக்கத்தக்கது.



இளவாலையில் கூட்டத்தார் கோவில் அமைந்த வலிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது.

12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது. யாழ்ப்பாண அரசு காலத்தில் ஏற்பட்ட குடியேற்றங்கள் பற்றிக் கூறும் கைலாயமாலை அக்காலத்தில் முக்கிய குடியேற்றங்கள் நடந்த இடங்களாக வலிகாமத்தில் உள்ள மயிலிட்டி, தெல்லிப்பளை, இணுவில், தொல்புரம் ஆகிய இடங்களைக் கூறுகிறது.

யாழ்ப்பாண அரசுகால நிர்வாகத்தில் வலிகாமம் மிகப்பெரிய நிர்வாக மையமாக இருந்ததாகக் கூறும் வைபவமாலை இக்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய இடங்களுக்குமான வணிக, போர்த் தொடர்புகள் வலிகாமத்தில் உள்ள காங்கேசன் துறைமுகம் ஊடாக நடந்தாக கூறுகிறது. இவ்வரலாற்றுப் பின்புலத்தை வைத்து நோக்கும் போது இளவாலையில் அமைக்கப்பட்ட கூட்டத்தார் கோவில் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் அரசனுக்கு விசுவாசமாக இருந்து போரில் வீரமரணமடைந்தவர்களுக்காக முதலில் அமைக்கப்பட்டதெனக் கூறலாம் அவ்வாறு போர்வீரர்களாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் வம்சத்தவர் போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் பிற தொழில்களுக்கு மாறிய போது அவ்வாலயம் குறிப்பிட்ட தொழில் புரியும் சமூகத்திற்கு அல்லது சாதிக்குரிய கோவிலாக மாறியுள்ளதெனலாம். அதன் அடையாளமாக இளவாலைக் கூட்டத்தார் கோவிலைப் பார்க்கலாம்.

தமிழர் வரலாற்றில் ஆலயங்கள் என்றும் அவர்களது பண்பாட்டின் அடையாளமாகவே இருந்துவருகின்றன. அவை பண்பாடு பேணப்படவும், வளர்க்கப்படவும் காரணமாக இருந்து வருகின்றன. அதனால்தான் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் ஆலயங்களை தவிர்த்துவிட்டு அவ்வினத்தின் வரலாற்றை, பண்பாட்டை எழுத முடியாதிருக்கிறது. இன்று தமிழர் இருப்பை அடையாளப்படுத்துவதற்கு அதன் பண்பாட்டு வேர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்து உரத்த குரலில் ஒலிக்கிறது. ஆனால் எமது பண்பாட்டின் தொன்மங்கள் எமது பாரம்பரிய கிராமிய அல்லது ஆகம மரபுசாராத சிறுதெய்வ வழிபாடுகளிலும் உண்டு என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். இன்று ஆலய அமைப்பை, கிரியை முறையை, ஆண்டவன் பெயர்களை மாற்றுவது நாகரிக மாற்றம் என பார்க்கப்படுகிறது.

இதனால் அண்ணமார், நாகதம்பிரான் ஆலயங்கள் சிவன், ஈஸ்வரர் ஆலயங்களாகவும், வைரவர் ஆலயம் ஆஞ்சநேயர் ஆலயமாகவும், கண்ணகி, துர்க்கை ஆலயங்கள் அம்மன் ஆலயங்களாக மாற்றப்பட்டு ஆகம முறைப்படி கிரியைகள் நடாத்தப்படுகின்றன. இந்நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் மீளக்குடியேறிய இளவாலை மக்கள் அழிவடைந்த நிலையில் காணப்படும் தமது கூட்டத்தார் கோவிலை மீண்டும் அதே பெயரில் கட்டிமுடிக்க வேண்டும் எனக் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது.

ஆனால் தமது இருப்பிடத்தையே முறையாக அமைப்பதற்கு பணம் எங்கிருந்து கிடைக்கும் என ஏங்கும் அம்மக்களிடம் இவ்வாலயத்தை எவ்வாறு கட்டிமுடிக்கலாம் என்ற ஆதங்கமும் காணப்படுகிறது. இதை எமது மரபுரிமையைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவர்களும், வசதிபடைத்தவர்களும் கருத்தில் எடுப்பது தமிழர் மரபுரிமையைப் பாதுகாக்கும் பணியாக இருக்கும்.
 


-பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்,
தலைவர்- வரலாற்றுத்துறை,
யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகம்                  http://www.virakesari.lk/article/feature.php?vid=43

0 comments:

Post a Comment

Kindly post a comment.